மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை எதிர்வரும் 2024 பெப்ரவரி 15ஆம் திகதிக்குள் வழங்குவதாக மின்சார சபை அறிவிக்குமென்று, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது. இந்த யோசனை கிடைத்த பின்னர் இது தொடர்பாக மக்களின் கருத்துகள் கேட்டறியப்படுமெனவும், அந்த ஆணைக்குழு தெரிவித்தது.
அதன் பின்னர் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான பரிந்துரை வழங்கப்படுமெனவும், இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரமளவில் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது. இதேவேளை, இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகளை சுயாதீன நிறுவனத்தினூடாக கணக்காய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் நிர்வாக சபையால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுயாதீன கணக்காய்வு நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.