எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் ‘அஸ்வெசும’ சமூக நலன்புரித் திட்ட தொகையை மேலும் அதிகரிக்குமாறு உரிய திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.
இதற்கமைய அடுத்த வருடம் நிவாரணம் பெறும் பயனாளிகளின் தொகை சுமார் 4 இலட்சம் குடும்பங்களாக அதிகரிப்பதுடன், 24 இலட்சம் குடும்பங்கள் நிவாரணம் மற்றும் இதர கொடுப்பனவுகளுக்கு உரித்துடையவர்களாவர்.
இந்தக் கொடுப்பனவுக்கு உரித்துடைய குடும்பங்களில் சிறுநீரக நோயாளர்கள், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் அதற்கு மேலதிகமாக இந்தக் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்தது.
‘அஸ்வெசும’ சமூக நலன்புரித் திட்ட பலன்களை பெறுவோரின் தொகையை அதிகரிக்கவும் இந்தக் கொடுப்பனவுக்கு மேலதிகமாக ஏனைய சலுகைகளை வழங்கவும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்திலிருந்து 207 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி முதல் விண்ணப்பங்கள் வெளியிடப்படுவதுடன், விண்ணப்பப்படிவங்களை கணினி மயமாக்கியதில் கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப தவறு சரி செய்யப்பட்டு புதிய முறை அறிமுகப்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.