மியன்மாரிலிருந்து இந்தியாவின் மணிப்பூர் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இரண்டு கடத்தல்காரர்கள் இந்திய Narcotics Control Bureau அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சுமார் 56 கிலோகிராம் போதைப்பொருள், மியன்மாரிலிருந்து கடல் வழியாக இந்தியாவின் மணிப்பூருக்கு கடத்திக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தமிழகத்தின் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, சென்னையினூடாக கடல்கரைக் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இலங்கைக்கு கடத்தும் திட்டம் இவர்களிடம் இருந்தது. மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) ரகத்தைச் சேர்ந்த இப்போதைப்பொருளின் இலங்கை ரூபா பெறுமதி ஆயிரம் கோடியாகும். யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடத்தல்காரருடன் இந்தியாவின் பிரபல கடத்தல்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக, இந்திய Narcotics Control Bureau அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (Narcotics Control Bureau) நேற்று முன்தினம் அங்கு சந்தேகத்துக்கிடமான போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து 56 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைனை கைப்பற்றியது.
இலங்கைக்கு மெத்தாம்பெட்டமைனை கடத்த முயன்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சந்தேக நபர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதுடன், இவரிடமிருந்து 2 கிலோகிராம் மெத்தாம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டதாகவும், இந்திய Narcotics Control Bureau அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, பெரம்பூரை சேர்ந்த ஒருவரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்து, இவரிடமிருந்து 54 கிலோகிராம் மெத்தாம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர்.