சிவனொளிபாதமலை யாத்திரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) பௌர்ணமி தினத்தோடு ஆரம்பமாவதை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் வழிகாட்டலின் கீழ் ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
சிவனொளிபாதமலை யாத்திரையை கருத்திற்கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக ரயில் சேவைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பு, கோட்டையிலிருந்து பதுளைவரை, பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைவரை, கண்டியிலிருந்து பதுளைவரை பதுளையிலிருந்து கண்டிவரை விசேட ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சிவனொளிபாதமலை யாத்திரை, பாடசாலை விடுமுறை, பண்டிகைக்காலத்தை முன்னிட்டு யாத்திரை மேற்கொள்வோர் மற்றும் பயணம் மேற்கொள்வோரின் நலன் கருதி நேற்று முன்தினம் முதல் இதற்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், ஹட்டன் ரயில் நிலையத்தில் பயணிகள் இளைப்பாறும் மண்டப வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹட்டன் ரயில் நிலையத்திலிருந்து நல்லதண்ணிவரை, நல்லதண்ணியிலிருந்து ஹட்டன் ரயில் நிலையம்வரை இ.போ.ச. பஸ்கள் இணைந்த சேவையை மேற்கொள்ளப்படுவதுடன், விசேட டிக்கெட் கருமபீடங்களும் நிறுவப்பட்டன.
மேலும், நீண்ட விடுமுறையை கருத்திற்கொண்டு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயிலுக்கு மேலதிகமாக ரயில் சேவைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்