இந்த நாட்டில் அதுவும் கொழும்பு 7ல் உள்ள அதி உச்ச பாதுகாப்பு வலயத்தில் உள்ள சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் உயர் அலுவலகங்கள் உள்ளதொரு இடமே பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (பி.எம்.ஜ.சி.எச்) ஆகும். பி.எம். ஜ.சி.எச் இல் உள்ள அலுவலக கட்டடத்தில் வைத்து சொகுசு ஜீப் வண்டிகள் விற்பனை என்று பொய்யான தகவல்களை விளம்பரப்படுத்தி கடந்த 20ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இச் செய்தி இலங்கை முழுவதும் ஊடக நிறுவனங்கள் வழியாக பரவியதும் இலங்கை மக்கள் கொழும்பு 7இல் பாதுகாப்பற்றதொரு பிரதேசமாக பி.எம்.ஜ.சி.எச் உம் மாறிவிட்டதா? என மூக்கில் விரல் வைத்த வண்ணம் ஆச்சரியமாகக் கேட்கின்றனர்?
இந்தக் கொள்ளைச் சம்பவத்தினை வைட் கொலர் கொள்ளை என்பர். கோட் சூட் அணிந்து கோடிஸ்வரர் போல நடித்த சந்தேகநபர், சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனக்கு அலுவலகம் உள்ளது எனப் பொய்யொன்றை அள்ளி வீசி, அதனை நம்ப வைத்து வாடிக்கையாளரை ஏமாற்றி பட்டப்பகலில் அடித்த கொள்ளையே இது, அதுவும் நான்கரைக் கோடி ருபா அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உரிய நபரிடம் அவரது ஜீப் வண்டியை கொடுக்காமல் ஏமாற்றி, கோட் சூட் அணிந்து சூட்கேசில் பணத்துடன் கொள்ளையடித்த நபர் பறந்து சென்று தலைமறைவாகிவிட்டார்.
இது விடயமாக கொழும்பு 7 கறுவாத் தோட்ட பொலிஸாரும், குற்றத்தடுப்பு பொலிஸாரும் மேலதிக விசாரனைகளை மேற் கொண்டு வருகின்றனர். குறித்த நபர் வெளிநாடு செல்லவோ அல்லது நாட்டை விட்டு தப்பி ஓடவோ முடியாதெனவும் குற்றத்தடுப்பு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இம் மண்டபம் நாளாந்தம் 10 ஆயிரம் பேர் வந்து போகும் ஓரு பாதுகாப்பான சர்வதேச பிரசித்திபெற்றதொரு பிரதேசமாகும். அங்கு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம் மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கும் தனியானதொரு பொலிஸ் பிரிவும் உண்டு. அத்துடன், இராணுவப் பிரிவு, விமானப்படை, சிவில் பாதுகாப்பு என பல்வேறு பந்தோபஸ்து பிரிவினரும் அங்கு கடமையில் உள்ளனர். அத்துடன் பொலிஸ் ஆணைக்குழு, பல்வேறு ஜனாதிபதி ஆணைக் குழுக்கள், விமானப் போக்குவரத்துப் பிரிவுகள், வங்கிகள் சர்வதேச கற்கை நெறிகள், சினிமா மண்டபம், கூட்ட மண்டபங்கள் என பல்வேறு பட்ட அலுவலகத் தொகுதிகளும் அங்கு காணப்படுகின்றன. சுமார் 14க்கும் மேற்பட்ட உள், வெளி வழிப்பாதைகள் அங்கு காணப்படுகின்றன. ஒவ்வொரு கடவையிலும் பொலிஸ் பிரிவுகளும் உள்ளன. சீ.சீ.ரீவி கமராக்களும் அங்கு காணப்படுகின்றன காலஞ்சென்ற சிறிமாவோ பண்டாரநயாக்க நாட்டின் தலைவியாக இருந்த காலத்தில் சீன அரசாங்கம் 1970களில் நிர்மாணித்து அன்பளிப்புச் செய்த சர்வதேச மாநாட்டு மண்டபமே இதுவாகும். இம் மண்டபத்திற்கென பண்டாரநாயக்க குடும்ப உறுப்பினர்கள் பரிபாலன சபைத் தலைவர்களாக உள்ளனர். தற்போதைய பரிபாலன சபைக்கு தலைவியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவே உள்ளார்.
மேற்படி சந்தேக நபர் சொகுசு வாகன விற்பனைக் கம்பனியின் முகாமையாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தி இரண்டு சொகுசு ஜீப் வாகனங்கள் விற்பனைக்குள்ளதாகவும் சமூக ஊடக வலையத்தளங்கள் ஊடாக விளம்பரம்படுத்தியுள்ளார். இதனை அறிந்த மாளிகாவத்தை மற்றும் மட்டக்குளியவைச் சேர்ந்த இரு நபர்கள் சமூக வலைத் தளம் ஊடாகவே வியாபார பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போலி நிறுவனம் பி.எம்.ஜ.சி.எச் இல் ரீகல் சேல் தனியார் லிமிடெட் எனும் பெயரில் உள்ளது. அங்கு கடந்த 20ஆம் திகதி மு.ப 12.00 மணிக்கு வரும்படியும் சந்தேக நபர் வாகன விற்பனை தொடர்பில் தன்னைத் தொடர்புகொண்டவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் . அவர்கள் பணமாகவே நான்கரை கோடி ரூபாவை எடுத்து வந்து அவர் இருந்த அறைக்குக்குள் சென்று கையளித்துள்ளனர். ஆனால் அந்த முகாமையாளர் பின் கதவால் பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
அந்த அலுவலகத்தில் 9 பேரை அச் சந்தேக நபர் பணிக்கு அமர்த்தியுள்ளார். அத்துடன் பி.எம்.ஐ.சி.எச் இல் 2 அறை களை கம்பனி அலுவலகங்களுக்காக வாடகை அடிப்படையில் பெற்றுள்ளார். இவர் இவ் அலுவலகங்களை கடந்த 11ஆம் திகதியே வாடகைக்கு எடுத்துள்ளார். தாம் பணம் கொடுத்த நபரை நீண்ட நேரமாகக் காணததால் ஜீப் வாங்க வந்தவர்கள் பி.எம்.ஐ.எச் ல் உள்ள பொலிஸில் முறையிட்டுள்ளனர். அதன் பின்னர் பொலிஸார் சீ.சீ.ரீ.வி கமாராவை பரிசீலித்த போது சந்தேக நபர் பின் கதவால் பணப் பெட்டியுடன் தலைமறைவாவதைக் காணக்கூடியதாக இருந்துள்ளது. அத்துடன் அங்கு கடமையில் இருந்த 9 பேரையும் கறுவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி நபரைத் தேடி குற்றத் தடுப்புப் பிரிவினர் வலைவீசியுள்ளனர். அந்நபர் பதுளையில் கலகெதர எனும் இடத்தினைச் சேர்த்தவர் என்றும் 51 வயதான அவரது பெயர் ரத்னாயக்க முதியான்சலாகே அசங்க ரத்னாயக்க என்றும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர் வெளிநாடு செல்ல முடியாதவாறு விமான நிலையத்திற்கும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் மேற்படி குற்றவாளியை கைது செய்வதற்காக மேலும் தகவல்களை பெற்று விசாரணைகளை மேற் கொண்டு வருவதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர் .
நாம் எ ந்தப் பொருளையும் , அது சிறியதோ அன்றிப் பெரியதோ எதுவாக இருப்பினும் அதன் விற்பனையாளர் அதன் விலை மற்றும் இன்னபிற தகவல்களை நன்கு சோதித்த பின்பே கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட வேண்டும். கண்மூடித்தனமாக எவரையும் நம்பி ஏமாறக் கூடாது என்பதற்கு
இக்ெகாள்ளைச் சம்பவம் சிறந்த உதாரணம். கடந்த காலங்களில் கொழும்பில் நடைபெற்ற சக்திவிதி பண மோசடி, பிரபல நடிகை மேற்கொண்ட பண மோசடி, போன்ற விடயங்களை நாம் ஒரு படிப்பினையாகக் கொள்வோம்.
அஷ்ரப் ஏ சமத்