இஸ்ரேலை ஆதரிக்கும் துருக்கி அரசாங்கத்தின் போக்கை கண்டித்து ஆவேசமாக பேசிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் பிட்மெஸ், மாரடைப்பு காரணமான உயிரிழந்துள்ளார். மேற்காசிய நாடான துருக்கியில், ஜனாதிபதி எர்டோகன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. துருக்கியின் அண்டை நாடான, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வருகிறது.இருப்பினும்,இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துருக்கி பின்பற்றி வருகிறது.
இது தொடர்பாக எதிர்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன், துருக்கி பாராளுமன்றத்தில் நடந்த பட்ஜட் விவாதத்தில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் பிட்மெஸ் பங்கேற்று ஆவேசமாக பேசினார்.
அப்போது, ‘இஸ்ரேலுக்கு கப்பல்களை அனுமதிக்கிறீர்கள்; அதனை வர்த்தகம் என வெட்கம் இல்லாமல் கூறுகிறீர்கள். நீங்களும் இஸ்ரேலின் கூட்டாளி தான். காசா மீது இஸ்ரேல் வீசும் ஒவ்வொரு வெடிகுண்டுக்கும் உங்கள் பங்கு உண்டு’ என பேசிவிட்டு, இறங்குகையில் மயக்கமடைந்து சரிந்தார்.
அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்ததில், இதயத்துக்கு செல்லும் இரத்தக் குழாயில் இரு இடங்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சையில் இருந்த அவர், நேற்று முன் தினம் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.