நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்து வருவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு சர்வதேசத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், முதலாவது மீளாய்வுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் இதனைப் பறைசாற்றுகின்றது.
48 மாத காலத்தைக் கொண்ட இத்திட்டத்தில் இரண்டாம் தவணையாக 337 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதற்கான இணக்கப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் திருப்திகரமாக அமைந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருப்பதானது நாடு சரியான பாதையை நோக்கி நகர்ந்து வருகின்றது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
தாம் மேற்கொண்ட மீளாய்வில் வரி வருவாயை அதிகரிக்கும் விடயம் தவிர்ந்த ஏனைய அனைத்துக் குறிகாட்டி இலக்குகளும் ஜுன் மாத இறுதியில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒக்டோபர் மாத இறுதியளவில் எட்டப்பட வேண்டிய கட்டமைப்புசார் அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஆளுகையினைக் கண்டறிகின்ற அறிக்கையை அதிகாரிகள் வெளியிட்டு, ஆசியாவில் பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆளுகையினைக் கண்டறிகின்ற செயற்பாட்டினை மேற்கொண்ட முதலாவது நாடாக இலங்கையினைத் தடம்பதிக்கச் செய்திருப்பதையும் சர்வதேச நாணய நிதியம் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
படுகடன் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையினை மீட்டெடுத்தல், அரசிறையினை அதிகரித்தல், ஒதுக்குத் தாங்கியிருப்புக்களை மீள்கட்டமைத்தல், பணவீக்கத்தினைக் குறைத்தல் மற்றும் நிதியியல் உறுதிப்பாட்டைப் பாதுகாத்தல் என்பவற்றை நோக்கி அதிகாரிகள் பாராட்டத்தக்க முன்னேற்றத்தினை மேற்கொண்டிருப்பதாக சர்வதே நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் முதலாவது தவணை ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு கடன் மறுசீரமைப்பில் இணக்கப்பாடு அவசியம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், கடந்த வாரம் சர்வதேச கடன்படுனர்களும் கடன்மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்தனர்.
‘உத்தியோகபூர்வ கடன்வழங்குநர் குழு மற்றும் சீனாவின் ஏற்றுமதி- இறக்குமதி வங்கி என்பவற்றுடனான படுகடன் கையாளல் குறித்த இலங்கையின் கோட்பாட்டு ரீதியிலான உடன்படிக்கைகள் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி இலக்குகளுடன் இசைந்து காணப்படுகின்றன. அவை இலங்கையின் படுகடனை நிலைபேறான பாதையை நோக்கிச் செலுத்துவதில் முக்கியமானதொரு மைல்கல்லாகும்.
உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை விரைவாக நிறைவு செய்தல் மற்றும் கையொப்பமிடுதல் என்பன முக்கியமானதொன்றாகும். ஒப்பிடத்தக்க நியதிகள் தொடர்பில் வெளிநாட்டுத் தனியார் கடன்வழங்குநர்களுடன் தீர்மானமொன்றினை எட்டுதலுடன் இணைந்து உடன்படிக்கைகளின் காலந்தவறாத நடைமுறைப்படுத்தலானது இலங்கையின் படுகடன் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையினை நடுத்தர காலத்தில் மீட்டெடுக்க வேண்டும்’ என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கெஞ்சி ஒகாமுரா தெரிவித்திருந்தார்.
முழுமையான மற்றும் விரைவான மீட்சியினை நிச்சயப்படுத்துவதற்கு மறுசீரமைப்பு உத்வேகத்தினையும் மறுசீரமைப்புக்களின் வலுவான உரித்தினையும் நீடித்துநிலைபெறச் செய்வதானது மிக முக்கியமானதொன்றாகும்.
அரசிறைத் திரட்சியினை மேம்படுத்தல், செலவினங்களுடனான வலு விலையிடலை ஒத்திசைவாக்குதல், சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்களை வலுப்படுத்தல், வெளிநாட்டுத் தாங்கியிருப்புக்களை மீளுருவாக்குதல், நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல், ஊழலை ஒழித்தல் மற்றும் ஆளுகையினை மேம்படுத்தல் போன்றவற்றுக்கு முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் அரசிறை வருமானத்தை அதரிக்க வேண்டியதன் அவசியத்தை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்றப்படாத இலக்குகளில் வரி வருமானமே காணப்படுகிறது. இதனை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாட்டை மீட்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு முக்கியமானதாக அமையும் என்று வலியுறுத்தியுள்ள சர்வதேச நாணய நிதியம், பணவீக்க இலக்கிடல் முறையில் மத்திய வங்கி தொடர்ந்தும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.
‘வங்கி மீள்மூலதனவாக்கத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் மற்றும் நிதியியல் மேற்பார்வை மற்றும் நெருக்கடி முகாமைத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தல் என்பன நிதியியல் துறை உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்கு அத்தியாவசியமானவை. சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்களை மேலும் வலுப்படுத்தல் மற்றும் சமூகச் செலவிடுதலைப் பேணுதல் என்பன வறிய மற்றும் பாதிப்படையக் கூடியவர்களைப் பாதுகாப்பதற்குத் தொடர்ந்தும் இன்றியமையாதது’ என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கெஞ்சி ஒகாமுரா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இந்த அறிவிப்பானது இக்கட்டான நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அங்கீகாரமாகவும், உத்வேகமாவும் அமைந்துள்ளன. இலங்கை அரசாங்கத்தின் அரசிறை அதாவது வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற விடயத்தை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் கோடிட்டுக் காட்டியுள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இதற்கான நடவடிக்கையை ஏற்கனவே எடுத்துள்ளது. குறிப்பாக சேர்பெறுமதி வரி 15 வீதத்திலிருந்து 18 வீதமாக எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து அதிகரிக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் சேர்பெறுமதி வரி அல்லது வற் வரி விலக்களிக்கப்பட்டிருந்த பல பொருட்களுக்கு வரி விலக்களிப்பு நீக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது மேலும் சுமையை அதிகரிப்பதாக இருந்தாலும், நாட்டைப் பாதிப்பிலிருந்து மீட்பதற்கு இன்றியமையாத நடவடிக்கையாக அமைகிறது. இலங்கை வரி விடயத்தில் நீண்டகாலமாக சரியாகச் செயற்பட்டிருக்காமையே இந்த நிலைமைக்குக் காரணமாகும். உறுதியான வரிக்கொள்கையொன்று இல்லையென்பது கடந்த பல வருடங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டு வந்தபோதும், அவ்வப்போது ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் தம்மை ஜனரஞ்சகமாக்கிக் கொள்வதற்காக வரி என்ற விடயத்தை ஆயுதமாகப் பயன்படுத்தினர். உதாரணமாகக் கூறுவதாயின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், தமது அரசியல் நிலைப்பை வெளிக்காட்டுவதற்காக வற் வரியை குறைத்தது. நாடு படுமோசமாகப் பாதிக்கப்படுவதற்கு இது பிரதான காரணமாக அமைந்தது.
இவ்வாறான பின்னணியில் விரும்பியோ விரும்பாமலோ அரசாங்கம் தனது வரி வருவாயை அதிகரிக்க வேண்டிய கடப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த வலயத்தில் ஒப்பிடுகையில் இலங்கையே குறைந்த வரி அறவீட்டைக் கொண்ட நாடாக இருக்கின்றது. வரி வருவாயைப் பொறுத்தவரையில் இலங்கையானது நேரடி வரிகளைவிட மறைமுக வரிகளையே அதிகம் கொண்டுள்ளது.
அது மாத்திரமன்றி, கடந்த காலங்களில் செல்வந்தர்கள் மற்றும் அதிக பணமீட்டுபவர்களுக்கு ஏற்ற வகையில் வரி அறவீடுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக அனைத்து மட்டங்களிலும் உள்ளவர்களுக்கு சமமான வரி அறவீட்டையே மேற்கொண்டு வந்தது. இதனால் வருமானம் குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதுடன், நடுத்தர வருமானம் ஈட்டும் தரப்பினரும் சவால்களுக்கு முகங்கொடுத்தனர்.
இவ்வாறான நிலையில், அரசாங்கம் தற்பொழுது வற் வரியை அதிகரிக்க எடுத்திருக்கும் நடவடிக்கையும் விலைவாசி அதிகரிப்புக்கு வழிகோலும் என்பது பலருடைய கருத்தாக இருக்கின்றது. எனவே, நாடு பொருளாதார ரீதியில் ஓரளவுக்கு ஸ்திரமான நிலையை எட்டியதும் இவ்வாறான வரி முறைகள் மறுசீரமைக்கப்பட்டு நாட்டுக்கு நிலையான வரிக் கொள்கையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதேநேரம், அரசாங்கம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கும் மறுசீரமைப்புக்களை எதிர்க்கட்சிகள் தமது சொந்த அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப் பார்க்கின்றன. இதனால் மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை அவர்கள் உருவாக்கிவிடுகின்றனர். இவ்வாறான தனிப்பட்ட அரசியல் காய்நகர்த்தல்கள் ஒட்டுமொத்த நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்துவதைவிட தேவையற்ற குழப்பங்களுக்கே வழிவகுக்கும்.
இது இவ்விதமிருக்க, 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு கடந்த நவம்பர் 21ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது மதிப்பீடு கடந்த புதன்கிழமை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்திருந்தார். இதற்கு அமைய 41 மேலதிக வாக்குகளால் வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
மக்களுக்குப் பெருமளவு மானியங்களை வழங்கும் வரவுசெலவுத்திட்டமாக இது அமையாத போதும், நீண்டகால ஸ்திரத்தன்மையை நோக்காகக் கொண்டு இதனை அரசாங்கம் தயாரித்துள்ளது. அடுத்த வருடம் நடைபெறக்கூடிய தேர்தல்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டம் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றபோதும், அவ்வாறான முன்மொழிவுகள் எதனையும் இதில் காணக்கூடியதாக இல்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நீண்டகாலக் கொள்கைத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில், கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்னேற்றத்தை எட்டுவதற்கான முன்மொழிவுகளைக் கொண்டதாக இது அமைந்திருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வரவுசெலவுத்திட்டத்துக்கு அரசாங்கம் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையும் கிடைக்கவுள்ளது. அரசாங்கம் முன்னெடுத்துள்ள மறுசீரமைப்புப் பணிகளுக்கு இவை இரண்டும் நிச்சயம் பக்கபலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எதுவாக இருந்தாலும், ஊழல் மோசடிகள் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு மக்களின் நம்பிக்கையை வெல்லக் கூடிய வகையில் ஊழல் ஒழிப்பு விடயத்தை அரசாங்கம் கையாளுமாயின் நாட்டை அனைவரும் ஒன்று சேர்ந்து கட்டியெழுப்ப முடியும் என்பதே மக்களின் நம்பிக்கையாகும்.