டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அடிப்படை விடயங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க இந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவுக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
400 கோடி (04 பில்லியன்) ரூபா இந்திய நிதிப் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கை ரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிரளவியல் (Biometric) தகவல்களின் தரவுகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
முன்னதாக, டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது 76 உயிரியல் தரவுகளின் விபரங்கள் கோரப்பட்டன. ஆனால் புதிய டிஜிட்டல் அடையாள அட்டையைப் பெற ஆறு உயிரியல் தரவுகளின் விபரங்கள் மட்டுமே தேவை.
இதன்படி, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் வழங்க வேண்டும்.
புதிதாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும். ஏனையோருக்கு அதன் பின்னர் கட்டம் கட்டமாக டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதே அரசின் நோக்கமாகுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.