இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானத்துக்கு வந்துள்ளன.
மொரிஷியஸில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாட்டில் இத்தீர்மானம் எட்டப்பட்டது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொழும்பு பாதுகாப்பு அறிக்கையும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது. இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் கடல் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, மேற்படி பிரேரணையை முன்வைத்துள்ளார்.
மாநாட்டில் பங்குபற்றிய அனைத்து நாடுகளும் அதற்கு இணங்கியுள்ளன. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சகல நடவடிக்கைகளும் இலங்கையை மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படவுள்ளன. இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகம் எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்டு, பின்னர் நிரந்தரக் கட்டடத்தில் நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.