லக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பின் தகவல்களின் படி உலகில் வாழ்கின்ற சுமார் 8 பில்லியன் மக்களில் 2.2 பில்லியன் மக்கள் சுத்தமான மற்றும் போதுமான குடிநீர் இன்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாவது உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்று பேரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை.
இன்னும் சில வருடங்களில் இந்த 2.2 பில்லியன் மக்களுடன் யாழ்ப்பாண மக்களும் இணைந்துகொள்வார்கள் என்ற நிலைமையை தற்போது தடுத்திருக்கிறது பாலியாறு. பாலியாறு குடிநீர் திட்டமானது வடக்கிற்கு தண்ணீர் வழங்குகின்ற ஒரு பாரிய திட்டமாக காணப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களுக்கும் பாலியாறு குடிநீர் திட்டம் மூலம் நீர் வழங்கல் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஏனைய நான்கு மாவட்டங்களில் உள்ள சனத் தொகையை விட யாழ்ப்பாணத்திலேயே அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அங்கு சுமார் 6 இலட்சத்து 26 ஆயிரம் பேர் உள்ளனர். இங்குள்ள மக்கள் முழுக்க முழுக்க தங்களது நீர்த் தேவையினை நிலத்தடி நீரின் மூலமே பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரோ பாதுகாப்பற்றதாக மாறிச்செல்கிறது. குடாநாடு என்பதனால் நன்னீர் உவராக மாறும் தன்மை அதிகரித்து செல்வது, அதிக சனத்தொகை என்பதனால் அடர்த்தி மிக்க குடியிருப்புகள் காரணமாக நிலத்தடி மாசுப்படுதல் (மலக்கழிவுகள் நிலத்தடி நீரில் அதிகம் கலந்திருப்பது), நிலத்தடி நீர் குறைவடைந்து செல்வது போன்ற நிலைமைகளால் யாழ்ப்பாணத்தின் குடிநீர் என்பது இன்னும் சில வருடங்களில் கேள்விக்குள்ளாகும் நிலையிலேயே இருக்கிறது.
வடக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களில் குளங்கள், ஆறுகள் என்பன அதிகமாக காணப்படுகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் தங்களது நீர்த்தேவைக்காக நிலத்தடி நீரை மட்டுமன்றி ஆறுகள், குளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமை இல்லை. இதன்காரணமாக யாழ்ப்பாணத்தின் குடிநீர் உள்ளிட்ட நீர்த்தேவை தொடர்பில் பல காலங்களாக அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணத்தின் நீர்த்தேவையினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ள போதும் அவற்றின் சாதக, பாதக காரணிகளை கருத்தில் கொண்டு பாலியாறு திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரசு முன்னாய்ந்த நடவடிக்கைகளுக்கு 250 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
பாலியாறு
இலங்கையின் வடக்கே வட மாகாணத்திற்குள் காணப்படுகின்ற ஓர் ஆறு. 68.4 கிலோ மீற்றர் நீளமுள்ள பாலியாறு வவுனியா மாவட்டம் புளியங்குளத்தில் ஆரம்பித்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை கடந்து கடலுக்குள் கலக்கிறது.
பாலியாறு குடிநீர் திட்டம்
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாலியாற்றை வழி மறித்து 4.6 கிலோமீற்றர் நீளமும், 41 அடி உயரமும் கொண்ட மண் அணைக்கட்டு அமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ள நீர்த்தேக்கமாகும்.
1 இலட்சத்து 18363 ஏக்கர் (479 சதுர கிலோ மீற்றர்) பரப்பளவு நீரேந்து பிரதேசங்களில் வருடந்தோறும் 1317 மில்லி மீற்றர் சராசரி மழைவீழ்ச்சியிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற நீரைக்கொண்டு 2562 ஏக்கர் பரப்பளவில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. தற்போது இவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற மழை நீரானது வருடத்திற்கு 151 எம்சிஎம் அளவு எந்தவித பயனும் இன்றி வீணாக கடலில் சேர்கிறது.
பல மில்லியன் ரூபா செலவில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வருடம் ஒன்றுக்கு 41.2 எம்சிஎம் அளவு நீர் குடிநீருக்கு பெறப்படும் அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் மீற்றர் கியூப் நீர் குடிநீருக்காக பெறப்படும்.
பயன்பெறும் பிரதேசங்கள்
அமைக்கப்படவுள்ள பாலியாறு குடிநீர் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாண மாவட்டமும், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவும், மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளும், இத்திட்டத்தின் மூலம் குடிநீர் பெறவுள்ளன.
திட்டத்தின் ஏனைய நன்மைகள்
பாலியாறு குடிநீர் திட்டத்தினால் பின்வரும் நன்மைகள் ஏற்படும் என திட்டம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
358 ஹெக்ரெயருக்கு விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசனம்.
வருடம் ஒன்றுக்கு 800,000 மெட்றிக்தொன் மீன் பிடி.
சுற்றுலா பயணிகள் வருகையின் மூலமான வருமானம்.
மிதக்கும் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி.
சுற்றுச்சூழல் நன்மை கருதி செக்கனுக்கு 08 மீற்றர் கியூப் நீர் வெளியேற்றப்படுகின்றமை.
நிலம் உவராகி வருகின்றமையினை தடுத்தல்.
நீரை தேக்குவதன் மூலம் ஏற்படும் மக்களின் குடிபெயர்ச்சி இன்மை.
திட்டத்தின் சவால்கள்
பாலியாறு திட்டம் நடைமுறைக்கு வருகின்ற போது நீர் சேமிக்கப்படுகின்ற 2562 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்ற அடர்த்தியற்ற ஒதுக்கப்பட்ட காடுகள் நீருக்குள் சென்றுவிடுகின்ற நிலைமை ஏற்படும்.
நீர்த்தேக்க பகுதிகள் ஒதுக்கப்பட்ட காடுகள் என்பதனால் வனவளத் திணைக்களத்தின் அனுமதி பெறுவது மற்றும் இப் பாரிய முதலீட்டுத் திட்டத்திற்கான நிதி மூலங்களை கண்டுபிடித்தல் என்பன சவால்களாகக் கருதப்படலாம்.
வடக்கு குடிநீருக்கான பொருத்தமான திட்டம்
இந்தத் திட்டமானது ஒப்பீட்டு ரீதியில் வடக்கின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு பொருத்தமான திட்டமாக காணப்படுகிறது. யாழ்ப்பாணத்துக்கான குடிநீருக்கு ஆறுமுகம் திட்டம், இரணைமடு திட்டம், கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம், வடமராட்சி நீர்த்தேக்கம், பாலியாறு திட்டம் என பல திட்டங்கள்ஆராயப்பட்டன. ஆனால் அந்த திட்டங்களில் எல்லாம் பல்வேறு சவால்கள், பிரச்சினைகள் ஏற்பட்டன. நடைமுறைப்படுத்துவதில் சமூக பொருளாதார நெருக்கடிகள் உருவாகின.
ஆனால் பாலியாறு திட்டத்தின் மூலம் அவ்வாறான எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை, அனைத்து தரப்பினரதும் கருத்துக்களும், உள்வாங்கப்பட்டு அவர்களது ஒப்புதலுடன் இத்திட்டம் தயாரிக்கப்பட்டதே இதன் வெற்றியாகும். பாலியாறு திட்டத்தின் ஊடான நீர் பங்கீட்டில் கூட எவ்வித சவால்களும் உருவாகவில்லை. ஆகவே பாலியாறு திட்டம் குடிநீருக்கு தவிச்ச வடக்குக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் வழங்கும் ஒரு பொருத்தமான திட்டமே.
மு.தமிழ்ச்செல்வன்