அச்சு ஊடகத்தின் தனித்துவமான பாத்திரங்களில் ஒன்று நாட்டின் கலாசார மற்றும் கலை உருவாக்கம் தொடர்பில் ஒரு பிரதிநிதியாக முன்நிற்பதாகும். இலக்கியக் கலைஞர்களுக்கு நட்புறவுத் தளத்தை உருவாக்குவதும் ஒரு பாத்திரமாகும். இதில் தினமின பத்திரிகை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செய்திருக்கும் அளப்பறிய சேவைகள் அளவிடமுடியாதவை. குறிப்பாக தனது மொழியைப் பாதுகாக்கும் பணியோடு நின்றுவிடாத தினமின, சிங்கள மொழியின் தொடர்பாடல் திறனை வளர்ப்பதிலும் தனித்துவமான பங்கை ஆற்றியுள்ளது.
நாளிதழ்களுக்கு ஏற்ற வழியைத் தயாரித்துக் கொண்டு பத்திரிகையின் துல்லியத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு பொறுப்புடன் நடந்து கொண்டதன் காரணமாக சிங்கள எழுத்து விதிகள் மற்றும் பாணிக்கான முன்மாதிரிகளை வழங்குவதற்கு இந்தக் காலம் முழுவதற்கும் தினமினவினால் முடிந்ததுள்ளது. இதன் காரணமாக, மொழிப் பயன்பாடு பற்றிய விவாதங்களில் எந்தப் பிரிவினருக்கும் சாதகமாக இல்லாமல், அந்த அனைத்து மொழி உரையாடல்களுக்கெல்லாம் ஒரு சிறந்த தளமாக மாற முடிந்தது. முக்கியமாக சிங்கள இலக்கியத்தின் முன்னோடி மொழியியலாளர்கள் மற்றும் மொழியை நேசிக்கும் பல ஊடகவியலாளர்கள் ஆரம்பம் முதல் தினமினவில் பணியாற்றி வருகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. தினமினவின் முன்னாள் ஆசிரியர் எச். எஸ். பெரேரா, தொடன்துவே தர்மசேன பண்டிதுமா, எம். சி. எப். பெரேரா, அலக்ஸான்டர் வெலிவிட்ட, பியசேன நிஸ்ஸங்க, மார்டின் விக்ரமசிங்க, விக்டர் டி. லெனரோல், டீ. டப்ளிவ். சேனாதீர, டீ. எப். காரியகரவன, பீ. ஏ. சிரிவர்தன, டீ. பீ. பெரமுனேதிலக, தர்மபால வெத்தசிங்க, சுதாஸ் மாசகோரள, எல்பர்ட் வெலிவிட்ட, அனந்தபிரிய குடாதிகி, விமல் அபேசுந்தர போன்றோர் அவர்களுள் சிலராகும்.
1950-ஆம் 60 ஆம் ஆண்டுகளில் தினமின வாசகர்களிடையே அதீத பிரபல்யத்தை வெற்றி கொள்வதற்கு அதன் இலக்கிய பங்களிப்புகள் முக்கிய காரணமாக அமைந்தது என்பது இரகசியமானதல்ல. புதிய எழுத்தாளர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் பல்வேறு படைப்புகளுக்கு அதில் தாராளமாக இடம் ஒதுக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் அப்பத்திரிகையில் எழுதியவர்களிடையே அதீத தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள் பலர் உள்ளனர்.
அக்காலப்பகுதியில் பிரபல்யமான இலக்கிய அங்கமாக விளங்கிய கவிதை, -சிறுகதைகளைச் சிங்கள வாசகரிடம் கொண்டு சேர்ப்பதில் தினமின அளவிட முடியாத பணியினையும் செய்தது. ஆரம்ப காலத்தில் மேற்கத்திய இலக்கியப் பண்புகள் நிரம்பிய சிறுகதைகள் நாளிதழ்களில் பிரசுரிக்கப்படாத நிலையில் அதற்கான முதல் அடியை எடுத்தது தினமினவாகும். 1924ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் முதல் சிறுகதை – ‘அபிராஹாச’ தினமினவில் பிரசுரமானது. அப்போது ஒவ்வொரு சனிக்கிழமையும் “சனி தின கதாந்தர” என்ற சிறுகதை வெளியாகியது.
பிற்காலத்தில் சிறுகதை எழுத்தாளராக சிறந்து விளங்கிய தினமினவின் உதவி ஆசிரியரான ஜி.பி. சேனநாயக்கா இலக்கியத் துறைக்கு பங்களித்ததும் தினமினவின் ஆசிரியராக இருந்த விக்கிரமசிங்கவின் தலையீட்டின் ஊடாகவாகும்.
விருது பெற்ற நாவலாசிரியரும் தொலைக்காட்சி நாடக எழுத்தாளருமான சோமவீர சேனாநாயக்க, மொழிபெயர்ப்பாளர் கே. ஜி. கருணாதிலக்க, மூத்த எழுத்தாளர் சோமாதேவி பரண யாப்பா, சுனில் மாதவ பிரேமதிலக்க, விருது பெற்ற எழுத்தாளர் பந்துபால குருகே போன்றோர் தினமினவின் வழியில் வந்தவர்களாகும்.
விருது பெற்ற கிவியர தயாசேன குணசிங்க, தனது அபூர்வ கவிதைகளை முதன் முதலாக வாசகர் உலகிற்கு வழங்கியது தினமின உதவி ஆசிரியராக இருந்த சமயத்திலாகும். ஜாம்பவான்களான மீமன பிரேமதிலக, எச். எம். குடலிகம, சிசிரகுமார மாணிக்காராச்சி மற்றும் கௌடானே பியதாச பெரேரா, தயா சோமசிறி போன்றவர்களும் தினமினவை ஒளிரச் செய்த ஏனைய மூத்த கவிஞர்களாகும். முன்னோர்களின் வழியைப் பின்பற்றிய பல கவிஞர்கள் தினமினவில் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். தினமினவின் முன்பக்கத்தை அலங்கரித்த பெரும்பாலோர் சிறந்த பாடல்களின் அற்புதமான வரிகளுக்குச் சொந்தக்காரர்களாகும். தெல்தோட்டை சந்திரபால, தர்மசிறி கமகே, டபிள்யூ. ஏ. அபேசிங்க, திலகரத்ன குருவிட்ட பண்டார, கலாநிதி அஜந்த ரணசிங்க, சமன் சந்திரநாத் வீரசிங்க போன்றவர்கள் அவர்களில் ஒரு சிலர் மாத்திரமாகும்.
தினமினவிலிருந்து தோன்றிய மாணிக்கங்களாக சிறப்பானவர்கள் பலர் காலத்திற்குக் காலம் பல்வேறு நிகழ்ச்சிகளின் ஊடாக வெளிவந்து இந்த நாட்டில் அறிவுசார் உரையாடலுக்கு புதிய உயிர் கொடுத்ததை இந்த தருணத்தில் நாம் நினைவில் கொள்ளாவிட்டால் அது தவறாகும். பேராசிரியர் விமல் திஸாநாயக்க, பேராசிரியர் ஆனந்த குலசூரிய, பேராசிரியர் கே. என். ஜயதிலக, பேராசிரியர் அஜந்த ஹப்புஆராச்சி, கலாகீர்த்தி எட்வின் ஆரியதாச ஆகியோர் அவர்களில் சிலராகும்.
பின்னாளில் தலைசிறந்த பல்கலைக்கழக விரிவுரையாளராக விளங்கிய பேராசிரியர் எம். எச். குணதிலக்க தினமின சினிமா பக்கத்தின் ஸ்தாபகராக வரலாற்றில் இணைந்துள்ளார். அதன் ஊடாக வெளிவந்த ஜெயவிலால் விலேகொடவின் அபிதா-அதீன திரைப்பட விமர்சனங்கள் சிங்கள சினிமாவின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். சில காலங்களுக்கு முன் மார்ட்டின் விக்ரமசிங்க ‘மயூரபாத’ என்ற பெயரில் திரைப்பட விமர்சனத்தில் ஈடுபட்டாலும், இந்நாட்டு சினிமா தயாரிப்புக்கும் தினமினவுக்குமிடையிலான பிரிக்க முடியாத உறவு கட்டியெழுப்பப்பட்டதும் இரகசியமானதல்ல.
நாட்டின் முதல் திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்திய பெருமை தினமினவுக்கு உள்ளது. அது இடம்பெற்றது 1956 மார்ச் 2ம் திகதியாகும். சிங்கள சினிமாவை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி சிங்கள சினிமா, மேடை மற்றும் தொலைக்காட்சி நாடகத்துறைக்கு தினமின வழங்கிய பங்களிப்புகள் ஏராளமானவை. தினமினவின் வரலாற்றுப் பயணத்தை ஆராயும் இவ்வேளையில், கலாநிதி சரத் அமுனுகம ஒருமுறை செய்த விபரிப்பை நினைவு படுத்துவது பெறுமதிமிக்கதாகும். அவரது கருத்துப்படி, சுதந்திரத்திற்கு முன்னைய யுகத்தில் இலங்கையை ஆண்ட நான்கு நிறுவனங்கள் இருந்தன. அதில் ஒன்று தினமின அலுவலகம் எனப்படும் பிரபலமான லேக்ஹவுஸ் நிறுவனம். அதன் மூலம் பல அரசியல் தலைவர்கள் உருவாக்கியுள்ளனர்.
அரசாங்கத்தை மையப்படுத்திய செய்திப் பத்திரிகையாக மாறிய பின்னரும், அதற்கு முன்னரும் தினமின பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது என்பதை அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். என்றாலும் அது எப்போதும் தனது தேசியப் பொறுப்புகளையும் கடமைகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டது என்பது இரகசியமான விடயமல்ல. அதுபோலவே, நாட்டின் மரபுகளைப் பாதுகாத்து அதனை வளர்ப்பதற்கும் உறுதுணையாக நின்றது. யுகத்திற்கு யுகம் பெரிய மனிதர்களை உருவாக்கியது.
சம்பத் திப்பிட்டிகொட தமிழில் - எம். எஸ். முஸப்பிர்