உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் உட்பட பல தேசிய, சர்வதேச அரங்குகளிலும் ஆய்வாளராக பங்கேற்கும் முனைப்பில் அத்துறையில் என்னை வளரச் செய்வதில் மிக முக்கியமானவராக பேராசிரியர் செ.யோகராசா திகழ்கிறார். கடந்த 07.12.2023 மாலை அப் பெருந்தகை காலமானதாக முகநூல் பதிவின் ஊடாக அறிந்துக்கொண்டேன். அச் செய்தி மிக மனவருத்தத்தை தந்த செய்தியாக அமைந்தது. பேராசிரியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எனது நண்பர்களுடன் அவரது மறைவு பற்றி தொலைபேசி வாயிலாக கருத்துப் பரிமாறிக் கொள்கிறோம். முக நூல் பதிவுகள் ஒவ்வொன்றும் செ.யேகராசாவின் உன்னத தன்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தன. அவர் பற்றிய நினைவுகளை, அவருடன் உரையாடி கருத்துப் பறிமாறிக் கொண்ட தருணங்களை மீட்டிப் பார்க்கும் வண்ணமாக அமைந்தது. தொடர்ந்து மனைவி, பிள்ளைகளுடன் அவரின் இழப்பு பற்றியும், அவரின் மனித நேய முன்னுதாரணம் பற்றியும் எடுத்துச் சொல்லும் களமாக அன்றைய பொழுது அமைந்தது.
கடந்த ஜூலை மாதம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் பேராசிரியர் செ.யோகராசாவை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நீண்ட நேரம் அவருடன் கலந்துரையாடினேன். மிக நீண்ட நாட்களுக்கு பின்னரான சந்திப்பாகவும் அது அமைந்திருந்தது. திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர்
பா.ஆனந்தக்குமாரின் சிறப்புரையே அன்றைய தினம் இடம்பெற்றது. பேராசிரியர் பா. ஆனந்தக்குமாரைச் சந்திப்பதற்காகவே வருகைத் தந்திருந்தேன். பா. ஆனந்தக்குமார் 2017ஆம் ஆண்டு திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் “மலையக இலக்கியம் பன்னாட்டு கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர். இதுவே கடல் கடந்த நாடொன்றில் மலையக இலக்கியம் தொடர்பிலான முதலாவது சர்வதேச மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மலையக மக்களின் பூர்வீக நாடான தென்னிந்தியாவில் இவ்வாறானதோர் மாநாடு என்ற வகையில் முக்கிய கவனத்திற்குரிய நிகழ்வாக அமைந்தமை கவனிக்கத்தக்கது. பேராசிரியர் செ.யோகராசாவை 2002ஆம் ஆண்டு கவிஞர் சு.முரளிதரனின் “மலையக இலக்கிய தளங்கள்” நூல் வெளியீட்டு நிகழ்விலேயே முதன் முறையாக சந்தித்தேன். ஸ்ரீபாத தேசியக் கல்வியியற் கல்லூரியில் ஆசிரியர பயிலுனராக கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். சாரல் நாடன் தலைமையிலான “கொட்டகலை தமிழ்ச் சங்கம்” பௌர்னமி தின ஒன்றுகூடலை நடத்தும் சாரல் வெளியீட்டகம் தொடராக நூல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தது. “மலையக இலக்கிய தளம்” நூலும் சாரல் வெளியீட்டகத்தின் வெளியீடாகவே வெளிவந்தது. கொட்டகலை தமிழ்ச் சங்கத்தின் இந்த களம் மூத்த எழுத்தாளர்களையும், இலக்கிய செயற்பாட்டாளர்களுடன் அறிமுகமாகிக்கொண்டு நட்பை ஏற்படுத்திக்கொண்ட சந்தர்ப்பமாக அமைந்தது. மேற்படி நூலின் ஆய்வுரையையே இந் நிகழ்வில் செ.யோகராசா ஆற்றினார். மிக நீண்ட உரையாக அவரது உரை அமைந்திருந்தது. மலையக இலக்கியம் தொடர்பிலான பற்றுதலை ஏற்படுத்துவதில் அன்றைய பொழுது முக்கிய தருணமாகவே அமைந்தமை குறிப்பிடத்தக்கது. மலையக இலக்கிய வரலாற்றையும் அதன் வகிபங்கையும் ஏனைய இலக்கியங்களோடு ஒப்பிட்டு அவர் ஆற்றிய உரை என் மனதில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சி நிலையில் அவருடைய ஆக்கங்களை தவறாமல் வாசிக்கும் வாசகனானேன். ஞானம், ஜீவநதி, மல்லிகை ஆகியன தொடர்ச்சியாக அவருடைய ஆக்கங்களை பிரசுரம் செய்யும் இதழ்களாகும். 2011ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் “சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011” ஐ கொழும்பில் லெ.முருகபூபதி தலைமையில் நடத்தியது. இம் மாநாடு தமிழ் இலக்கியம் தொடர்பிலான ஆய்வுப் பார்வையில் மிக முக்கியத்திற்குரியதாகும். மலையக கலை. இலக்கியம் தொடர்பிலான முக்கிய அவதானத்தைக் கொண்டதாகவும் அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் மூத்த பத்திரிகையாளர் கி.பொன்னுத்துரையின் பங்கேற்பும், ஈடுபாடும் குறிப்பிடக் கூடியதாகும். இம் மாநாட்டின் ஏற்பாட்டாளர்களான லெ.முருகபூபதி, தி.ஞானசேகரன், இரா.உதயணன், ஜின்னா ஷரீபுதீன், அஷ்ரப் சிஹாப்தீன், கவிஞர் வெள்ளைச்சாமி, அந்தனி ஜீவா, போன்றோர் நேரடியாக மலையக பிரதேசத்திற்கு வருகைத்தந்து ஒருங்கிணைத்த விதம் நன்றிக்குரிய விடயமாகும். அம் மாநாட்டிற்கு கே.பொன்னுத்துரை ஏற்படுத்திய அறிமுகத்தின் ஊடாக என்னாலும் இம் மாநாடு சிறப்பதற்கு ஒத்துழைக்க முடிந்தமையை என் வாழ் நாளில் முக்கிய திருப்பமாகவே உணர்கிறேன். நாவலப்பிட்டி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்ற வகையில் அமைப்பார்ந்த ஒருங்கிணைப்பை சிறப்பாகவே ஆற்றினேன்.
மேற்படி மாநாட்டில் “நிகர்” ஆவண சிறப்பிதழ் ஒன்றையும் வெளியிட்டதோடு “மலையக வீதிப்பாடல்களின் உள்ளடக்கமும் அதன் எழுச்சி தாக்கங்களும்” எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை முன் வைத்தேன். பேராசிரியர் சு.வித்தியானந்தன் அரங்கில் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸின் தலைமையில் இடம்பெற்ற ஆய்வரங்கிலேயே மேற்படி தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையை முன்வைத்தேன். கட்டுரையின் உள்ளடக்கம் தொடர்பில் பலரும் பாராட்டுக்களுடன் வாழ்த்தையும் தெரிவித்தார்கள். ஆய்வரங்குக்கு தலைமை வகித்த பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் மலையக இலக்கியத்தில் முனைப்பு பெற்ற “வீதிப்பாடல்கள்” தொடர்பான பதிவு முதல் முறையாக பதிவாகியுள்ளது எனவும் மிக சிறப்பாகவும், காத்திரமாகவும் முன்வைக்கப்பட்டமை பாராட்டுக்குரியது எனவும் பதிவு செய்தார். அரங்கில் பேராசிரியர் செ.யோகராசாவும் அமைதியாக எனதுரையை செவிமடுத்துக் கொண்டிருந்தார். ஆய்வரங்கு நிறைவுற்றதும் எனது அருகில் வருகைத்தந்து பெயரை கூறி அழைத்து இது வரையில் மலையக இலக்கியப்பரப்பில் யாரும் பார்க்காத விடயத்தை முன் வைத்தீர்கள். உங்கள் முன் வைப்பு சிறப்பாக இருந்தது. தொடர்ந்து வாசியுங்கள், தேடுங்கள், மலையக சமூகத்தைப் பொறுத்தமட்டில் பார்க்கப்பட வேண்டிய விடயங்கள் ஏராளம் உள்ளன. அவை மீது உங்கள் தலைமுறை எழுத்தாளர்கள் ஆர்வம் செலுத்த வேண்டியது அவசியமாகும். எனவும் வலியுறுத்திய நினைவுகள் வந்து போகின்றன.
இவ்வாறே எனது உரையை செவிமடுத்த நிலையில் “பசறையூர் வேலாயுதமும் என்னை பாராட்டி வாழ்த்திய சம்பவமும் நினைவுக்கு வருகிறது. ஆய்வரங்கு சனிக்கிழமை இடம்பெற்றது. அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை எனது உரை தொடர்பில் பசறையூர் வேலாயுதம் சிலாகித்த பதிவு ஒன்றினை தினக்குரல் வார இதழில் எழுதியிருந்தார். அப்பதிவை தொடர்ந்து தினக்குரல் ஆசிரியர் பீடத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு அமைய என்னால் முன்வைக்கப்பட்ட கட்டுரையை மின்னஞ்சல் செய்தேன். அடுத்த வாரம் தொடக்கம் தொடர்ந்து மூன்று வாரங்கள் எனது கட்டுரை பிரசுரமானது. அம் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் முதலாவதாக எனது கட்டுரையே ஊடகமொன்றில் பிரசுரமாகியமை குறிப்பிடத்தக்கது. மலையக நாட்டார் பாடல்கள் தொடர்பில் மிக அக்கறையுடன் தொழிற்பட்டவர்களில் பசறையூர் வேலாயுதம் மிக முக்கியத்திற்குரியவர். அவர அமரத்துவம் அடையும் வரையிலும் மிக நெருக்கத்திற்குரியவராக தொடர்பை பேணியவர்.
இம் மாநாட்டை முன்னிறுத்தி வெளியிட்ட “நிகர்” சிறப்பிதழ் தொடர்பில் மாநாடு நிறைவுற்று ஒரு வாரத்தின் பின்னர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்தமையும் ஞாபகத்திற்கு வருகிறது. தொலைபேசி தொடர்பில் அவ்வப்போது பேராசிரியருடன் பேசிக்கொள்வேன். அப்பொழுதெல்லாம் வாசிப்பு பற்றியும், மலையகம் பற்றியும் கலந்துரையாடிக் கொள்வது வழமையாக இருந்தது. அவரை நேரில் தரிசித்த பல சந்தர்ப்பங்கள் அமைந்த போதிலும், மு.சிவலிங்கத்தின் “பஞ்சம் பிழைக்க வந்த சீமை” நாவல் வெளியீட்டு வைபவம் மனதில் வெகுவாக இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 10.04.2016 அன்றைய தினம் வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் ஜீவன் ஏற்பாட்டில் “சுமைதாங்கி” அமைந்துள்ள பொட்டலில் விழா ஏற்பாடாகியிருந்தது. பேராசிரியரும் கலந்துக்கொண்டிருந்தார். பஞ்சம் பிழைக்க வந்த சீமை நாவலும் அவரின் முன்னுரையிலேயே வெளியாகியிருந்தது. நிகழ்வில் அவரது உரை மிக முக்கியத்திற்குரியதாக விளங்கியது. மலையக இலக்கியம் தொடர்பிலும், நாவல் இலக்கியத்திற்கு மலையகத்தின் வகிபங்கையும் ஒப்பிட்ட வகையிலும் அவரது உரை அமைந்திருந்தது. உலக நாவல் இலக்கிய முனைப்புகள் பற்றியும் தமிழ் நாவல்கள் சித்தரிக்கும் முரண்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் அவரது பார்வை மிக காத்திரமாக அமைந்தது. மலையக நாவல்கள் தொடர்பான ஈடுபாடும், ஆர்வமும் என்னிலும் மேலேங்கியது. இதன் விளைவாகவே கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது உலக முத்தமிழ் மாநாட்டில் “மலையக நாவல் இலக்கிய செல்நெறி” எனும் தலைப்பில் ஆய்வுரையை முன் வைக்க தூண்டியதாகவும் அமையப்பெற்றது.
கொரோனா காலப்பகுதியில் சூம் செயலி வழியாக நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம் பல்வேறு நிகழ்வுகளை நடத்தியது. அந் நிகழ்வுகளிலெல்லாம் கலந்துக்கொண்டு காத்திரமாக கருத்துக்களை முன்வைத்ததோடு தேவையான ஆலோசனைகளையும் முன்வைப்பார். இவ் அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவராகவும் அவர் எமக்கு வழங்கிய ஆலோசனைகள் மிக கவனத்திற்குறியதாகும்.
இறுதியாக அவரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சந்தித்து உரையாற்றிய போது மிக அக்கறையோடு விசாரித்தார். எழுத்துத்துறை செயற்பாடுகள், மற்றும் உயர் கல்வி தொடர்பில் அக்கறையோடு ஆலோசனை வழங்கினார். நிகர் இதழ் தொடர்பிலும் விசாரித்தார். வேலைப் பளு காரணமாக தொடர்ந்து இதழை கொண்டு வருவதில் உள்ள சிக்கல் நிலையை கூறினேன். ஆவண இதழ்களை மட்டும் வெளியிடுவதாகவும், மலையகம் 200 ஆவண சிறப்பிதழை தயார் செய்துகொண்டிருப்பது பற்றியும் எடுத்துக் கூறினேன். கட்டுரை ஒன்றினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைய விரைவில் அனுப்பி வைப்பதாக கூறினார்.
11வது உலகத’ தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்று “தொண்ணூறுகளின் பின்னரான மலையக நாடக முன்னெடுப்புகள”; எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தவுள்ளதாக கூறினேன். நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் என அவர் கூறினார். மறக்க முடியாத தருணம். பேராசிரியர் பா. ஆனந்தகுமாருடன் இணைந்த நிலையில் யோகராசா சேருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இதுதான் அவருடன் எடுத்துக்கொண்ட இறுதி புகைப்படமாக இருக்கும் என்பது பற்றி யோசிக்கவில்லை. அவரது ஆசீர்வாதத்துடனும் மாநாட்டில் திருப்தியாக பங்கெடுத்தமை திருப்தியைத் தருகிறது.
மானுடத்தை நேசித்து காட்டிய ஒருவரின் இழப்பை இலக்கிய உலகு ஏற்க மறுக்கிறது. பேதங்களுக்கு அப்பால் அனைவரையும் நேசிக்க தெரிந்த ஓர் ஆன்மாவின் பிரிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் தலை சிறந்த புலமையாளரும், பேதங்களை மறந்து செயற்பட்டு தேச ஒற்றுமையின் அடையாளமாக தன்னை நிலைநிறுத்திய ஒருவரின் பிரிவுத்துயரை தமிழ் கூறும் நல்லுலகு ஏற்க மறுக்கிறது.
மதங்கள், இனங்கள், பிரதேசங்கள் என்ற பேதங்கள் கடந்த பொதுத்தன்மையான அணுகுமுறையும், தலைமுறை கடந்த எல்லா வயதினரையும் மதித்து பழகும் முன்மாதிரியும் இவரின் சிறப்பம்சமாகும். இத்தனை உயரிய பண்புகளின் நேச அடையாளமான ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசாவின் மறைவு பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது. அவரில் காணப்படும் பொதுத்தன்மையைப் போலவே அவரின் மரணத்தையும் மானுட நெறிமுறையின் ஏக அடையாளமாக உயர்த்தி அவரை எல்லோரும் நேசிப்பதை அறிய முடிகிறது.
பயணம் தொடரும்…