2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதங்கள் பாராளுமன்றத்தில் கடந்த சுமார் ஒரு மாத காலமாக இடம்பெற்றன. இந்த விவாதமானது வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு உட்பட அதற்கு வெளியிலும் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கான தேவைகள், எதிர்காலத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அது தொடர்பில் எழக்கூடிய பிரச்சினைகள் சம்பந்தமாக விளக்கமளிப்பதற்கும் தெளிவுபடுத்துவதற்கும் கருத்துக்களை முன் வைப்பதற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்து விட்டதை குறிப்பிட வேண்டும்.
வடக்கு, கிழக்கு, மலையகத்தைப் பொறுத்தவரை அங்குள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகள், தேவைகள் எதிர்பார்ப்புகளுடனேயே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வடக்கு, கிழக்கில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் காணி பிரச்சினைகள், காணாமற் போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வாழ்வாதார பிரச்சினைகள், மீனவர்களின் பிரச்சினைகள், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட கைத்தொழில் சார்ந்த பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
அதேபோன்று மலையக பெருந்தோட்ட மக்கள் சம்பளப் பிரச்சினை, குடியிருப்பு பிரச்சினை, காணிப் பிரச்சினை, கல்வி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பிலும் நெடுங்காலமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கான குழுநிலை ஒதுக்கீட்டு விவாதம் தனித்தனியே ஒவ்வொரு அமைச்சுக்கும் என இடம்பெற்றதுடன் அந்தந்த துறை சார்ந்த பிரச்சினைகளை முன் வைப்பதற்கு வடக்கு கிழக்கு மலையக பிரதேசங்களை பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது.
அதனை சிலர் பயன்படுத்தியும் சிலர் பயன்படுத்தாமலும் விட்டாலும் முக்கியமான பல பிரச்சினைகள் இந்த விவாதங்களில் உள்ளீர்க்கப்பட்டு சில பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களினால் தீர்வுகளும் முன் வைக்கப்பட்டன என்பதை குறிப்பிட வேண்டும்.
அந்த வகையில் அந்தப் பிரதேசங்களை சார்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் எம்பிக்கள் பலரதும் விவாதங்களைப் பார்ப்போம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை நெடுங்காலமாக தொடர்கின்றது. எம்மைப் பொறுத்தவரை நாம் அதற்காக இரண்டு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். முதலாவது நடவடிக்கை இராஜதந்திர ரீதியில் அதனை முன்னெடுப்பது. அந்த வகையில் ஏற்கனவே இராஜதந்திர ரீதியாக பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அவை பயனளிக்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இரண்டாவதாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்தல். அந்த வகையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கைதுகள் இடம் பெற்று வருகின்றன. இத்தகைய கைது தொடர்பான செய்திகள் தமிழ்நாட்டில் பரப்பப்படும் போது அது பிரச்சினைக்குரியதாகின்றது. தமிழ்நாட்டிலுள்ள மீனவர்கள் பாரம்பரியமாக மேற்கொண்டு வரும் தொழில் அது எனவும் இலங்கை கடற்படையே அவர்களை முறையற்ற விதத்தில் கைது செய்கின்றது என்றும் அங்குள்ளவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதற்கிணங்க ஒரு புதிய வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் நான் சிந்தித்துள்ளேன். வடக்கிலுள்ள கடற் தொழிலாளர்கள் ஒரு குழுவாக தமிழ்நாட்டுக்கு சென்று அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள ஊடகங்களுக்கும் இங்குள்ள உண்மை நிலையை தெளிவுபடுத்த முடியும். இந்திய மீனவர்கள் அத்துமீறியே இலங்கை கடற்பரப்பில் பிரவேசித்து வளங்களை அழிக்கின்றார்கள் என்றும் அதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து அதன் காரணமாகவே கடற்படையினர் அவர்களை கைது செய்வதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
அது மட்டுமன்றி வட மாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்குள்ள அரசியல் தலைவர்களிடம் இந்த பிரச்சினைகள் தொடர்பில் பேச முடியும். அத்துடன் அங்குள்ள ஊடகங்களுக்கும் அது தொடர்பில் தெளிவுபடுத்த முடியும். இந்த செயற்பாட்டுக்கு வடக்கிலுள்ள எம்பிக்கள் சிலர் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். எனினும் சார்ள்ஸ் எம்பி அதற்கு இணக்கம் தெரிவிக்காமல்
இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவரை அழைத்து பேசலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அது ஒரு பிரச்சினை இல்லை. எனினும் அடிக்கடி இந்தியத் தூதுவர்கள் மாற்றமடைந்து செல்வதால் அதில் ஒரு சிக்கல் காணப்படுகிறது. எனினும் இந்திய தூதுவர்களுக்கு இந்த விவகாரம் அத்துப்படி. அவர்கள் ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் முழுமையாக அறிந்துள்ளார்கள் என்பதால் அவர்களும் கூட தமிழ்நாட்டுக்குச் சென்று அங்குள்ள அரசியல்வாதிகளுடன் பேசலாம் அதன் மூலம் தான் நிரந்தர தீர்வு காண முடியும் என்ற யோசனையையே முன் வைப்பார்கள்.
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்
வீதி அபிவிருத்தி அதிகார சபையில் ஒப்பந்த அடிப்படையில் ஐந்து வருடங்களுக்கும் மேல் பணி புரியும் ஊழியர்களுக்கு அடுத்த வருடத்தில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை அடுத்த வருடத்தில் நிறைவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எமது நாட்டின் வீதிக் கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு துறையினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இம்முறை வரவு செலவு திட்டத்தில் கிராமிய வீதிகள் அபிவிருத்திக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்டுள்ள கிராமிய பாலங்கள் மற்றும் ஏனைய கிராமப்புற பாலங்கள் அபிவிருத்திக்காக 3 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் மிக முக்கியமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அத்துடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை அடுத்த வருடத்தில் நிறைவு செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளோம். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வாங்கியுடன் இணைந்து நாட்டின் கிராமிய வீதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்த காலங்களில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் துறைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பரந்தன் இரசாயன தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலை, தேங்காய் எண்ணெய்த் தொழிற்சாலை, ஓட்டுத்தொழிற்சாலை என பல தொழிற்சாலைகள் வடக்கு, கிழக்கில் இருந்தன. அவை இன்று செயலிழந்துள்ளன. வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிந்து 14 வருடங்களாகிவிட்டபோதும் இவ்வாறான தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்த வித நடவடிக்கைகளையும் காண முடியவில்லை. உப்பள தொழிற்சாலை மட்டுமே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை விஸ்தரிக்க நாம் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த தொழிற்சாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் எமது மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் முடியும்.
வடக்கு கிழக்கில் மூடப்பட்டுள்ள இத்தகைய தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பித்து செயற்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லையென்றால் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வடக்கு, கிழக்கில் உள்ள பலர் தயாராகவுள்ளனர்.
ரவூப் ஹக்கீம் எம்பி
பொதுத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் அமைக்கப்படுவதாக ஆரம்பத்திலிருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றபோதும் அது இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. அதனால் அவசரமாக அதனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கிறேன். பொதுத்துவிலுக்கான கல்வி வலயம் அக்கரைப்பற்றில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் பொத்துவிலுக்கு தனியான கல்வி வலய தேவைப்பாடு இருக்கிறது. பந்துல குணவர்தன கல்வியமைச்சராக பதவி வகித்த காலத்திலும் அவர் நேரில் விஜயம் செய்து அதற்கு தீர்வு பெற்று தரூவதாக தெரிவித்தபோதும் எதுவும் இடம்பெறவில்லை.
அதேநேரம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான முக்கியமான சில பீடங்கள் அவசியமாக இருக்கின்றன. அட்டாளைச்சேனையில் இருக்கின்ற ஆசிரியர் கல்வி கலாசாலையில் பல கட்டடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன. அந்தக் கட்டடங்களை பயன்படுத்தி அங்கு கல்வி பீடத்தை அமைக்கலாம் என்றும் அதேபோன்று மல்வத்தை பிரதேசத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு இருக்கின்ற காணியை பாவித்து அங்கு விவசாய பீடத்தை அமைக்கலாம். ஏனெனில் நெல் உற்பத்தியில் ஆகக்கூடுதலாக வருமானங்களை ஈட்டித்தரக்கூடியதாக அந்தப் பிரதேசம் காணப்படுகிறது.
மேலும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் விருப்பமாக இருப்பது, அங்கு உல்லாச பயணத்துறைக்கான ஒரு பீடம் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். பொத்துவில் அறுகம்பை, பாசிக்குடா பிரதேசங்களுக்கும் அங்கிருக்கின்ற ஹோட்டல்களுக்கும் தேவையான ஊழியர்களை பயிற்றுவிப்பதற்குமான பல்கலைக்கழக கற்கை நெறிகளைக்கொண்ட ஒரு பல்கலைக்கழகமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு பீடம் அமைக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி
தமிழ் அரசியல் கைதிகள் 70 பேர் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விஜேதாச ராஜபக் ஷ நீதியமைச்சராக பொறுப்பேற்றதும் அந்த எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த விடயத்தில் பெரும் ஆர்வத்துடனும் மனிதாபிமானத்துடனும் நீதியமைச்சர் செயற்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு பாராட்டுக்கள். எஞ்சியுள்ள 14 பேரையும் விடுவிப்பதற்கு அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படும் நிலையில் புதிதாக பலர் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதாகி வருவதை குறிப்பிட வேண்டும். யுத்தம் நிறைவடைந்த போது 5 வயதாக இருந்த சிறுவனுக்கு கூட புலிகளுடன் தொடர்பு உள்ளதாகக் குறிப்பிட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் எஞ்சியுள்ள 14 பேரை விடுவிப்பதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரவு செலவு திட்டம் மீதான விவாதங்களில் முன்வைக்கப்பட்ட மேற்படி விடயங்கள் நியாயமானவை என்பதுடன் விரைவில் தீர்த்து வைக்கப்பட வேண்டியவை. வாத விவாதங்களுக்கு அப்பால் நடைமுறையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றுக்கு போதுமான நிதியை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கவும். வேண்டும் . அப்போதுதான் இந்த விவாதங்கள் அர்த்தம் பெறும் என்பதே எமது தாழ்மையான கருத்து.