தமிழகத்தை, குறிப்பாக சென்னை நகரை மழையும் வெள்ளமும் வாட்டுவதில்லை என்பதே பொதுவான வரலாறு. அறுபது, எழுபது, எண்பதுகளை எடுத்துக் கொண்டால் தமிழகம் வரட்சியில் தவிக்கும். சென்னை மக்கள், தண்ணீர் லொறிகளுக்காக குடங்களுடன் தவமிருப்பார்கள். தாகமும் வரட்சியும் தொடர் பிரச்சினைகளாக இருந்ததால் தான் பல சிறுகதைகள், நாடகங்கள், திரைப்படங்கள், தண்ணீரையும் தாகத்தையும் மையமாகக் கொண்டிருந்தன. உதாரணத்துக்கு பாலசந்தரின் தண்ணீர், தண்ணீர் திரைப்படத்தை குறிப்பிடலாம்.
ஆனால் இயற்கையின் இந்த வழமையான போக்கு கடந்த 15 ஆண்டுகளாக மாறி வந்திருக்கிறது. அதிக மழைவீழ்ச்சி காணப்படும் மாநிலமாக தமிழகம் மாறி வருவதை அவதானிக்க முடிகிறது. உதாரணத்துக்கு இந்த ஆண்டையே எடுத்துக் கொள்ளலாம். தொடர்ச்சியாக அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதற்கான காரணம், உலகளாவிய ரீதியாக குளிர்காலம் மிகக் கடுமையாகி வருவதையும் அங்கே கோடைக் காலத்தில் வெயில் மிகக் கடுமையாக வாட்டி வருவதையும் இந்த ஆண்டில் பார்த்தோம். தற்போது தான் துபாயில் காலநிலை தொடர்பான மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. வளர்ந்த நாடுகள் காலநிலை பாதிப்பைத் தவிர்க்க செயலளவில் வேகம் காட்டுவது இல்லை என்ற பொதுவான அபிப்பிராயம் ஒரு பக்கமிருக்க, இயற்கையோ தன் சீற்றங்களை அதிகரித்து வரத் தொடங்கியிருக்கிறது.
தென் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இது மழை பெய்யும் காலம். எவ்வளவு அதிகமாகப் பெய்கிறதோ, அந்த அளவுக்கு தண்ணீர் பிரச்சினை தீரும்; விவசாயம் செழிக்கும். சென்னை, டில்லிக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய நகரமாக, பரப்பளவில், கருதப்படுகிறது. நகரின் மொத்த சனத்தொகை 64 லட்சமாக அறியப்படுகிறது. சென்னையை அண்டிய புறநகர்களையும் சேர்த்துக் கொண்டால் மொத்த சனத்தொகை ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிகம். சென்னை நகரின் ஒரு சதுர கி.மீட்டரில் 25 ஆயிரம்பேர் வசிப்பதாக ஒரு புள்ளி விவரம் உள்ளது.
இந்தப் பின்னணியை வைத்துக் கொண்டு பார்த்தால்தான் சென்னை வெள்ளம் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை யூகிக்கக்கூடும். பெரு வெள்ளத்துக்குக் காரணமான மிக்ஜாங்புயல் சென்னைக்கு அருகே நிலை கொண்டிருந்ததாலும் அது மெதுவாகவே ஆந்திராவை நோக்கி நகர்ந்ததாலுமே சென்னையில் பலத்த மழை கொட்டியது. இப்புயலுக்கு மியன்மாரே ‘மிக்ஜாங்’ எனப் பெயரிட்டது. இது, அந்நாட்டில் ஓடும் நதியொன்றின் பெயராம். வலிமை அல்லது நெகிழ்ச்சி என்பது இதன் பொருளாம். வங்கக் குடாவில் தோன்றிய இப்புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, வலுப்பெற்று புயலாக மாறியது. முன்கூட்டியே கணிக்கப்பட்டபடி அது தமிழகத்தை நெருங்கி வந்தது. சென்னையில் இருந்து 90 கி.மீ. தொலைவில் அசையாமல் நின்றிருந்தது. எல்லாப் புயல்களும் மழையைக் கொண்டு வருவதில்லை. பெருங் காற்றையும் ஏற்படுத்துவதில்லை. சில வழியிலேயே வலுவிழந்துவிடும். சில, பலத்த காற்றை ஏற்படுத்தும்; மழையைத் தராது. ஆனால் மிக்ஜாங் புயல் கடும் மழையை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. அப்புயலின் மையச் சின்னத்தைச் சுற்றி பாரிய மேக வலயங்கள் சூழ்ந்திருந்தன. கடலில் அது நின்று கொண்டிருந்ததால் மென்மேலும் அது கடல் நீரை உறிஞ்சிக் கொண்டிருந்தது. அதன் வலயங்கள் சென்னைக்கு மேலாக சுற்றிக் கொண்டிருந்தன. எனவே சென்னைக்கு மழை நிச்சயமென்றும் முதலாம் திகதி மாலையில் இருந்து அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு கடும் மழை பெய்யுமென்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துமிருந்தது. சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் பெருமழை பெய்தபோது தேங்கிய நீர் விரைவிலே வடிந்து விட்டது. எனவே பெய்யவிருக்கும் மழை நீரையும் சமாளித்துவிடலாம் என சென்னை மேயர் பிரியா நினைத்திருந்தார். ஆனால் நடந்ததோ வேறு!
அன்றிரவு 36 செ.மீ. மழை அகோரமாகப் பெய்தது. சென்னையில் ஒரு பகுதி வெள்ளக் காடானது. இரண்டாம் திகதி இரவும் கடும் மழை தொடர்ந்தது. மொத்தம் 50 செ.மீ. மழை. அதாவது மூன்று மாதங்களில் பெய்யக்கூடிய மழை, 48 மணித்தியாலங்களில் பெய்தால், சன நெரிசலும் புதிது புதிதாக எழுப்பப்பட்டு வரும் கொன்கிரீட் சட்டடங்களும் நிறைந்த சென்னை தண்ணீரில் தத்தளிக்காமலா இருக்கும்?
சென்னையின் முக்கிய இடங்கள், கோயம்பேடு சந்தை, பஸ் நிறுத்தும் நிலையம், விமான நிலையம் என்பன, ஒரு காலத்தில் ஏரிகளாக இருந்த இடங்கள். ஏரிகள், குளங்கள் இருந்த இடங்களில்தான் பல மாடிக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே பெய்யும் மழைநீர் தாழ்வான இந்த முன்னாள் குளங்களை நோக்கித் தானே செல்லும்! வெள்ளத்தில் மூழ்கிய விமான நிலையம் 300க்கும் மேற்பட்ட விமானப் பயணங்களை இரத்துச் செய்தது. 1,500க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் தவித்துப் போயினர். ரயில் தண்டவாளங்கள் மூழ்கியதால் சகல ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டன. பஸ் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்துப் போனது. பள்ளிகள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் முடங்க, வேளச்சேரி, தாம்பரம், வடசென்னை, மடிப்பாக்கம், செங்கல்பட்டு, சதாசிவம் நகர், அடையார், முடிச்சூர், மேடவாக்கம், திருவள்ளுர், கீழ்க்கட்டளை போன்ற இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. முழங்கால் முதல் கழுத்துவரை தெருக்களையும் குடியிருப்புகளையும், தொழிலகங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. தொலைபேசி வசதி, இணைய வசதி, மின்சார மற்றும் தண்ணீர் வசதி பாதிக்கப்பட்டன. பல வீடுகளில் மெழுகுவர்த்தி கூட இருந்திருக்காது. இருளிலும், கொசுத் தொல்லையிலும் அவர்கள் இரவுகளை கழிக்க வேண்டியதாயிற்று. அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் உணவு விநியோகம் தடைப்பட்டது.
இது எவ்வளவு பயங்கரம் என்பது அனுபவித்தால்தான் தெரியும்.
2015ஆம் ஆண்டும் டிசம்பர் மாதம் கனமழை பெய்தபோதும் சென்னையில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. அப்போது புயல் இல்லை. மேக வெடிப்பை ஒத்த ஒரு மழை. அது தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அன்றைய அம்மா – சசிகலா அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அன்றைய சூழலில் அம்மாவிடமிருந்து அறிவித்தலும், கட்டளையும் வராமல் அதிகாரிகளும் சரி அமைச்சர்களும் சரி செயல்பட மாட்டார்கள். அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும் என்ற பயம். இதேசமயம் அந்த மழையால் சென்னைக்கு அருகில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி அபாய கொள்ளளவை எட்டத் தொடங்கியது. நீரைப் படிப்படியாக திறந்துவிடத் தீர்மானித்த அதிகாரிகள் ஜெயலலிதாவுடன் தொடர்புகொள்ள பல தடவைகள் முயற்சித்தும் அது சாத்தியப்படவில்லை. இறுதியாக அவர்களே நீரைத் திறந்து விட்டார்கள். முன்னறிவித்தலின்றி நீர் திறந்துவிடப்பட்டதால் அது சென்னையை வெள்ளக் காடாக்கியது. அன்றைய அரசு ஐந்து நாட்களாக பாராமுகம் காட்டியதால்தான், மக்களும், கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் உடனடியாகக் களத்துக்கு வரவேண்டியதாயிற்று. இப்போது மக்களுக்கு உடனடியாக போய்ச் சேர வேண்டும் என அறிக்கைகள் விடுக்கிறார் அதே சின்னம்மா சசிகலா!
எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க.அரசை விடியா அரசு என்றே அழைப்பது வழக்கம். அவர் அமைச்சராக இருந்த காலத்தில்தான் பெரு வெள்ளம் ஏற்பட்டு 550 பேர் உயிரிழந்தனர். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அன்றைய அரசு அந்த வெள்ளத்தை முறையாகக் கையாளவே இல்லை. அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, இடுப்புவரை வெள்ளம் நிற்கும் போது, மின்சாரம் இல்லை, உணவு, பால் இல்லை, விடியா அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருக்கிறார். இவை வெள்ள அரசியல் என்றுதான் அழைக்க வேண்டும். தமிழக மக்களுக்கு உதவி தேவை என எடப்பாடி குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை!
சென்னை மாநகரசபை பாதாள சாக்கடைகளையும், வடிகால்களையும் முறையாக பராமரிக்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம் இதே நபர்கள்தான் கொஞ்சமும் சமூக பொறுப்பின்றி குப்பைகளை, பிளாஸ்டிக் கழிவுகளை கண்ட இடங்களில் வீசி எறிகிறார்கள் என்பதை இவர்கள் உணர்வதில்லை. தற்போது, 18 பேரை பலிகொண்ட இந்த வெள்ளம் வீதிகளில் இருந்து வடிந்து கொண்டிருக்கிறது. புயல் ஆந்திராவை நோக்கி மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தாலும் கடல் மட்டம் ஆக்ரோஷமாகவும் உயர்ந்தும் காணப்பட்டதாலும் கடல் மழை நீரை உள்வாங்காததும், நீர் விரைவில் வடியாததற்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தற்போது குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் நீர்தான் மோட்டார் பம்ப்புகள் மூலம் வெளியேற்றப்பட வேண்டும். ஏராளமான மோட்டார் சைக்கிள்களும் கார்களும் மழை நீரில் மூழ்கி செயல் இழந்துள்ளன. 2015ஆம் ஆண்டு வெள்ளத்தோடு ஒப்பிடும்போது அரசும் அதிகாரிகளும் விரைந்து செயல்படுவதாகவே தெரிகிறது. அதே சமயம் உணவு, தண்ணீர் மற்றும் பால் என்பன சில குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசி வெள்ள நிவாரண நிதியாக 500 கோடி கேட்டுள்ளார். அதே சமயம் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், சென்னை வந்து பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்யவுள்ளதாகவும் தெரிகிறது. இவை வழமையானவை. எவ்வளவுதான் நீர்வடிகால்களை திறம்பட செயற்பாட்டில் வைத்திருந்தாலும் ஒரு புயல் ஏற்படுத்தக் கூடிய மழை வெள்ளம் நகரை வெள்ளக் காடாகத்தான் செய்யும். 2015 வெள்ளம் மனிதர்களின் கவனக்குறைவால் ஏற்படுத்தப்பட்ட வெள்ளம். இந்த வெள்ளமோ தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, சென்னைவாசிகள் பாடங்களும் கற்றுக் கொள்ள வைத்திருக்கும் வெள்ளமாகும்.
அருள்சத்தியநாதன்