இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 ஆம் வருடம் நடைபெறவுள்ளது. இந்தியாவின் பதினேழாவது மக்களவைக்கான மக்களவை பொதுத்தேர்தல் கடந்த 2019 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மூன்றாவது முறையாக வெற்றி பெறும் என்பது தற்போது உறுதியாகி விட்டது. ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில், பாரதீய ஜனதா மூன்று மாநிலங்களைக் கைப்பற்றியதையடுத்து 2024 பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது உறுதியாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் முடிவுகள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தன. மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.கவுக்குக் கிடைத்த வெற்றியானது முன்னெப்போதும் இல்லாத மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கதென்று பா.ஜ.கவினர் கூறுகின்றனர்.
இப்போது 3 மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு கிடைத்த வெற்றியானது, 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 3- ஆவது முறையாக வெற்றி பெறும் என்பதை உறுதி செய்வதாக உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்வதாக இந்த வெற்றி அமைந்துள்ளதென்றும், சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் முதன் முறையாக வெற்றி பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஆட்சியைக் காப்பாற்றுவதில் வெற்றி பெற்ற பா.ஜ.க, அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் காங்கிரஸைத் தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதேசமயம் ராஜஸ்தானில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை மாற்றும் வழக்கத்தை மாற்ற நினைத்த காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. தெலுங்கானாவில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தல்கள் 2024-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின் அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படுகின்றன.
பா.ஜக.-வை தோற்கடித்து ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்துடன் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) என்ற பெயரில் கூட்டணி அமைத்தன.முதல் நாளிலிருந்தே ‘இந்தியா கூட்டணி’ பல சவால்களைச் சந்தித்து வருகிறது. அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பல மாநிலங்களில் ஒருவருக்கொருவர் மிகப்பெரிய போட்டியாளர்களாக இருப்பதைப் போலவே, அவை தொடர்ந்து ஒன்றுக்கொன்று எதிராக தேர்தலில் போட்டியிடவும் செய்கின்றன. இதனுடன், பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தலைப்புகளில் அவர்களது கருத்தும் நிலைப்பாடும் வேறுபட்டவையாக உள்ளன.
தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்யும் மூத்த பத்திரிகையாளர் சீமா சிஷ்டி கருத்துத் தெரிவிக்ைகயில், “இந்தியக் கூட்டணியும், காங்கிரஸும் இந்தத் தேர்தல்களில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறவிட்டன” எனக் கூறியுள்ளார்.
“இந்தத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசியல் மாற்றத்தைத் தொடங்குவதற்கு ஒரு முன்முயற்சி எடுக்கப்பட்டிருக்கலாம். இது இந்திய கூட்டணியின் உணர்வை வலுப்படுத்தியிருக்கும். ஆனால் சிறிய கட்சிகளை தன்னுடன் சேர்த்துக் கொண்டதன் மூலம் கிடைத்த பலன்களை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்வதில் தவறு செய்துவிட்டது” என்றும் சீமா சிஷ்டி கருத்துத் தெரிவித்துள்ளார்.
“கூட்டணி அமைத்துக் கொண்டதால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உதாரணமாக தெலுங்கானாவில் சி.பி.ஐயுடன் கூட்டணி வைத்தார்கள், ஆனால் சி,பி,எம் உடன் கூட்டணி அமைக்கவில்லை. இதே போல மற்ற இடங்களிலும் சிறிய கட்சிகளை ஒன்றிணைப்பதால் பலன் உண்டு. அவர்களால் அந்தப் பலனை எடுக்க முடியவில்லை” என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் மீது அபிப்பிராயம் தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் சீமா சிஷ்டி “இடதுசாரி கட்சிகளுக்கு சில இடங்களை நீங்கள் கொடுத்திருந்தால், நீங்கள் ஒரு புதிய அரசியலைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் இந்துத்துவா எனும் அதே வெளிச்சத்தில் விழுந்தீர்கள். நீங்கள் இந்துத்துவாவை கேள்வி கேட்கவும் இல்லை, அல்லது நீங்கள் அதை வைத்து காய்களை நகர்த்தவும் இல்லை. பிறகு ஏன் உங்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்?”என்று குறிப்பிட்டார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவைத் தோற்கடிக்கும் வாய்ப்பு முன்பை விட இப்போது கடினமாகி விட்டது என்பதே இந்திய அரசியல் ஆய்வாளர்களின் பொதுவான கருத்தாக இருக்கின்றது.
சட்டசபைத் தேர்தலில் நடந்ததுதான் மக்களவையிலும் நடக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், ஆட்சி மாற்றத்தை விரும்புபவர்களின் உறுதி தளர்ந்திருப்பதையே சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் புலப்படுத்துகின்றன.
“மத்தியில் இருந்து பா.ஜ.க-வை அகற்ற வேண்டும் என்றால், குஜராத்தில் தொடங்கி பீகார் வரை வடஇந்தியாவில் அக்கட்சியைத் தோற்கடிக்க வேண்டும். ஆனால் காங்கிரஸால் அது முடியாத காரியம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தேசியளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் பல விடயங்களை உணர்த்துகின்றன. பிரதமர் மோடியின் ‘இமேஜ்’ என்பது பாராளுமன்றத் தேர்தலைத் தாண்டி சட்டசபைத் தேர்தல்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதையே இது காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மோடியின் வாக்குறுதிகள் என்று பிரதமர் மோடியை முன்னிறுத்தியே பா.ஜ.க பிரசாரம் செய்தது. எனவே, இது பிரதமர் மோடியின் இமேஜுக்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
அடுத்து 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு கடும் போட்டி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
பா.ஜ.கவின் பலம் என்பது ‘ஹிந்தி ெஹார்ட் லேண்ட்’ எனப்படும் வட மாநிலங்கள் ஆகும். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் இந்த பிராந்தியத்தில் பா.ஜ.க 225 இல் 177 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி அங்கே தொடர்ந்து பலவீனமாகி வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளும் அதையேதான் காட்டுகின்றன. மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் நிலையில், அதையும் தாண்டி பா.ஜ.கவால் வெற்றி பெற முடிந்துள்ளது.
மேலும், பா.ஜ.கவினால் எந்தளவுக்கு வாக்காளர்களை நெருக்க முடிந்தது என்பதையும் இது காட்டுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ.கவுக்கு உட்கட்சி பூசல்கள் இருந்த போதிலும், அதையெல்லாம் சமாளித்து பா.ஜ.க போட்ட திட்டமே வெற்றியை வாங்கிக் கொடுத்துள்ளது.
பொதுவாகப் பழங்குடியினர் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவாக இருப்பார்கள், ஆனால் இப்போது அந்த நிலைமை மாறத் தொடங்கியுள்ளனர். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆக்கப்பட்டார். இது தேர்தல் களத்தில் பா.ஜ.கவுக்குப் பலன் கொடுத்துள்ளது. வடமாநிலங்களில் பா.ஜ.க அசைக்கவே முடியாத சக்தியாக மாறி இருப்பதையே இத்தேர்தல் முடிவு காட்டுகிறது.
அடுத்து முக்கியமானது இன்னொரு விடயம்.
2014 ஆம் ஆண்டு முதலே வட இந்தியாவில் பா.ஜ.கவின் ஆதிக்கத்திற்குப் பெண்களின் ஆதரவே முக்கியமானதாக இருந்துள்ளது. இந்த முறையும் அதுவேதான் நடந்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களின் வாக்குகள் அதிகரித்து இருந்தன. இவ்வாக்குகள் பா.ஜ.க பக்கம் வந்ததே வெற்றிக்குக் காரணம்.
எஸ்.சாரங்கன்