பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவிலிருந்தே பாராளுமன்ற ஜனநாயகம் தோற்றம் பெற்றது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் கிழக்கு மற்றும் மேற்குலக நாடுகளில் ஏராளமானவை பிரித்தானியாவின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலையில், அந்தந்த நாடுகள் சுதந்திரம் அடைந்த பின்னரும் பிரித்தானியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட பாராளுமன்ற ஜனநாயக முறைமையை ஏற்றுக்கொண்டு அதனைப் பின்பற்றி நிர்வாகம் செய்யத் தொடங்கியிருந்தன.
குறிப்பாக நாடொன்றின் ஆட்சிமுறையானது பெரும்பாலும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகிறது. தற்போது பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் ஜனநாயகத்தை தங்கள் அரசாங்க வடிவமாக தேர்ந்தெடுத்துள்ளன.
ஒரு நாட்டில் ஜனநாயகம் திறம்பட செயற்படுவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டு முக்கிய கூறுகள் அல்லது ஒருங்கிணைந்த பகுதிகள் இருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் சில சமயங்களில் ஆட்சியைப் பிடிக்க சில ஜனநாயகக் கட்சிகள் கூட்டணி அமைத்து, எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்வதை சமீப காலமாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மக்னாகாட்டா ஒப்பந்தம் மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்திய முதல் நாடு பிரித்தானியா. அதிகாரத்தில் இருக்கும் கட்சி எதுவாக இருந்தாலும், ஐக்கிய இராச்சியத்தில் அதாவது பிரித்தானியாவில் ஜனநாயகம் என்பது நடைமுறையில் தூயவடிவில் பலப்படுத்தப்பட்டது.
இந்தப் பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையின் கீழ் தேசத்தின் நலனில் எதிர்க்கட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறான நாடுகளில் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியுடன் நல்லுறவைப் பேணும் அதேநேரம், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து விடயங்களையும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் என்ற பொதுவான எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.
தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அல்லது தேசிய பாதுகாப்பு அல்லது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் எதிர்க்கட்சி எப்போதும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் அல்லது தேசத்தின் பெரிய நலனுக்காக கட்சிக் கொள்கைகளை தற்காலிகமாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது பின்பற்றப்பட்டு வரும் சம்பிரதாயமாகும்.
இந்த ஜனநாயகத் தன்மை இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியாவில் தெளிவாகப் புலப்பட்டிருந்தது. இலங்கையை எடுத்துக் கொண்டால் பல தசாப்தங்களுக்கு முன்னர் இக்கட்டான சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் பூரண ஒத்துழைப்பு வழங்கியதை மறுக்க முடியாது.
அரசியல் ரீதியாக ஏற்படக் கூடிய பாரிய பாதிப்புக்களிலிருந்து ஆளும் கட்சிகளை எதிர்க்கட்சிகள் காப்பாற்றிய பல நிகழ்வுகள் பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையைக் கொண்ட நாடுகளில் காணப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்த தெரிவுக் குழுக்களில் தமது தீவிரமான பங்களிப்பைச் செலுத்தி தூய்மையான நிர்வாகத்திற்கான பங்களிப்பைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் முக்கியமான விடயங்களில் எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எப்போதும் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆளும் கட்சியால் செயற்படுத்தப்படும் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் கைகொடுக்குமென்பது நம்பிக்ைகயாகும்.
எதிர்க்கட்சிகள் எப்போதுமே அமைச்சுக்கள் மற்றும் துறைகளின் செயற்பாடுகளை ஆராய்வதுடன் தொடர்புடைய மற்றும் துல்லியமான தகவல்களை பொதுமக்களின் முன்பாக வெளிப்படுத்தவும் வேண்டும். அதன் பங்குதாரர்களின் எந்தவொரு பிரிவினருக்கும் அல்லது பிரிவினருக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு தன்னிச்சையான முறையிலும் அதிகாரிகள் செயற்பட இடமளிக்காது இருக்க உதவும்.
இவ்வாறான பின்னணியில் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடு என்ற ரீதியில் சுதந்திரத்துக்குப் பின்னரான ஆரம்பகாலப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகள் ஆக்கபூர்வமான விமர்சனங்களைக் கொண்டவையாக இருந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் வாய்மூலமான கருத்துப் பரிமாற்றங்கள் கடுமையாக இருந்தாலும் பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவை அமைந்திருந்தன.
முன்னைய நாட்களில் அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அனைவருமே நன்கு படித்த, கண்ணியமான மற்றும் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருந்து பண்பட்ட அரசியல்வாதிகளாகவும், மக்கள் மத்தியில் மரியாதையைப் பெற்ற நபர்களாகவும் இருந்தனர். அவர்கள் கொள்கை விடயங்களில் சபைக்குள் காரசாரமான வாக்குவாதங்களை மேற்கொண்டனர், ஆனால் அவர்கள் ஒருபோதும் பாராளுமன்றத்தில் பயன்படுத்தத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை அல்லது தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களை இழிவுபடுத்துவதற்காக சபையில் உள்ள எவருக்கும் எதிராகவும் அநாகரிகரமான அல்லது வெறுக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.
பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்கள் சரியான முறையில் பின்பற்றப்பட்டன.
சில அரசியல் தலைவர்கள் தங்கள் உண்மைகளை நிரூபிக்கவும், எதிர்நிலைப்பாட்டில் உள்ள தமது அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராகக் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வேடிக்கையான முறையில் கேலி செய்த சந்தர்ப்பங்கள் இருந்தன, ஆனால் ஒருபோதும் அசிங்கமான, அநாகரிகமான அல்லது வெறுக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.
இறுதியில் இந்தக் கருத்துக்களை சபையில் இருதரப்பினரும் ரசித்து கைகுலுக்கி அமைதியான முறையில் கலைந்து சென்றனர். இவ்வாறான சம்பிரதாயம் இலங்கைப் பாராளுமன்றத்தில் மாத்திரமன்றி பிரித்தானியப் பாராளுமன்றத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இருந்தபோதும், தற்பொழுது இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயற்பாடுகள் அன்றைய காலங்களுடன் ஒப்பிடுகையில் முற்றுமுழுதாக மாறுபட்டதாக அமைந்துள்ளன. பாராளுமன்றத்தில் அவ்வப்போது நடைபெறுகின்ற சம்பவங்கள் மற்றும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் பயன்படுத்தும் வார்த்தைகள், அவர்களின் நடத்தைகள் மோசமாக இருப்பது துரதிர்ஷ்டவசமாக அமைந்துள்ளன.
சிலருடைய செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும், பலவந்தம் மிக்கதாகவும் காணப்படுகின்றன. சில உறுப்பினர்கள் புனிதமான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை மற்றும் அவர்களின் அறியாமையை வெளிப்படுத்தி ஊடகங்களின் ஈர்ப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது.
இருந்தபோதும் 2022ஆம் ஆண்டில் மாற்றத்தை எதிர்பார்த்து வீதிக்கு இறங்கிப் போராடிய மக்கள் இந்த அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்திருந்தனர். அரசியல்வாதிகளில் சிலர் அரச சொத்துக்களை அபகரித்து அரசியலுக்கு வந்தவர்கள் என்ற கருத்து வாக்காளர்களாகிய நாட்டு மக்கள் மத்தியில் காணப்படுகிறது. மக்களின் இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் அமைந்து விடுகின்றன.
பாராளுமன்றத்தின் தரநிலையை உறுதிப்படுத்துவது தொடர்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டமூலம் குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. இது விடயத்தில் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. கொள்கை அளவில் பாராளுமன்றத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை தொடர்பில் இந்த வாரம் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒருமாத காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்ஜய் பெரேரா மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்தே இந்தத் தடை விதிக்கப்பட்டது.
இவர்கள் மூவர் சம்பந்தப்பட்ட விடயம் குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் விசாரிப்பதற்கு பிரதி சபாநாயகர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்ததுடன், இதன் அறிக்கை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே ஒரு மாத காலத் தடை விதிக்கப்பட்டது.
மக்கள் மத்தியில் பாராளுமன்றம் குறித்துக் காணப்படும் பார்வையை மாற்றுவதற்கு அரசியல்வாதிகள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய காலத்தில் சபையில் நடந்துகொள்ளும் விதம் மற்றும் பயன்படுத்தும் வார்த்தைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணமாக உள்ளது.