வரவு செலவுத் திட்டத்தில் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் தெளிவாக கூறியது அதேபோன்று அதிகரித்தும் உள்ளதே?
வரவு செலவுத் திட்ட காலங்களில் அரசாங்கம் சில விடயங்களை கூறும். அளவுகளையும் கணக்குகளையும் செய்யும். அவற்றில் மக்களுக்கு போதுமான அளவு ஏதும் இருந்தால் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நிறுத்தப்படும்.
இல்லையென்றால் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் இன்னும் அதிகரிக்கும். தற்போது தொழிற்சங்க கூட்டணி என்ன கேட்டது? 20000 ரூபாய் சம்பள அதிகரிப்பை கேட்டது. அரசாங்கம் என்ன செய்திருக்கிறது? 10000 ரூபாய் சம்பளம் அதிகரிப்பை வழங்கி இருக்கிறது. அதுவும் 2024 ஏப்ரல் மாதத்திலிருந்து.
ஏன் 20000 ரூபாயை கேட்கின்றீர்கள்? இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாயால் சம்பளத்தை அதிகரிப்பது போதுமானதாக இல்லையா?
அரசாங்கம் செய்யும் வரி அதிகரிப்பை பார்க்கும்போது எம்மால் அதில் திருப்தி அடைய முடியாது.
அரசாங்கம் தற்போது ஒரு குடும்பத்துக்கு 18 ஆயிரம் ரூபாய் மறைமுக வரியை அறவிடுகின்றது. அரசாங்கம் புதிதாக எதிர்பார்க்கும் வரி இலக்கின் அடிப்படையில் ஒரு குடும்பத்தில் மேலும் 12,300 ரூபாய் வரி அறவிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஒரு குடும்பத்தில் சுமார் 30 ஆயிரத்துக்கு அதிகமான வரியை அறவிட்டு 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் போதுமானதாக இல்லை.
எனினும் அரசாங்கம் நேரடி வரி செலுத்துவோரை தேடி அவர்களிடமிருந்து வரியை பெற்றுக் கொள்வதற்கான முறையான நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பெறுவதும் அரசாங்க மற்றும் தனியார் துறையின் சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் நேரடியாக அறவிடும் வரிகள் தானே? இந்த அரசாங்கத்தின் தெளிவான மூன்று முறைகளைக் காண முடிகிறது.
ஒன்று வரிகளை அதிகரித்தல். மற்றையது வளங்களை விற்றல். மூன்றாவது கடன் பெறுதல். இதற்கு வெளியில் வேறு எதுவும் வரவு செலவு திட்டத்திற்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை.
இதற்காக மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
கண்டிப்பாக மக்கள் எழுந்து நிற்பார்கள். போராட்டங்கள் நடத்துவார்கள். பல்வேறு நடவடிக்ைககளை முன்னெடுப்பார்கள்.
என்றாலும் இந்தப் போராட்டங்களை வழிநடத்தியது நீங்கள் தானே?
ஆம், மக்களுக்காக அரசாங்கம் முன்வராது விட்டால் நாம் மக்களுக்காக முன் வருவோம்.
எளிமையான கதை ஒன்றை எடுப்போமே. அன்றாடம் கூலி வேலை செய்யும் ஒருவரை எடுத்துக் கொள்வோம். பொருட்களின் விலைகள் அதிகம் என்பதால் அவரின் நாள் கூலியை அதிகரிப்பார். தென்னை மரம் ஏறுபவரை எடுத்துக் கொண்டால் அவரும் ஒரு மரத்துக்கான கூலியை அதிகரிப்பார். சலூனில் முடி வெட்டுபவரும் கட்டணத்தை அதிகரிப்பார். முச்சக்கர வண்டி ஓட்டுநர்களும் தங்களது கட்டணத்தை அதிகரிப்பார்கள்.
அப்படியாயின் தங்களது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் தரப்பினர் யார்?
அவர்கள் அரசாங்க துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களும் தோட்டத் தொழிலாளர்களும் ஆகும். கடந்த நான்கு வருடங்களில் அவர்களுக்கு எந்த விதமான நிவாரணங்களும் கிடைக்கவில்லை. அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் சொகுசாக வாழ்கிறார்கள் என்பது அர்த்தமல்ல. அரசாங்க மற்றும் தனியார் துறை மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்காகவே தொழிற்சங்கங்கள் முன் நிற்கின்றன.
தாயக விக்ரமசேகர தமிழில் - எம். எஸ். முஸப்பிர்