ஜனாதிபதி அண்மையில் பல வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். தற்போது சர்வதேச ரீதியில் எமக்கு கிடைத்துள்ள நலன்கள் எவை?
பாரிஸ் கிளப்பின் 14 நாடுகள் மற்றும் இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளின் கடன் மறுசீரமைப்புக்கான இணக்கம் இதுவரை எங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும். இது ஒரு அதிசயமாக சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.
ஒரு நீண்ட செயல்முறையை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க எம்மால் முடிந்துள்ளது. இது நம் நாட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
மேலும், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுடனும், மத்திய கிழக்கு, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுடனும் நல்ல இருதரப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள எம்மால் முடிந்துள்ளது. இதன் ஊடாக தொழில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
முதலீட்டு சந்தர்ப்பங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாத் துறைக்கான பின்புலத்தை உருவாக்கும் விமான பயணத்திற்கான சந்தர்ப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி சர்வதேச ரீதியில் இந்த செயற்பாடுகளை மிகவும் சிறப்பான முறையில் முகாமைத்துவம் செய்கிறார்.
அண்மையில் ஜனாதிபதியின் துபாய்க்கான விஜயத்தில் பெரும் நன்மைகள் கிடைத்துள்ளன. இது பற்றி கூறுங்களேன்?
இந்த விஜயத்தின் போது எமக்கு கிடைத்த நன்மைகள் ஏராளம் உள்ளன. மிகவும் பிரச்சினைக்குரிய ஒன்றான காலநிலை மாற்றம் தொடர்பில் அதிகமானோர் பேசினாலும் அதற்கு தீர்வுகள் வழங்குவதில்லை. காலநிலை மாற்ற நீதி மையத்தை நாங்கள் முன்மொழிந்தோம். அதன் ஊடாக அனைத்து நாடுகளையும் ஒன்று சேர்த்துக்கொண்டு அதற்காக குரல் எழுப்ப முடியும். 1983ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே குரல் எழுப்பிய நாடு. அவ்வாறான ஒன்றை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு இந்த சுற்றுப்பயணத்தில் எம்மால் முடிந்தது.
தற்போது, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்டத்தின் முடிவை அரசாங்கம் வெற்றிகரமாக நெருங்கியுள்ளது. இரண்டாவது கடன் தவணை எப்போது வழங்கப்படும்?
சர்வதேச நாளைய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை நிச்சயமாக இந்த மாதத்தில் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இதன் ஊடாக சர்வதேச சமூகத்திற்கு எமது நாடு தொடர்பில் பாரிய நம்பிக்கை ஏற்படும் என்று நான் நம்புகிறேன். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நாம் எந்த அளவு சரியான பாதையில் சென்றிருக்கிறோம் என்பதை எவராலும் பார்க்க முடியும். ஏப்ரல் மாதத்தில் நாம் அரசை பொறுப்பேற்கும் போது எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை இருந்தது. நாடு முழுதும் பல்வேறு வரிசைகளில் மக்கள் அவதிப்பட்டார்கள். 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொழிற்சாலைகள் முடங்கின. மின்சாரம், எரிபொருள் இல்லாமையால் எமது நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருவது தடைப்பட்டிருந்தது. மருந்துகளுக்கும் உரங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. டொலர் இல்லாமல் சமையல் எரிவாயு இறக்குமதி செய்ய முடியாமல் போனது. இன்றைய நிலை முற்றிலும் மாற்றமானது. இன்று நாம் பண வீக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளோம். வரிசைகளை இல்லாமலாக்கி உள்ளோம். சுற்றுலா பயணிகள் மீண்டும் நாட்டுக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை பார்க்கும் போது எமது பயணம் சரியானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் குழுவின் சாதகமான பதில்களைக் குறிப்பிட்டால்? IMF இன் இரண்டாம் தவணைக்கு இந்த நிலை எந்தளவிற்கு வெற்றிகரமான பதிலாக இருக்கும்?
முதலாம் கடன் தவணையிலிருந்து இரண்டாம் தவணை வரை நாம் மிகுந்த கஷ்டமான பயணத்தை கடந்து வந்திருக்கிறோம். இவ்வாறான கஷ்டமான பயணத்தை கடந்த வெனிசுவேலா, ஆர்ஜன்டீனா, சிம்பாப்பே, லெபனான் போன்ற நாடுகள் 10 முதல் -15 வருடங்கள் வீழ்ந்திருந்த நாடுகளாகும். இன்னமும் அவர்களால் எழுந்திருக்க முடியாத நிலை உள்ளது. அந்த வகையில் பார்க்கும்போது நாம் வெற்றியடைந்து இருக்கிறோம். கஷ்டமான பயணத்தை சரியான முகாமைத்துவத்துடன் கடந்து வந்துள்ளோம்.
சுபாஷிணி ஜயரட்ன தமிழில் - எம். எஸ். முஸப்பிர்