Home » சம்பள முன்மொழிவு என்பது தற்காலிக தீர்வாகவே அமையும்
ஜனாதிபதியின் யோசனையை வரவேற்கிறோம்

சம்பள முன்மொழிவு என்பது தற்காலிக தீர்வாகவே அமையும்

எமக்கு நிரந்தர தீர்வு அவசியமென்கிறார் அமைச்சர் ஜீவன்

by Damith Pushpika
December 10, 2023 7:30 am 0 comment

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பள முறைமை மாற்றப்பட வேண்டுமென்பதுடன், அவர்களுக்கு நியாயமான வருமானமும் இலாபமும் கிடைக்கக்கூடிய வகையில் புதிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை தாம் முன்னெடுப்பதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து தாம் உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஜனாதிபதி தெரியப்படுத்தியுள்ளார். அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் சம்பள உயர்வு அவசியமெனவும் ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் இம்முயற்சியை, யோசனையை தாம் வரவேற்பதாகவும், அமைச்சர் மேலும் தெரிவித்தார். கொட்டகலையில் நேற்று முன்தினம் (08) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்த போது, “கூட்டு ஒப்பந்த முறைமையினூடாக குறைந்தபட்ச நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறும் அவ்வாறில்லையெனின், மாற்று முன்மொழிவை டிசெம்பர் 31ஆம் திகதியினுள் முன்வைக்குமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார். ஆயிரத்து 700, 2 ஆயிரமென இலக்கங்களை மையப்படுத்தாமல், நாள் சம்பள முறைமையிலிருந்து மாற வேண்டும். இந்த விடயத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சம்பள முன்மொழிவென்பது தற்காலிக தீர்வாகவே அமையும். எமக்கு நிரந்தர தீர்வு அவசியம். எமது மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வருமானம் கிடைக்கும் வகையில் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம். சிவில் அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் பேச்சு நடத்தி வருகின்றோம். எமது அமைச்சினூடாகவும் சம்பள பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. கூட்டு ஒப்பந்தத்தின் அவசியத்தை அதை விமர்சித்த தரப்புகளே இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே, அந்த முறைமை மீண்டும் வரும்” என்றார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division