அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய சுமார் 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான வரித்தொகையை இல்லாமல் செய்து, நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு வாகனங்கள் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.
சட்டத்துக்கு முரணான இந்த வாகன இறக்குமதி வர்த்தகம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் (08) அறிவித்தனர்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி தரவுக் கட்டமைப்பில் தவறான தகவல்களை உட்புகுத்தி, இலங்கை சுங்கத்தின் முறையான அனுமதியின்றி, இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 200 சொகுசு வாகனங்கள் தொடர்பான விசாரணையின் போது, ஒவ்வொரு வாகனமும் இலங்கைக்கு வெவ்வேறு பொருட்கள் மற்றும் ஏனைய வகை வாகனங்களைக் கொண்டுவரும் போர்வையில் இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
KA 1141 இலக்கத்தின் கீழ் முறையற்ற முறையில் பதிவு செய்யப்பட்ட டொயோட்டா ரக ஜீப் மற்றும் GF 8409 இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட லேண்ட் குரூஸர் ரக ஜீப் இறக்குமதி செய்யப்பட்டு, சுங்க மோசடியில் ஈடுபட்டமை காரணமாக இலங்கை அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய 500 கோடி ரூபா வரி இழக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றில் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். 2001ஆம் ஆண்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட GF 8409 இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட Land Cruiser ரக ஜீப் வண்டி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இலக்கம் 81, Barnes Place, Colombo -07 என்ற முகவரியில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விசாரணையின் போது 2022ஆம் ஆண்டில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சாதாரண ஒரு பிரஜையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 ஜூலை 4 இல் பதிவு செய்யப்பட்ட கே. ஏ. 1141 என்ற இலக்க டொயோட்டா ரக ஜீப்புக்கு வருமான அனுமதிப்பத்திரமோ, சொகுசு வாகன வரியோ, இலக்கத் தகடோ 2015ஆம் ஆண்டு டிசெம்பர் 22ஆம் திகதி முதல் வழங்கப்படவில்லையென்பதுடன், இந்த வாகனம் இலங்கை சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதா என விசாரணை செய்த போது, இறப்பர் மற்றும் அதனுடன் தொடர்பான தயாரிப்புகள் கொண்டு வரப்பட்டமைக்கான பதிவுகள் காணப்பட்டுள்ள தகவல்களை நீதிமன்றில் மேற்படி பிரிவினர் சமர்ப்பித்தனர்.
இந்த இரண்டு வாகனங்களையும் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் போது, 235ஆவது அதிகார சபையின் சுங்க கட்டளைச் சட்டம், 136 பிரிவு மற்றும் 137ஆம் பிரிவு தொடர்பான விசாரணைக்காக, தற்போது சாதாரண பிரஜைகளின் பாதுகாப்பிலுள்ள இந்த வாகனங்களை இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதற்கமைய உரிய உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை டிசெம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.