இந்த வருட இறுதியினுள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள அனைத்து நட்டஈடும் வழங்கி நிறைவு செய்யப்படுமென, விவசாய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அத்துடன், பண்டிகைக் காலமென்பதால் சற்று விலை அதிகரித்துள்ள கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை அடுத்த மாதத்தில் குறையுமெனவும், அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவசாய, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுகளுக்கான வரவு -செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுக் குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முட்டை விலை 70 ரூபாவரையும் கோழி இறைச்சி 1,700 ரூபாவரையும் சென்றது. நாம் குற்றச்சாட்டுகள் விமர்சனங்களுக்கு மத்தியிலும் முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம்.
அந்த வகையில் தற்போது பண்டிகைக்காலமென்பதால் முட்டை, கோழி இறைச்சி விலை சற்று அதிகரித்தாலும், ஜனவரி முதல் விலை குறையும். அதற்குப் பின்னர் விலை அதிகரிப்பதற்கான எந்த அவசியமும் இருக்காது. உற்பத்திகளும் அதிகரிக்கும். நாம் இப்போதும் இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றை இறக்குமதி செய்து வருகின்றோம். 2024 ஆம் ஆண்டு எமது இலக்கின்படி எமது உற்பத்தியான கோழி இறைச்சியையும் முட்டையையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்போம்.
பெருந்தோட்டக் கைத்தொழில் துறையைப் பொறுத்தவரையில் நான் புதிதாக அந்த அமைச்சை பொறுப்பேற்றுள்ளேன்.தேயிலை உற்பத்தியை அதிகரித்து அதன் மூலமான வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கறுவா மூலமான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான அதிகார சபை ஒன்றை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் தெங்குப் பயிர்ச்செய்கையை ஊக்குவித்து அதன் மூலமாக வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கான நட்ட ஈடுகள் முறையாக வழங்கப்படும். அதில் எந்த தடையும் கிடையாது. இதுவரை காலமும் பல வருடங்களுக்கு பின்னரே நட்ட ஈடு வழங்கப்பட்டது. எனினும் நாம் உரிய காலத்தில் அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்