ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படுமென, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதேவேளை, மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனையை எதிர்க்கட்சியினர் முன்வைக்க வேண்டுமெனவும், அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தினார்.
மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் சில குறைபாடுகள் காணப்படுவதால், திருத்தத்துடன் அவ்வர்த்தமானி அறிவித்தல் மீள வெளியிடப்படுமெனவும், அமைச்சர் தெரிவித்தார்.
இந்தச் சட்டமூலம் முதல் வாசிப்புக்காக எதிர்வரும் 12 அல்லது 13ஆம் திகதியில் சபையில் சமர்ப்பிக்கப்பட இருந்த போதும், அத்தினத்தில் அச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட மாட்டாதெனவும், அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, “மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் சபையில் முன்வைக்கும் கருத்துகள் அடிப்படையற்றவை. மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பாக கடந்த 14 மாதகாலமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்க துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது.
மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள 225 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தேன். எனினும், அவர்களில் 12 பேர் மாத்திரமே அதற்கான கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர்களாக பதவி வகித்த கரு ஜயசூரிய, ரவி கருணாநாயக்க, அஜித் பெரேரா ஆகியோரும் தமது ஆலோசனைகளை முன்வைத்தனர். மின்சாரத்துறையுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லையென்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின்சார சபையுடன் தொடர்புடைய 34 தொழிற்சங்கங்களுடனும் 4 தடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டேன். வேண்டுமாயின் அதன் காணொளியையும் என்னால் வழங்க முடியும்.
அதேபோன்று மின்சார சபையின் 114 உயர்மட்ட அதிகாரிகளுடனும், மனிதவள பிரிவிடமும் 3 முறைகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இந்த மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண உட்பட குழுவின் உறுப்பினர்கள் கொடுப்பனவுகள் எதையும் பெற்றுக்கொள்ளாமலே இந்தக் குழுவில் பணியாற்றினர்.
மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில், ஒருசில குறைப்பாடுகள் காணப்படுவதை ஏற்றுக்கொள்கிறோம்.
அத்துடன், தமிழ் மொழிபெயர்ப்பில் 2 உறுப்புரைகள் நீக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில், இந்த வர்த்தமானியில் முன்னெடுக்கப்பட வேண்டிய 42 திருத்தங்களை சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். திருத்தங்களுடன் வர்த்தமானி மீண்டும் வெளியிடப்படும்.
பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்ய முன்னர் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜெய்கா நிறுவனம் ஆகிய சர்வதேச நிறுவனங்களிடம் தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொண்டுள்ளோம்.
மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான குழுவை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்கு அழைக்குமாறு எதிரணி உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்தக் குழுவை நானே நியமித்தேன். அமைச்சர் என்ற ரீதியில் நானே பொறுப்புக்கூற வேண்டும். ஆகவே, என்னை சிறப்புரிமைக் குழுவுக்கு அழைக்கலாம்.
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மின்சார சபை சட்டத்தை திருத்தம் செய்யாமல் மின்கட்டமைப்பில் எவ்வித முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டிருந்தது.
மழை வீழ்ச்சி அதிகளவில் கிடைத்துள்ளதால் அடுத்த மாதம் மின் கட்டணத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை எதிரணியினர் எதிர்வரும் 12ஆம் திகதி முன்வைக்க வேண்டும்” என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்