லோரன்ஸ் செல்வநாயகம்
தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டத்தை அடுத்த வருடம் நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். சட்டமூலம் தயாரிக்கும் நடவடிக்கை தற்போது நிறைவாகியுள்ளதைத் தொடர்ந்து அடுத்த வருடத்தில் அதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதன் மூலம் சிறந்த ஊடகக் கலாசாரம் உருவாக்கப்படுமென்றார்.
இந்நிலையில், எந்த ஊடக நிறுவனங்களுக்கும் இதன் மூலம் எத்தகைய பாதிப்பும் ஏற்படாதென்பதுடன், எந்த ஊடக நிறுவனமும் தடை செய்யப்பட மாட்டாதெனவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஊடகத்துறை அமைச்சின் கீழ் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அடுத்த வருடத்தில் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டு சமூகவிரோத செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், ஊடக நெறிமுறையைக் கடைப்பிடிப்பதற்கு ஊடகங்கள் நியாயமான முறையில் கண்காணிக்கப்பட வேண்டுமென்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (08) 2024ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் ஊடகத்துறை மற்றும் துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சினுடைய செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “எமது அமைச்சின் கீழியங்கும் நிறுவனங்கள் நீண்டகாலமாக நட்டத்தில் இயங்குவதுடன், அவற்றை ஆபத்து முகாமைத்துவம் செய்து இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் கடந்த வருடத்தில் 541 மில்லியன் ரூபா நட்டம் அடைந்ததுடன், தற்போது அதன் நட்டத்தை 274 மில்லியன் ரூபாயாக குறைக்க முடிந்துள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடந்த வருடத்தில் 239 மில்லியன் ரூபா நட்டம் அடைந்ததுடன், தற்போது அதன் நட்டத்தை 147 மில்லியன் ரூபாயாக குறைக்க முடிந்துள்ளது. அதேபோன்று, ஐ.ரி.என் நிறுவனம் கடந்த வருடத்தில் 361 மில்லியன் ரூபா நட்டம் அடைந்ததுடன், தற்போது அதன் நட்டத்தை 181 மில்லியன் ரூபாயாக குறைக்க முடிந்துள்ளது. லேக்ஹவுஸ் நிறுவனம் 198 மில்லியன் ரூபா நட்டம் அடைந்ததுடன், தற்போது 66 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. தபால் திணைக்களம் 7 பில்லியன் ரூபா நட்டம் அடைந்ததுடன், தற்போது அது 2 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டுவதாக மாற்ற முடிந்துள்ளது. இலங்கை மன்றக் கல்லூரியின் நட்டத்தையும் குறைக்க முடிந்துள்ளது.
இந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக சுய விருப்பின் அடிப்படையில் ஊழியர்கள் சேவையிலிருந்து விலகியதால், அடுத்த வருடத்தில் இந்த நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற முடியும்.
நாம் அரசியல் பழிவாங்கலின்றி அனைவரும் சுயாதீனமாக செயற்பட சந்தர்ப்பம் வழங்கியுள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகள் கொள்கை ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது தொடர்பான சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், அதனை அடுத்த வருடத்தில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு குறைந்தளவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான சம்பளத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வதில்லை. அரச நிதியை மோசடி செய்யாமல் அரசியலில் ஈடுபடுபவன் நான். எனினும், நாட்டில் நிலவிய குழப்ப சூழ்நிலையின் போது எனது வீடும் தீக்கிரையாக்கப்பட்டது.
பொருளாதார பாதிப்புக்கு முன்னைய காலப்பகுதியிலும், அதன் பின்னைய காலப்பகுதியிலும் ஊடகங்களின் செயற்பாடுகள் அவதானத்துக்குரியவை. ஒருசில ஊடகவியலாளர்களும் ஊடகவியலாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களும் தமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காகவும் பழிவாங்கலுக்காகவும் ஊடகத்துறையை பயன்படுத்துகின்றனர்.
சமூக ஊடகங்களின் செயற்பாட்டால், இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாலியல் துஷ்பிரயோகங்கள், சமூகவிரோத செயற்பாடுகள், சமூக ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டே இடம்பெறுகின்றன. அந்த வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை கண்காணித்து, வினைத்திறனான சேவைகளை முன்னெடுக்கவே ஒளி மற்றும் ஒலி ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் தயாரிக்கப்பட்டது.
எந்த ஊடகத்தையும் இலக்காகக் கொண்டு இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கமையவே இந்தச் சட்டமூலத்தை உருவாக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அந்த ஆலோசனைக்கமையவே இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலத்தை அடுத்த ஆண்டு செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.