வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய வருகையை கட்டுப்படுத்த இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தாம் வலியுறுத்துவதாக, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புகளின் சமாசத் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய நடவடிக்கைகள் அதிகரிக்குமாயின், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரித்த போது,
“கடந்த 6ஆம் திகதி யாழ். மாவட்ட கடற்பரப்பில் அத்துமீறி வந்த இந்திய ரோலர் படகுகளால் எமது கடற்றொழிலாளர்களின் சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் அறுத்து நாசம் செய்யப்பட்டன.
இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்களால், பல வருடகாலமாக எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கடற்றொழில் உபகரணங்களையும் இழந்த நிலையில் அவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையால் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்ற நிலையில், இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை” என்றார்.
கோப்பாய் குறூப் நிருபர்