ஆங்கிலேய காலனித்துவ ஆளுகையில் சிலோன் சிறைப்பட்டிருந்த 1932ஆம் ஆண்டு தலைநகரிலுள்ள தற்துணிவும் மிடுக்கும் நிறை வீர மங்கையர்கரசிகளால் சைவ மங்கையர் கழகம் எனும் நாமகரணத்துடன் வெறுமனே 7 மாணவிகளுடன் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு பாடசாலை இன்று சுமார் 2400 மாணவிகளுடன் தலைநிமிர்ந்து வீறுநடை பயில்கின்றது. தாமரைத் தடாகத் திரையரங்கில் நிகழ்வொன்றை நடத்தி அதனையும் பெருநிகழ்வாய் வடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமுள்ள பலரையும் அண்ணார்ந்து பார்த்து வியக்க வைத்துள்ளது.
வழமையாய் அரசாங்கத்தின் பெரு அரச நிகழ்வுகளும் வெளிநாட்டுத் தூதரகங்கள், பெரு வணிக நிறுவனங்களின் பிரமாண்ட நிகழ்வுகளும், ஏன் தேசிய விருது வழங்கல் விழாக்களும் மட்டுமே இத்தனை காலம் தாமரைத் தடாக திரையரங்கில் மேடையேற்றப்பட்டன. சனாதன தர்மத்தில் வேரூன்றிய ஒரு தமிழ் மகளிர் பாடசாலை விழா நடத்துவதெல்லாம் காலம் கடந்தும் வாழும் மாபெரும் சாதனைதான்.
கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்! இந்த அளவற்ற தனிப்பெரும் புகழுக்கு பாத்திரமானதுடன் வரலாற்றிலும் இணைந்து கொண்டமை எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
‘பதுமம் 2023’ நிகழ்வினை கொழும்பு தாமரைத் தடாக திரையரங்கில் 5 மணியிலிருந்து 9.25 வரை வெற்றிவாகை சூடி இனிதே நடத்திய சைவ மங்கையர் வித்தியாலயத்தை கொண்டாடித் தீர்ப்பது காலத்தின் தேவை மட்டுமன்றி, வரலாற்றுக் கடமைகளிலும் ஒன்றெனும் கூற்றை நிகழ்வை நேரில் கண்டு வியந்தோர் நிச்சயம் ஆமோதிப்பர்.
“சுமார் 830 மாணவிகள் பதுமத்தில் பங்கேற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. அழகியல் நேரான எண்ணங்களைத் தருகின்றது. சகலவிதமான பண்புகளையும் மாணவிகளிடையே வளர்க்கின்றது. அழகியல் வெவ்வேறு கலைவடிவங்களினூடாக அற்புதங்களை நிகழ்த்தவல்லது என்பதை இங்கு நாம் கண்டோம். எதிர்வரும் நாட்களில் வெவ்வேறு வழிகளில் இந்திய அரசாங்கமும் இந்திய உயர்ஸ்தானிகராலயமும் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் என்பதை அறியத் தருகின்றேன்” பதுமத்தின் பிரதம விருந்தினர் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா இந்திய கலாசார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர்.கலாநிதி. அங்குரான் டட்டா பிரதம விருந்தினர் உரையில் சைவ மங்கையர் வித்தியாலயத்தின் மீது பாரதத்தின் கடைக்கண் பார்வை பதிந்திருப்பதை சங்கேதமாய்ச் சொன்னார்.
வட , கிழக்கு மாகாணத்தின் ஓய்வுநிலை அழகியற்துறைப் பிரதிப் பணிப்பாளர் கலைஞர் வேல் ஆனந்தன், பதுமத்தை ரசித்து ருசித்து கலைப்பசி ஆறியமைக்கு அவர் அருகே அமர்ந்திருந்த அனைவருமே சான்று. நிகழ்ச்சிகள் முதற்தரம் என்பதே அன்றைய அவரின் முன்மொழிவாகவும் நிச்சயம் இருந்திருக்கும்.
” 90 ஆண்டுகள் பெண்களால் பெண்களுக்காக ஆளப்படும் பாடசாலை இது. எமது மாணவிகளின் உடல், உளநலன் விருத்தியைக் கருத்திற் கொண்டு விளையாட்டு கட்டடத்தொகுதியை வடிவமைக்கும் பணியை முன்னெடுக்கின்றோம். என வரிக்கு ஒரு தடவை இறையை போற்றிப் புகழ்ந்த சைவமங்கையர் வித்தியாலயத்தின் முகாமையாளர் சட்டத்தரணி செல்வி மாலா சபாரட்ணம், பள்ளியின் அத்தனை வெற்றிகளினதும் நதி மூலமும் ரிஷி மூலமும் இறையே என்பதை மீளவும் மிடுக்குடன் பதுமத்தில் கனிவாய் வலியுறுத்தினார்.
மும்முனைக் கலைக் கதம்பமாய் முப்பரிமாண நிகழ்ச்சி நிரல் சிருஷ்டிக்கப்பட்டிருந்தது.
முதற் பரிமாணத்தின் கீழ் முன்தோன்றிய மூத்தமொழியின் அழகை எடுத்தியம்பும் வண்ணம்இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் சுவை சிறிதளவேனும் குன்றாமல் நிகழ்ச்சிகள் அரங்கேறி அவைக்கு அடங்கி அவை அடக்கி கண்டோர் அகம், புறம் ஈர்த்து கரகோஷ மழை பொழியச் செய்தது.
இரண்டாவது பரிமாணத்தின் கீழ் காண்போரை வியக்க வைக்கும் அரங்காற்றுகை, ஆடல், பாடல், நிகழ்வுகள் கூந்தல்வாரி கொண்டை முடித்து மல்லிகை, முல்லை, மாலை சூடும் வனிதையர்நாம் சீன, போர்த்துக்கீச, மேற்கத்தேய கலாசாரக் கலைகளிலும் வல்லோம் என்பதை அரங்கிற்கு பறசைாற்றி பெரும்பாராட்டு மழையில் ஆழ்த்தின.
மூன்றாவது பரிமாணமாய் சிங்களப் பெருமக்கள் கலையிலும் எம் சிங்கப் பெண்கள் சளைத்தோர் அல்லர் என்பதை பிரதிபலிக்கும் நல்லிணக்கத்தின் அடையாளமாய் படைக்கப்பட்ட நிகழ்வுகள் அவையின் நன்மதிப்பைப் பெறுவதற்குத் தவறவில்லை.
மாணவியரின் மும்மொழி அறிவிப்பு அதிஉத்தமம். நிகழ்ச்சிக்கான அகலத்திரை, மேடை வடிவமைப்பு அற்புதம். வர்ண விளக்கொளி மாயாஜாலம் அதியற்புதம். பக்கவாத்தியம் உயர்ரகம். நட்டுவாங்கம் தனிரகம். ஆசிரியர்களின் பின்னணிக் குரல் ஆத்மார்த்தம். நெறியாள்கை பூரணம். விருந்தோம்பல் பரிபூரணம். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து மூத்தோர், கற்றோர், பெற்றோர், விருந்தினரின் குறிப்பறிந்து இங்கிதமாய்வழிநடாத்திய கறுப்பாடை உடுத்து நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்த கருவேங்கை நிகர்த்த மங்கை நல்லாள்படை அபாரம்.
நிகழ்ச்சியில் அரங்கேறிய சுமார் 800 மாணவர்களையும் கீழிமையை ஓயாது சேர்ந்து காக்கும் மேல் இமையாய் இமைப்பொழுதும் பிரியாது காத்து நிகழ்வு முடிந்த பின்னர் எவ்வித விக்கினமும் இன்றி பெற்றோர் கரம் சேர்த்த ஆசிரியப்படையணியும் ஒழுக்கமும் அமைதியும் காத்த பெற்றோரின் பெருமித உணர்வும் எங்ஙனம் வியந்தாலும் அவை சொல்லத்தரமாகும்.
எப்படி இருந்திருக்கும் நிகழ்ச்சிகள் என மனக்குதிரையை கடிவாளம் இன்றி ஓட விடும் உங்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் அறுசுவை குறையாத பெரு விருந்து வேண்டுமாயின் Hindu Ladies College| (Saiva Mangaiyar Vidyalayam) எனும் FACE BOOKக்கு இப்போதே பிரவேசித்தால் அந்த மாபெரும் நிகழ்வின் நிகழ்ச்சிகளை கண்டு நீவிர் களிக்கலாம்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல். (திருக்குறள் 517) எனும் தெய்வத் திருக்குறளுக்கு அமைய பதுமத்தின் இத்தனை பணியையும் இவர் முடிப்பார் எனக் கருதி அதனை அவர்பால் ஒப்படைத்து தலைமை வகித்த அதிபர் திருமதி. அருந்ததி இராஜவிஜயனின் சாணக்கியத்தையும் அவரைத் தெரிந்ததால் இன்று உச்சிகுளிரும் சைவ மங்கையர் கழகத்தின் முகாமைத்துவத்தின் தீர்க்கதரிசனமும் அரங்கு வந்த ஆன்றோரை நிச்சயம் வியந்து போற்றச் செய்திருக்கும்.
பல்துறைகளிலும் வித்தகம் கொண்ட நூற்றுக் கணக்கான மங்கையர்கரசிகள் பழைய மாணவியராயும் இரசிகர்களாயும் தாமரைத் தடாக திரை அரங்கை நிறைந்திருந்தது பாக்கியம். அன்று அதுவோர் கண்கொள்ளாக் காட்சியும்கூட. நிறைவாக பதுமத்திற்கு வந்திருந்த பெற்றோர்கள் அனைவரும் அப்பாடா மகளை கரைசேர்த்து விட்டோம். இங்கிவள் கற்பதால் நாம் இல்லாவிட்டாலும் எம் புதல்வி இந்த நீளுலகில் இனிதிருப்பாள். மற்றவர் பயன்பெற இனித்திருப்பாள் என்பதை நிச்சயம் எண்ணத்தில் நிறுத்தி கன்னத்தில் நீர் சொரிந்திருப்பார்கள், என்பதில் வேறென்ன சந்தேகம் வேண்டியிருக்கின்றது உங்களுக்கு?
“தையல் பிறப்பே தகைமைசால் பிறப்பு ”
“நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்”
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்”
“வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” எனும் ஏதேனும் ஒரு கவி வரி நிச்சயம் பதுமத்தை நேரடியாய் பார்த்தவர்களின் மண்டைக்குள் மனசில்ஒரு மின்னல் வேகத்தில் வந்து போயிருக்கும் என்பது திண்ணம். பெண் பிள்ளைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அவர்களை கொண்டாடும் கல்விசாலைகள் போற்றுதற்குரியன. பதுமம் 2024 இன் பாலபாடங்கள் இவை.
இலங்கையில் ஏறக்கூடிய அதியுயர் மேடையான கொழும்பு தாமரைத் தடாகம் திரையரங்கில் அரங்கேறியகொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் சாதனைப் பெண்களுக்கு இனி மேற்குலகின் மேடைகளும் வானமும் தானே எல்லை.
ஈற்றில் பதுமம் – தாமரை, அழகு, முருகு, பெருநிதி நிறைவாய் பொக்கிஷம். இனி ஆண்டாண்டு அரங்கேறி நிறைவேற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை.
இங்ஙனம் தமிழ் தெரிந்த ஊடகப் பெற்றோன்
இராஜேந்திரன் கோகுல்நாத்