கொழும்பில் உள்ள சார்க் கலாசார நிலையத்தின் 13ஆவது நிர்வாக சபை கூட்டம் நவம்பர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
பங்களாதேஷ், மாலைதீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர், பூட்டான், இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள் ஆன்லைனில் இணைந்தனர்.
நிர்வாக சபை உறுப்பினர்களான பங்களாதேஷ் கலாசார அலுவல்கள் அமைச்சின் இணைச் செயலாளர் (நிர்வாகம்)மிசனூர் ரஹ்மான்
(Mizanur Rahman), பூட்டான் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட திட்ட அதிகாரி டிசேரின் சொக்கி (Tshering Choki), இந்திய கலாசார விவகார அமைச்சின் சர்வதேச கலாசார விவகார ஒருங்கிணைப்பு தொடர்பான பணிப்பாளர் யாஷ் வீர் சிங் (Yash Veer Singh), மாலைதீவு மொழி, கலாசாரம் மற்றும் மரபுரிமை தொடர்பான அமைச்சின் பாராளுமன்ற விவகார செயலாளர் சமூன் ஹமீத், நேபாள கலாசார, சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கலாசாரப் பிரிவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கலாநிதி சுரேஷ் சுராஸ் ஸ்ரேஸ்தா (Dr. Suresh Suras Shrestha), பாகிஸ்தான் தேசிய பாரம்பரிய மற்றும் கலாசாரப் பிரிவு செயலாளர் ஹுமைரா அஹமட் (Humaira Ahmed) மற்றும் இலங்கை புத்த சாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதிரன ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
அத்துடன் நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள சார்க் செயலகக் கல்வி, பாதுகாப்பு மற்றும் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் இரோஷா குரே, வெளிவிவகார அமைச்சின் சார்க் பிராந்திய பிரிவின் பணிப்பாளர் நாயகம் டி. பி. தர்மசேன மற்றும் சார்க் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் திருமதி ரேணுகா ஏகநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சார்க் கலாசார நிலையத்தினால் 2023 இல் அமுல்படுத்தப்பட்ட வெற்றிகரமான வேலைத்திட்டங்கள் குறித்து அதன் பணிப்பாளர் ரேணுகா ஏக்கநாயக்க விளக்கமளித்ததுடன் 2024ஆம் ஆண்டிற்கான உத்தேச வேலைத்திட்டங்கள் அடங்கிய நிர்வாக சபை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டில், சார்க் கலாசார நிலையத்தினால் றோயல் ஆசிய சங்கத்துடன் இணைந்து ஓவியக் கண்காட்சி, சார்க் கதைத் தொடர், விசேட சார்க் உரைகள், தொல்பொருள் திணைக்களம், களனிப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபை என்பவற்றுடன் இணைந்து விசேட உரைகள் மற்றும் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்புடன் சார்க் திரைப்பட தினம் போன்ற கூட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு அந்த செயற்பாடுகளின் வெற்றியை நிர்வாகக் குழு பாராட்டியது.
2024ஆம் ஆண்டிற்காக முன்மொழியப்பட்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதோடு உறுப்பு நாடுகள் அதற்கு முழு ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டன.
உணவு விழாக்கள், திரைப்படக் கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆடை மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகள், கலைஞர்களுக்கான முகாம்கள், ஆராய்ச்சி மாநாடுகள் மற்றும் பட்டறைகள் போன்றவற்றை 2024ஆம் ஆண்டில் சார்க் கலாசார நிலையத்தினால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மீள எழுச்சி பெற்ற பின்னர் சார்க் வலயமெங்கும் கலாசார மறுமலர்ச்சி நிறைந்த ஆண்டாக 2024 ஆம் ஆண்டை மாற்ற சார்க் கலாசார மையம் எதிர்பார்க்கிறது.
2009 இல் நிறுவப்பட்ட சார்க் கலாசார மையம் சார்க் பிராந்திய நாடுகளில் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய மையமாக செயல்படுகிறது.