Home » வடமராட்சியில் உதித்து கிழக்கில் பிரகாசித்த பேராசிரியர் செ.யோகராசா

வடமராட்சியில் உதித்து கிழக்கில் பிரகாசித்த பேராசிரியர் செ.யோகராசா

by Damith Pushpika
December 10, 2023 7:07 am 0 comment

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் மூத்த பேராசிரியர் செ.யோகராசா கடந்த 7ஆம் திகதி மதியம் கொழும்பில் காலமாகிய செய்தி தமிழ் உலகை மிக்க கவலையுறச் செய்துள்ளது.

பேராசிரியர் செ. யோகராசாவைப் பற்றியும் ஈழத்து இலக்கியப் பரப்பில் அவரது பாரிய பங்களிப்பு பற்றியும் வெறும் எழுத்துக்களில் சுருக்கி விட முடியாது. பேராசிரியர் செ. யோகராசா பல்துறைப் பரிமாணங்களைக் கொண்ட படைப்பாளியாகவும், ஆற்றல் மிக்க ஆய்வாளராகவும், பலராலும் மதிக்கப்படுகின்ற பண்பாளனாகவும் இருந்து கொண்டு, சிறந்த திறனாய்வாளராக என்றும் உயர்ந்து நிற்கிறார்.

கரவெட்டியைச் சேர்ந்த பேராசிரியர் செ.யோகராசா இளமைக் காலத்தில் கருணை யோகன் என்ற புனைப்பெயரில் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதியுள்ளார். பேராசிரியர் செ.யோகராசாவின் தமிழ் இலக்கியப் பணி மிக காத்திரமானது. இதுவரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், எட்டு நூல்கள், ஆறு தொகுப்பு நூல்களை படைத்துள்ளார். இவரது நூல்களில் இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள், ஈழத்து நவீன இலக்கியம், ஈழத்து நவீன கவிதை, ஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு போன்றவற்றைச் சிறப்பாகக் கூறலாம்.

கடந்த மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக நவீன இலக்கியம் சம்பந்தமான பல்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்.

‘ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்’, ஈழத்து சிறுவர் பாடல் களஞ்சியம்’ என்ற இவரது நூல்கள் இரண்டையும், ஆழ்ந்த அகன்ற அறிவிற்காய் ‘குமரன் புத்தக இல்லம்‘ வெளியிட்டுள்ளது.

செ. யோகராசா ‘ஈழத்துத் தமிழ் சிறுகதைக் களஞ்சியம்’ என்னும் நூல் இலங்கையில் வெளிவந்த மிக முக்கிய, மிகச் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பாக அமைகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களையும் கொண்ட இத்தொகுப்பு இலங்கைச் சிறுகதை வரலாற்றில் முக்கிய தடம் பதித்த சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய குறிப்பினையும் கொண்டுள்ளது என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

நவீன இலக்கிய வளர்ச்சியில் இவரது இலக்கிய பங்களிப்பு விசாலமாக அமைந்துள்ளது. எந்த ஆய்வரங்கிலும் தமது காத்திரமான கட்டுரைகளை முன்வைத்து ஆற்றுகின்ற உரை புதிய அணுகுமுறைகளைப் பிரதிபலித்து நிற்பதைக் காணலாம். அத்துடன் ஈழத்தில் வெளிவந்த அதிக நூல்களுக்கு அணிந்துரை எழுதியவரும் இவரே. தனது எழுத்துக்கள் மூலம் பல இளம் படைப்பாளிகளின் இலக்கிய வாழ்வுக்கு உந்து சக்தியாகவும் விளங்கியவர்.

பேராசிரியர் செ.யோகராசாவின் ஈழத்து இலக்கிய வரலாறு, புகலிட இலக்கியம், போரிலக்கியம், பெண்ணிய இலக்கியம் நாட்டார் இலக்கியம், சிறுவர் இலக்கியம் போன்ற பல்வேறு துறை சார்ந்த ஆய்வுகள் மிகவும் பெறுமதி வாய்ந்தவை. அத்துடன் ‘ஈழத்து நவீன கவிதை புதிய உள்ளடக்கங்கள்- புதிய தரவுகள்- புதிய போக்குகள்’ என்ற நூலுக்காக 2007இல் தேசிய சாகித்திய விருதை பேராசிரியர் செ. யோகராசா பெற்றுள்ளார். ‘பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை – பிரதேச சாகித்திய விருதை 2007இலும், பின்னர் ‘ஈழத்து நாவல் வளர்ச்சியும் வளமும்’ பிரதேச சாகித்திய விருதை 2008இலும் பேராசிரியர் செ. யோகராசா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்து எழுத்திலக்கிய உலகின் முக்கிய ஆய்வாளரை, பேராசிரியரை தமிழ் கூறும் நல்லுலகம் இழந்துள்ளது.

ஐங்கரன் விக்கினேஸ்வரா

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division