அனைத்து அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் தனியார் துறை பங்காளர்களின் ஆதரவுடன் எதிர்வரும் 2024ஆம் ஆண்டை இலங்கையின் மின்சார போக்குவரத்து ஆண்டாக பிரகடனப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். மின்சார போக்குவரத்து தொடர்பான தேசியக் கொள்கை வரைவு தொடர்பில் பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நிலையான மற்றும் வினைத்திறனான பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு முறையை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த வருட மார்ச் மாதத்தில் மின்சார வாகன கண்காட்சி, உலகளாவிய கருத்துப் பரிமாற்றம் மற்றும் முதலீட்டாளர்களுக்கான இலங்கையின் வாய்ப்புகளை விஸ்தரித்தல் தொடர்பான கலந்துரையாடல் உள்ளிட்ட கூட்டு ஒத்துழைப்பை கலந்துரையாடும் மாநாட்டை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் கடந்த காலத்தில் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான போக்குவரத்து அமைப்பிலிருந்து மின்சார அடிப்படையிலான போக்குவரத்து முறைக்கு மாறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும், கொள்கைகள் மற்றும் மூலோபாய முறைகளினுள் மற்றும் பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் மின்சார போக்குவரத்து அமைப்புக்கு மாற்றுவதற்கு தேவையான முன்முயற்சி எடுக்கப்பட்டதாகவும் போக்குவரத்து அமைச்சர் கூறினார்.
இலங்கையில் மின்சார வாகனப் பாவனையை ஊக்குவிப்பதற்குத் தேவையான பின்புலத்தை உருவாக்குவதற்கும், தரம்மிக்க மின்சார வாகனங்களை உற்பத்தி செய்தல் மற்றும் பொருத்துதல், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என்பனவற்றுக்கும், மின்சார வாகன இணை திட்டங்களை உருவாக்குவதற்கு அரசாங்கத்தினால் தற்போது பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக நீண்ட கால நோக்குடனான மின்சார வாகன கொள்கைக்கான தேவை இருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். மின்சார வாகன பாவனையை ஊக்குவிப்பதற்காக கொள்கை மற்றும் வழிகாட்டல்கள் உடனான மூலோபாயத் திட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
மின்சார போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கை வரைபுக்கு பங்குதாரர்களிடமிருந்து கிடைத்த ஆலோசனைகளுடன் அதனை மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகவும், அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
போக்குவரத்து கட்டமைப்பிலிருந்து காபன் வெளியேற்றத்தை தடுத்தல், தனிப்பட்ட வாகன பயன்பாட்டை குறைத்தல், வீதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைத்தல் மற்றும் போக்குவரத்தின் சுற்றாடல் தாக்கங்களை தடுத்தல் போன்றன மின்சார போக்குவரத்து கட்டமைப்பின் இலக்குகள் என்றும், அடுத்த மார்ச் மாதத்தில் இடம்பெறும் மாநாடு வெற்றி பெறுவதற்கும் மற்றும் அதற்கப்பால் இந்த செயற்பாட்டை வெற்றியாக்கிக் கொள்வதற்கும் ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் ஒத்துழைப்பை போக்குவரத்து அமைச்சு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கூறினார்.
–ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பொதுப் போக்குவரத்து சேவை மின்சார இயக்கத்துக்கு மாறுவதைத் துரிதப் படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் போக்குவரத்து பிரிவின் மதன் பாண்டு ரெஜ்மி கூறுகையில், ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் அமைச்சரின் தலைமையின் கீழ் இந்த கொள்கையை உருவாக்கும் செயல்முறைக்கு போக்குவரத்து அமைச்சு மேற்கொண்ட அர்ப்பணிப்பையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். அதேபோன்று அவர் தனக்குள்ள இது தொடர்பான அனுபவங்களையும் இதன் போது பரிமாறிக் கொண்டார்.
——இந்தியாவின் உலகளாவிய வளங்கள் நிறுவனத்தின் நிலையான நகர மற்றும் போக்குவரத்து ஆலோசகர் கௌஸ்புட் எஸ். கொசவி, மின்சார போக்குவரத்து கொள்கையை நடைமுறைப்படுத்துதல், நிதி மற்றும் இயக்க மாதிரிகள் பற்றிய அதன் உலகளாவிய மற்றும் பிராந்திய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் மாறும் செயற்பாட்டுக்காக முன்னேறிச் செல்லும் அனைத்து இலங்கை தரப்பினரின் முயற்சிகளைப் பாராட்டினார்.
——-பிலிப்பைன்ஸின் போக்குவரத்து திணைக்களத்தின் ஜொயிஸ் ரிவேரா, மின்சார இயக்க கொள்கையை நடைமுறைப்படுத்தல், மக்கள் உபயோக வாகனங்களை நவீன மயப்படுத்தும் வேலை திட்டம் மற்றும் மக்கள் பங்குபற்றல் போன்ற விடயங்களில் பிலிப்பைன்ஸின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்
——–போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன, மின்சார இயக்கம் தொடர்பில் அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் சட்டபூர்வ ஆதரவுடனான விரிவான மின்சார இயக்கக் கொள்கை ஆவணத்தை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.
GodeGen ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் தலைவருமான கலாநிதி ஹர்ஷ சுபசிங்க, டுமாரோ பைசைக்கிள் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி தாரிக் பிறந்தால், இலங்கை ஆட்டோ மொபைல் உதிரிப்பாக உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் திமந்த ஜயவர்த்தன, இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் (வளங்கல் மற்றும் அபிவிருத்தி) லக்சித வீரசிங்க போன்றோர் இலங்கையில் தற்போதுள்ள மின்சார இயக்க மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிற்துறை தொடர்பில் தங்கள் அனுபவங்களையும் திறமைகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.
வஜிர லியனகே தமிழில் - எம். எஸ். முஸப்பிர்