சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமாக இலங்கையில் மாத்திரமன்றி, உலகின் பெரும்பாலான நாடுகளிலும் கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன. சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது அடிப்படை உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் சமவாயத்திலும் கண்டிப்பான விதிமுறைகள் உள்ளன. ஐ.நாவில் அங்கம் வகிக்கின்ற நாடுகள், சிறுவர் உரிமைகள் தொடர்பான விதந்துரைகளை கட்டாயமாகக் கடைப்பிடிப்பதும் முக்கியமாகும்.
இவ்வாறான விதிமுறைகள் நடைமுறையில் உள்ள போதிலும், உலகின் பெரும்பாலான நாடுகளில் சிறுவர்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்தபடியே உள்ளன. இலங்கையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அன்றாடம் ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளில், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஒரு செய்தியையாவது காணாமல் இருக்க முடிவதில்லை.
எமது நாட்டிலும் சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக கண்டிப்பான சட்டவிதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சிறுவர் விவகாரங்களைக் கையாள்வதற்கென பொலிஸ் திணைக்களத்தில் தனியான பிரிவொன்றும் உள்ளது. சிறுவர்களின் உரிமைகளை மீறுகின்றவர்களுக்கு நீதிமன்றங்களில் விதிக்கப்படுகின்ற தண்டனைகளும் கடுமையானதாகும். அதேசமயம் இலங்கை அரசாங்கமும் சிறுவர்களின் விடயத்தில் விசேடமான அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தனை கண்டிப்பான நடைமுறைகள் இலங்கையில் உள்ள போதிலும், இங்கும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் ஆங்காங்கே இடம்பெற்ற வண்ணமே உள்ளன. சிறுவர் குற்றங்களுக்கு எதிரான மிகக்கடுமையான தண்டனைகள் நமது நாட்டில் உள்ள போதிலும், அவற்றை அறியாதவர்களாக அல்லது அலட்சியம் செய்பவர்களாக குற்றத்தில் ஈடுபடுவோர் அதிகம் உள்ளனர். அவர்களில் கல்வியறிவுள்ளவர்களும் உள்ளனர் என்பதுதான் வியப்பான விடயம்!
சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மிக நெருங்கிய உறவினர்களாகவும், அக்குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர்களாகவும் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே சிறுவர் பாதுகாப்பு விடயத்தில் அவர்களது பெற்றோரே விசேடமான கவனம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகின்றது.
இது ஒருபுறமிருக்க, சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடருவதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டியதும் அவசியமாகின்றது. கைத்தொலைபேசி பாவனை காரணமாக பாலியல் ரீதியான குற்றங்கள் பெருகுவதாக பலதரப்பினரும் அபிப்பிராயம் கூறுகின்றனர். எதுவித கட்டுப்பாடுகளுமின்றி சீர்கேடான விடயங்களெல்லாம் சமூக ஊடகங்கள் வாயிலாக வந்து குவிவதால் பலரும் குற்றங்களுக்குத் தூண்டப்படுவதாக கல்விப்புலத்தில் உள்ளோர் கவலைப்படுகின்றனர்.
அதேசமயம் வெளிநாடுகளில் பணிப்பெண்களாகப் பணியாற்றும் இலங்கையரின் பிள்ளைகள் அவர்களது வீடுகளில் உரிய பாதுகாப்பின்றி உள்ளதால், அவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. ஆகவே பெற்றோரின் பராமரிப்பு அவர்களது பிள்ளைகளுக்கு அவசியமாகின்றது.
இதுபோன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்துவது சட்டத்தினால் மட்டும் முடியாததாகும். சமூகத்தில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பொதுநல அமைப்புகள் விசேடமான கவனம் செலுத்துவது முக்கியம்.