போர் ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. ஏவுகணைகள் தொழில்நுட்பத்தில் முன்னணியில் திகழும் இந்தியா, தற்போது யுத்தவிமானங்களைத் தயாரிப்பதில் விசேட கவனம் செலுத்தி வருகின்றது.
யுத்தவிமானங்களில் சிறப்பானதாகப் பார்க்கப்படுவது தேஜஸ் விமானம் ஆகும். இவ்விமானம் இந்தியத் தயாரிப்பு விமானம். இந்த விமானம் சமீபத்தில் வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பெங்களூரில் கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தன.
பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சல் குறித்து மக்கள் பலரும் வியந்து பாராட்டியுள்ளனர். இளைஞரைப் போன்று எதுவித அச்சமுமின்றி அவர் மிகச்சாதாரணமாக விமானத்தில் ஏறிப் பயணம் செய்தது வியப்புக்குரியதென்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நரேந்திர மோடி பயணம் செய்திருந்த அவ்விமானம் ஒலியின் வேகத்தை விட 1.6 மடங்கு வேகத்தில் பயணம் செய்யக் கூடியதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பாதுகாப்புப் படையினரின் திறமையின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்ைகயை இது வெளிப்படுத்துவதாக அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகின்றது. அதேசமயம் இந்தியாவின் பாதுகாப்பில் அவர் வைத்துள்ள தீவிர அக்கறையையும் இது எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தின் சார்பில் ‘தேஜஸ்’ இலகு ரகு போர் விமானங்கள், இன்ஜின், உதிரி பாகங்கள் ஆகியவை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் விமானங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
எச்.ஏ.எல் நிறுவனம் அண்மையில் 2 இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜஸ் போர் விமானத்தைத் தயாரித்திருந்தது. இந்த விமானம் ஒலியை விட 1.6 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது. பெங்களூரில் கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அந்த விமானத்தைப் பார்வையிட்டார்.
அதன் பின்னர் பாதுகாப்பு உடை, பறப்பதற்கான தலைக்கவசம் ஆகியவை அணிந்து, இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் விமானப்படை விமானிகளுடன் பிரதமர் பயணித்தார். நடுவானில் பறக்கும் போது கைகளை உற்சாகமாக அசைத்தவாறு, வெற்றிச் சின்னத்தையும் அவர் காட்டினார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “தேஜஸ் போர் விமானத்தில் வெற்றிகரமாகப் பயணித்தேன். இதில் பயணித்த அனுபவம் நமது உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. நமது சுயசார்பு திறன் எனக்கு பெருமிதத்தையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம் மற்றைய போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் எடை குறைவானதாகும். இது கடற்படைப் போர்க் கப்பல்களிலிருந்து இயங்கும் திறன் கொண்டது. இந்த வகை விமானங்கள் ஒலியை விட 1.6 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும். அதாவது மணிக்கு 1,975 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது.
இந்த விமானம் முதலில் ‘லைட் ெகாம்பாட் எயார்கிராஃப்ட்’ என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இதற்கு ‘தேஜஸ்’ எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த விமானம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. முதலில் ஒரு இருக்கை மட்டுமே கொண்டு தேஜஸ் விமானங்கள் வடிவமைக்கப்பட்டன. தற்போது இரண்டு இருக்கைகள் கொண்ட விமானங்களை இந்துஸ்தான் ஏரோேேனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்) நிறுவனம் தயாரித்துக் கொடுத்திருக்கிறது. இந்த விமானம் சமீபத்தில்தான் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இந்துஸ்தான் ஏரோேேனாட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் தளத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, தேஜஸ் விமானத்தில் பறந்திருக்கிறார்.
இந்நிலையில், இந்த விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்யும் பொழுது, நடுவானில் இருந்தபடியே அங்கிருந்து கை அசைத்துக் கொண்டே பயணம் செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியிருந்தது. அந்த வீடியோவை சிலர், “நடுவானில் யாரும் இல்லாதபொழுதும் கூட, மோடி கையசைத்து பயணம் செய்கிறார் பாருங்கள்” என்று கூறி கேலியாகப் பதிவு செய்திருந்ததையும் காண முடிந்தது.
பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போதே, அவர் பயணம் செய்த விமானத்தைத் தவிர்த்து, மற்றொரு தேஜஸ் போர் விமானமும் வானில் பயணம் செய்ததைக் காண முடிந்தது. எனவே அந்த மற்றொரு போர் விமானத்தைப் பார்த்தே, இந்த விமானத்தில் இருந்த கப்டனும், பயணம் செய்த பிரதமர் மோடியும் கை அசைத்துள்ளனர் என்பது உறுதியாகியது.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தரத்தை உலகிற்கு வெளிகாட்டும் விதமாகவே, இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்து மெய்சிலிர்க்க வைத்துள்ளார் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிடுகின்றனர்.
உலகளவில் இந்திய இராணுவம் ஓர் அசைக்க முடியாத சக்தியாக மாறி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத்திற்காக தேஜஸ் விமானங்களை வாங்கிய மத்திய அரசு, புதியதாக சு- 30 எம்.கே.ஐ போர் விமானங்களை வாங்க உள்ளதாகவும், சுகோய் நிறுவனத்தின் உதவியுடன் இந்த போர் விமானங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக, தேஜஸ் விமானமானது ஒரேயொரு இருக்கையைக் கொண்ட போர் விமானம் ஆகும். ஆனால் இந்தப் பயணத்தில், பிரதமர் அமர்வதற்காக தேஜஸ் விமானத்தின் 2- இருக்ைககள் கொண்ட பயிற்சி விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகை தேஜஸ் போர் விமானங்களை பயிற்சியின் போதுதான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். இந்திய விமானப் படையில் மட்டுமின்றி, கடற்படையிலும் 2 இருக்ைககள் கொண்ட தேஜஸ் போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எடை குறைவான மற்றும் அளவில்-சிறிய போர் விமானமான தேஜஸ் இந்திய இராணுவப் படைகளில் 4.5- தலைமுறையில் பயன்படுத்தப்படுகிறது.
இது ஓர் மல்டி-ரோல் போர் விமானம் ஆகும். அளவில்- சிறியதாகவும், எடை குறைவானதாகவும் இருப்பதால் தேஜஸ் போர் விமானங்களை எந்தவொரு தேவைக்கும் எளிதாகப் பயன்படுத்த முடியும். இருப்பினும், தேஜஸ் போர் விமானங்களை இந்திய இராணுவம் வான்வழி உதவிகளுக்கும், போர்ச் சமயத்தின் போது தரைவழித் தாக்குதல் செயல்பாடுகளுக்கு உதவுவதற்கும் பயன்படுத்தி வருகிறது.
சிறப்பான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதால், தேஜஸ் போர் விமானங்கள் விபத்து -இல்லாமல் பறக்கும் திறனைக் கொண்டவைகளாக உள்ளன. இந்திய விமானப் படையில் தற்சமயம் 40 தேஜஸ் எம்கே -1 விமானங்கள், 83 தேஜஸ் எம்கே -1ஏ போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
பலமுறை சோதிக்கப்பட்ட, பாதுகாப்பு வசதிகள் மிக்க போர் விமானமாக இருந்தாலும், ஓர் நாட்டின் உயர்பதவியில் வகிக்கும் பிரதமர் நேரடியாகப் பயணிக்கிறார் என்றால் அது ஆச்சரியமான விடயமாகும். இதற்கு எல்லாம், உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜஸ் விமானங்களின் மீதும், உள்நாட்டு தயாரிப்புகளின் மீதும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையே காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எஸ்.சாரங்கன்