காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்த கடும் போர் நவம்பர் 25 ஆம் திகதி முதல், அதாவது 48 ஆவது நாளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவினதும் எகிப்தினதும் ஒத்துழைப்புடன் கட்டார் முன்னெடுத்த கடும் முயற்சியின் பயனாக இந்த தற்காலிக யுத்தநிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் இணக்கம் தெரிவித்தன.
இப்போர்நிறுத்தத்தின் கீழ் ஹமாஸ் பிடியில் இருக்கும் 50 பணயக்கைதிகளையும், இஸ்ரேலிய சிறைகளிலுள்ள பலஸ்தீன 150 சிறைக்கைதிகளையும் முதல் நான்கு நாட்களில் விடுவிக்க இணக்கம் காணப்பட்டது.
ஆனால் முதல் நான்கு நாட்களில் இருந்து மூன்று தடவை நீடிக்கப்பட்ட இந்த யுத்தநிறுத்தம் எட்டாவது நாளான வௌ்ளிக்கிழமையும் நீடித்தது. இக்காலப்பகுதிக்குள் ஹமாஸ் பிடியிலிருந்த சுமார் 105 பயணக் கைதிகளும், இஸ்ரேல் சிறையிலிருந்த 240 பலஸ்தீன சிறைக்கைதிகளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் 48 நாட்கள் காஸா மீது இஸ்ரேல் தொடராக முன்னெடுத்த கடும் யுத்தம் கடந்த 25 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 7.00 முதல் நிறுத்தப்பட்டது. அதனால் காஸாவில் குண்டுச்சத்தங்கள் ஒய்ந்தன. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடத்தொடங்கினர். பணயக் கைதிகளினதும் இஸ்ரேலிய சிறைக்கைதிகளதும் உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலும் புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் ஏற்பட்டன.
அதற்கேற்ப யுத்தநிறுத்தத்தின் முதல் நாளன்று ஹமாஸ் 24 பணயக் கைதிகளை விடுவித்தது. அவர்களில் 10 தாய்லாந்து பிரஜைகள், ஒரு பிலிப்பைன்ஸ் பிரஜை மற்றும் 13 இஸ்ரேலிய பிரஜைகள் அடங்கி இருந்தனர். இவர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, இஸ்ரேலியர்கள் இஸ்ரேலிய கொடிகளை அசைத்த வண்ணம் மகிழ்ச்சிக் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். 48 நாட்கள் உறவினர்களைப் பிரிந்திருந்த கைதிகள் ஆனந்தக் கண்ணீர் மல்கியபடி ஆளைஆள் ஆரத்தழுவி குடும்பத்தினருடன் இணைந்தனர்.
இதேவேளை, இஸ்ரேல் சிறைகளிலிருந்து முதல் நாளில் விடுவிக்கப்பட்ட 39 பலஸ்தீன சிறைக்கைதிகளில் 25 பெண்களும் 14 சிறுவர்களும் அடங்கி இருந்தனர்.
பலஸ்தீனிய சிறைக்கைதிகள் விடுதலையாவதை அறிந்ததும் அவர்களது உறவினர்களும் குடும்பத்தினரும் நண்பர்களும் அங்கு கூடி பலஸ்தீனக் கொடிகளை அசைத்த வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரம் வெளிப்படுத்தி, கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். வாணவேடிக்கைகள் இடம்பெற்றன. விடுதலையானவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இனிப்புக்கள் பகிர்ந்தனர்.
இவ்வாறு கைதிகள் விடுதலை செய்யப்பட்ட ஒவ்வொரு நாளையும் இஸ்ரேல், பலஸ்தீன் மக்கள் மகிழ்ச்சிக்குரிய நாளாகவே கொண்டி வருகின்றனர். இவர்கள் தம் உறவினர்கள் விடுவிக்கப்பட்டதன் நிமித்தம் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்திய பிரதேசங்கள் வேறுபட்டதாக இருந்தாலும் அவர்களது மகிழ்ச்சியும் ஆரவாரமும் ஒரேவிதமாகவே அமைந்திருக்கின்றன.
இவை இவ்வாறிருக்க, ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் ஒருவரான எமிலியா, ஹீப்ரூ மொழியில் ஹமாஸுக்கு எழுதிய கடிதமொன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அக்கடித்தில், ‘நீங்கள் என் மீதும், எனது குழந்தை எமிலியாவுடனும் இயற்கைக்கு மாற்றமாக அன்பைப் பொழிந்தீர்கள். திரும்பச் சொல்வதாக இருந்தால் ஹமாஸ் சகோதரர்கள் என் குழந்தை எமிலியாவை தந்தையை விட மிகுந்த பாசத்துடன் கவனித்தார்கள். மொத்தத்தில் என் மகள் எமிலியா காஸாவில் ஒரு இளவரசி போன்று வலம் வந்தாள். அவள் புரிந்த சுட்டித்தனத்தை நீங்கள் அனைவரும் இரசித்து அவளை நன்கு நடத்தினீர்கள். அவளுடைய அனைத்து நடவடிக்கைகளையும் பொறுமையுடன் நீங்கள் அணுகிய விதம் என்னை மிகுந்த மனச்சந்தோஷத்தில் ஆழ்த்தியது. நான் உங்களின் மகிழ்ச்சியை விரும்பி பிரார்த்தனை புரிகிறேன். அந்த மகிழ்ச்சியை நீங்கள் விரைவில் பெற வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை புரிகிறோம்’ என்று குறிப்பிட்டு டேனியல், எமிலியா எனக் கையெழுத்திட்டுள்ளார்.
அதேநேரம் இஸ்ரேல் விடுவித்த பலஸ்தீனிய சிறைக்கைதிகளில் ஒருவரான மாரா பகீர் 2015 இல் பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டு 08 வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்தார். அவர் கைது செய்யப்படும் போது அவரது வயது 16 ஆகும்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்த ஒப்பந்தம் பலரின் மரணத்தைத் தொடர்ந்து வந்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியற்றதாகவும் சங்கடமாகவும் இருக்கிறது’ என்றுள்ளார்.
மேலும் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டு விட்டதாகக் கருதப்பட்ட 09 வயது இஸ்ரேலிய சிறுமி எமிலி ஹேன்ட்டையும் அமெரிக்க-இஸ்ரேல் குடியுரிமை பெற்ற அபிகெய்ல் ஈடன் என்ற பெயருடைய 4 வயது சிறுமியையும் கூட ஹமாஸ் பாதுகாப்பாக விடுத்துள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்தது.
இப்பணயக் கைதிகள் விடுவிப்பில் இஸ்ரேலிய கைதிகள் மாத்திரமல்லாமல் தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, டச்சு, ஜேர்மனி, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளது பிரஜைகளும் ஹமாஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
இவ்வாறு இரு தரப்பினராலும் விடுவிக்கப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் பெண்களும் 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் ஆவர். அவர்களில் இஸ்ரேல் விடுவித்த சிறைக்கைதிகளில் பலர் ஆயுள் தண்டனை பெற்றவர்களும் 8, 10 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களுமாவர்.
இந்த யுத்த நிறுத்தத்தின் ஊடாக ஒரு பணயக்கைதிக்கு 3 பலஸ்தீன சிறைக்கைதிகள் என்றபடி விடுவிக்கப்படுகின்றனர். ஆனால் 2011 இல் கிலாட் சலிட் என்ற இராணுவ வீரரை ஹமாஸிடமிருந்து விடுவிக்கவென 1027 பலஸ்தீனியர்களை சிறைகளில் இருந்து இஸ்ரேல் விடுவித்தது. ஆனால் தற்போது இஸ்ரேலிய சிறையில் 8000 பலஸ்தீனியர்கள் உள்ளனர். அவர்களில் 3000 பேர் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் என்று பலஸ்தீன கைதிகள் நலன்புரி கழகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஹமாஸ் பிடியில் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பலஸ்தீன், இஸ்ரேல் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. அமைதி சமாதானமே அவர்களது எதிர்பார்ப்பு என்பதை கைதிகள் விடுவிப்பின் போது அவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி ஆரவாரங்கள் வெளிப்படுத்தி நிற்பது குறிப்பிடத்தக்கது.
மர்லின் மரிக்கார்