1832 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி ‘கொழும்பு ஜெர்னல்’ பத்திரிகையில் ஓர் அறிவித்தல் வந்திருந்தது. சாதாரண அழைப்புத்தான் அது, “கிரிக்கெட் கழகம் அமைப்பதற்கு விருப்பம் உள்ள நபர்கள்… 8ஆவது நாளில் (திகதி) சரியாக 8 மணிக்கு நூலகத்தில் (புறக்கோட்டையில் இருந்தது) சந்திக்கவும்” என்று அழைக்கப்பட்டிருந்தது.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் ஆரம்பப் புள்ளி இதுதான். இலங்கை கிரிக்கெட்டின் ஏற்றத் தாழ்வுகள் எல்லாவற்றையும் இந்தப் புள்ளியில் இருந்து பார்த்தாலேயே புரிதல் ஒன்றை பெற முடியும். மேற்சொன்ன அறிவித்தலைத் தொடர்ந்தே இலங்கையின் முதலாவது கிரிக்கெட் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அது கொழும்பு கிரிக்கெட் கழகம்.
இலங்கையை ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளின் மேட்டுக் குடியினர் இலங்கையில் கிரிக்கெட் ஆடியபோதும் சாதாரண மக்களுக்கு அது பெரிய விடயமாக இருக்கவில்லை. அப்படித்தான் இலங்கையில் கிரிக்கெட் அறிமுகமானது மற்றும் கழக மட்டத்தில் கிரிக்கெட் வளர்ந்தது.
ஆனால் கிரிக்கெட் என்பது இனியும் மேட்டுக் குடியினரின் விளையாட்டு இல்லை. அது ஏழைகளின் தெருக்களிலும் விளையாடப்படும் ஒன்று. அப்படி தெருக்களில் விளையாடும் ஒருவனுக்கு தேசிய மட்டத்திற்கு முன்னேற முடியுமா என்பதுதான் இலங்கை கிரிக்கெட்டின் இப்போதிருக்கும் மிகப்பெரிய கேள்வி.
எஸ்.எஸ்.சி., புளும்பீல்ட், பி.ஆர்.சி., என்.சி.சி., கோல்ட்ஸ் என இலங்கையின் பிரதான கிரிக்கெட் கழகங்கள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டது 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி தொடக்கம் இறுதிக்குள்தான். அதாவது இந்த பிரதான கழகங்கள் அனைத்தினதும் தோற்றுவிப்பாளர்கள் என்று பார்த்தால் காலனித்துவ காலத்து ஆங்கில பிரபு ஒருவர் இல்லாவிட்டால் அதன் வழிவந்த இலங்கையர் ஒருவராக இருப்பார்.
எல்லாமே கொழும்பின் கறுவாத்தோட்ட பகுதியை மையமாகக் கொண்ட கழகங்கள். கொழும்பு மத்தியில் இருக்கும் இந்தப் பகுதி இப்போது வெளிநாட்டுத் தூதரகங்கள், பிரதான பாடசாலைகள் மற்றும் முக்கிய அரச கட்டடங்கள் இருக்கும் இடம். ஆனால் 18 ஆம் நூற்றாண்டில் சுமார் 300 ஏக்கர் நிலத்தில் கறுவா மரங்கள் இருந்தன. அதனையொட்டி வாழ்ந்த செல்வந்தர்கள் பொழுதை போக்க கிரிக்கெட் கழகங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆரம்பித்தார்கள் என்பதுதான் இதன் கதைச் சுருக்கம்.
அப்போது ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரதான கழகங்கள் தான் இன்றும் இலங்கை கிரிக்கெட்டின் நாடித் துடிப்பு. கொழும்பின் குறிப்பிட்ட பகுதியை மையப்படுத்திய இந்தக் கழகங்கள் முழு இலங்கைக்குமான திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் என்பது இன்றை திகதியில் எத்தனை சாத்தியம் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது.
இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி அடைந்த கதையை மீண்டும் ஒப்புவிக்க முடியாது. ஆனால் அதனையொட்டி இலங்கை கிரிக்கெட் சபையை கலைக்க அது நீதிமன்றம் சென்று மீண்டும் நிறுவப்பட, சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதிக்க, அதனையொட்டி இலங்கை அரசியலில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்துமே ஓரு சங்கிலித் தொடரானது. எல்லாவற்றுக்குமே ஆரம்பம் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் சகிக்க முடியாத தோல்விகள்.
பிரதானமாக கிரிக்கெட் ஆடும் வேறு எந்த நாடுகளை விடவும் ஓர் இடத்தை (கொழும்பை) மாத்திரம் மையப்படுத்தி கிரிக்கெட் ஆடும் ஓர் நாடு 1981 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தை பெற்றதே ஓர் ஆச்சரியமான செய்தி. அப்போதெல்லாம் ஒருசில கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் ஆடும் வீரர்களை மாத்திரம் கொண்டே தேசிய அணி உருவாக்கப்பட்டு அது டெஸ்ட் அந்தஸ்து வரை சென்றதே இந்த வியப்புக்குக் காரணம்.
அப்போதெல்லாம் சர்வதேச கிரிக்கெட் என்பது மட்டுப்படுத்தப்பட்டது, போட்டித் தன்மை குறைவு மற்றும் மரபு ரீதியாக கிரிக்கெட் ஆடும் அணிகளே துடுப்பையும் பந்தையும் எடுத்துக் கொண்டு மைதானத்திற்கு சென்றன. ஆனால் இப்போதைய சூழலுக்கு அந்தக் கிரிக்கெட் பொருந்தாது.
1996 உலகக் கிண்ணம் மற்றும் 2011 டி20 உலகக் கிண்ணங்களை இலங்கை அணி வென்றது ஓர் எழுச்சியின் உச்சம் என்றே குறிப்பிடலாம். அதில் அசாதாரண திறமை படைத்த ஒரு சில வீரர்கள் அதிர்ஷ்டவசமாக குறுகிய காலத்திற்குள் இலங்கை அணியில் இடம்பெற்றது முக்கிய காரணமாக இருந்தது என்று எடுத்துக்கொள்ளலாம்.
இந்தப் போக்கு தொடர்ந்து நீடிக்கும் என்று குருட்டுத்தனமாக எதிர்பார்க்க முடியாது. கடந்த பத்து ஆண்டுகளில் ஓர் ஸ்திரமான அணியை இலங்கையால் உருவாக்க முடியாமல்போனதை இதற்கு நல்ல உதாரணமாக குறிப்பிட்டுவிட முடியும்.
சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட்டுக்கும் இலங்கையின் உள்ளூர் மட்ட கிரிக்கெட்டுக்கும் இடையிலான இடைவெளி பெரிதாகிவிட்டது. மேற்சொன்ன கழகங்களை மாத்திரம் நம்பி இலங்கை கிரிக்கெட் வண்டியை இழுக்க முடியாது. மாகாண மட்ட மற்றும் பாடசாலை மட்ட கிரிக்கெட்டுகளை மேம்படுத்த அண்மைக் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும், அது அடிப்படையான கழகமட்ட கிரிக்கெட்டை முறியடிக்க முடியவில்லை.
என்னதான் பாடசாலை மற்றும் மாகாண மட்டத்தில் கிரிக்கெட் ஆடியபோது தேசிய மட்டத்திற்கு முன்னேற வேண்டுமாயின் கொழும்பை மையமாகக் கொண்ட கழகங்களுக்கு ஆட வேண்டும் என்பது அடிப்படை. அவ்வாறு தொடர்ச்சியான கிரிக்கெட் ஆடுவதற்கு திறமைக்கு அப்பால் வசதி, காலம் எல்லாம் தேவையாக இருக்கிறது.
எனவே ஒரு பின்தங்கிய கிராமத்தில் கிரிக்கெட் ஆடும் ஒருவர் தமது திறமையை மேம்படுத்தி தேசிய மட்டத்திற்கு முன்னேறுவது என்பது சொந்த முயற்சியில் சாத்தியம் இல்லாத ஒன்று. இதற்கு அப்பால் ஆங்காங்கே தனிப்பட்ட திறமைகளை கண்டுபிடித்து இலங்கை அணியை நிரப்ப முடியாது.
பாடசாலை கிரிக்கெட் கூட முழுமை பெற்ற ஒன்றாக இல்லை. நாட்டில் உள்ள 10 வீதத்துக்கும் குறைவான பாடசாலைகளே கிரிக்கெட்டின் முழு ஆதிக்கத்தையும் வைத்திருக்கின்றன. இதற்கு அந்த பாடசாலைகளில் மாத்திரம்தான் திறமையான வீரர்கள் உருவாகிறார்கள் என்று குறிப்பிட முடியாது.
இலங்கை கிரிக்கெட்டின் பிரதான போட்டிக் கட்டமைப்பு என்று பார்த்தால் முதல்தர தொடர்களை ஏ மற்றும் பி அடுக்கு பிரீமியர் கிண்ணம் என்றும் ஒருநாள் தொடராக பிரீமியர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடர் என்றும் டி20 தொடர் என்றும் பிரிக்கலாம். இந்த தொடர்கள் அனைத்திலும் மேற்சொன்ற பிரதான கழகங்கள் தான் போட்டியிடுகின்றன. தேசிய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் இந்தத் தொடர்களில் காண்பிக்கப்படும் திறமை பிரதான அளவுகோலாக இருக்கிறது.
இது தவிர, இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் மற்றும் நடத்துவதற்கு திட்டமிடும் லங்கா டி10 தொடர்கள் என்பது வர்த்தக நோக்கத்துக்கு அப்பால் எதனையும் எதிர்பார்க்க முடியாது.
கழக மட்டத்திற்கு அப்பால் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் இலங்கையில் கட்டமைக்கப்பட்ட கிரிக்கெட் ஒன்றாக இருக்கிறது. என்றாலும் இலங்கையால் இதுவரை இளையோர் உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாமல் இருக்கிறது. இன்று நேற்று வந்த பங்களாதேஷ் கூட உலக சம்பியனாகி இருக்கிறது. இது இலங்கையின் பாடசாலை மட்ட கிரிக்கெட்டின் தரத்தை கூறுவதற்கு நல்ல உதாரணம்.
இலங்கையின் பாடசாலை மட்ட கிரிக்கெட் என்பது நாடு முழுவதும் பரவிய சமநிலை போக்குடையதாக இல்லை. றோயல், தோமஸ், இசிப்பத்தான என பிரபல பாடசாலைகளை சுற்றியே அது கிரிக்கெட் சுழல்கிறது. அண்மைக் காலத்தில் இந்த நிலையில் மாற்றம் நிகழ்ந்து வருவது ஆராக்கியம் என்றாலும் அது வலுவான நிறுவனப்படுத்தப்பட்ட ஒன்றாக கருதிவிட முடியாது.
உண்மையில் இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்ற வேண்டும் என்றால் பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவது அடிப்படை. ஆனால் அது மாத்திரம் போதாது. பாடசாலை கிரிக்கெட்டுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறும் வீரர்கள் பிரவேசிக்க முடியுமான கிரிக்கெட் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அது கொழும்பை மாத்திரம் மையப்படுத்தி இருப்பது செக்குமாட்டுக் கதையாகவே நீடிக்கும்.
இற்றைக்கு மூன்று தசப்தங்களுக்கு முன்னர் ஆடிய கிரிக்கெட் தற்போதைய சூழலுக்கு செல்லாது. கிரிக்கெட் ஆட்டத்தின் போக்கு மாத்திரம் அன்றி, கிரிக்கெட்டை கட்டி எழுப்புவற்கான போக்கிலும் மாற்றங்கள் நிகழ்ந்தாலேயே தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியும்.
பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், நெதர்லாந்து போன்ற நாடுகள் சம்பிரதாய கிரிக்கெட் கட்டமைப்புக்கு அப்பால் தற்போது வேகமாக முன்னேற்றம் கண்டு வருகின்றன. மறுபக்கம் சம்பிரதாயமான மேற்கிந்திய தீவுகள், சிம்பாப்வே போன்ற நாடுகள் நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
இதற்கு மைதானத்தில் ஆடும் கிரிக்கெட்டுக்கு அப்பால் அந்தக் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் அமைப்பும் செயல்திறன் கொண்டதாக இருக்க வேண்டும். சிம்பாப்வேயில் அரசியல் தலையீடுகளால் அந்நாட்டு கிரிக்கெட் சபை பலவீனப்பட்டுப் போயுள்ளது. அது ஐ.சி.சி தடையைக் கூட அனுபவித்துருக்கிறது. மறுபுறம் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை பொருளாதார ரீதியில் பலவீனப்பட்டிருப்பது அதன் ஆட்டத்திலும் வெளிப்படுவதாக இருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டாலும் அது தொடர்பில் நீண்ட காலமாக விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தேர்தல் முறை ஒன்றின் மூலமே தேர்வு செய்யப்படுகிறது. ஐ.சி.சி விதிகளின்படி அது கட்டாயமும் கூட. ஆனால் அந்த தேர்தல் முறை பற்றி குறைகூறுபவர்கள் பலர் உள்ளனர்.
தற்போதைய வாக்குரிமை அமைப்பின்படி முழுமையாக இயங்காத கழகங்கள் மற்றும் சங்கங்களும் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கின்றன. இந்தக் கழகங்கள் மற்றும் சங்கங்கள் வாக்களிக்க மாத்திரமே இயங்குவது போன்று தெரியும். மற்றபடி கிரிக்கெட் ஆடுவது மற்றும் அது தொடர்பான செயற்பாடுகள் இரண்டாம் பட்சம்.
அதேநேரம் தற்போது முதல்தர போட்டிகளில் ஆடும் 22 அணிகளைச் சேர்ந்த சில கழகங்களுக்கு போதிய வாக்குரிமை இல்லாமல் இருக்கின்றன. இது முழு தேர்தல் முறையையும் கேள்விக்குள்ளாக்குவது போன்றது.
தற்போதைய தேர்தல் முறையின்படி மாகாண சங்கங்களிடம் மொத்தம் 10 வாக்குகள் உள்ளன, சம்மேளனங்கள் வசம் 12 வாக்குகள் உள்ளன, மாவட்ட சங்கங்களிடம் மொத்தம் 40 வாக்குகள் உள்ளன, அதிகபட்சமாக கிரிக்கெட் கழகங்களிடம் 56 வாக்குகள் உள்ளன. தவிர இணை கழகங்களுக்கு ஒரு கழக்திற்கு தலா ஒரு வாக்கு வீதம் மொத்த 22 வாக்குகள் உள்ளன.
இதன்படி பார்த்தல் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை தேர்வு செய்ய மொத்தமாக 140 வாக்குகள் உள்ளன. என்றாலும் கிரிக்கெட் சபை நிர்வாகத்துக்குள் செல்வதென்பது சாதாரணமான காரியம் அல்ல. நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வென்றாலும் கிரிக்கெட் சபை தேர்தலில் வெல்ல முடியாது என்று அண்மைக்காலத்தில் சில அரசியல்வாதிகள் நையாண்டி செய்தாலும் அதனை கேட்டு சிரித்து விட்டு மாத்திரம் போய்விட முடியாது.
கடந்த காலங்களில் கிரிக்கெட்டை சீர்திருத்தவெனக் கூறி தேர்தலில் குதித்து தலைகுப்புற விழுந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இதில் இலங்கைக்கு 1996இல் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்கவும் விதிவிலக்கல்ல.
எனவே, இலங்கை கிரிக்கெட்டில் மைதானத்திலும் அதற்கு வெளியிலும் மாற்றங்கள் நிகழ வேண்டி தேவை பெரிதாக உள்ளது. ஆனால் அது அதிரடியாக, புரட்சிகரமாக செய்ய முடியுமான ஒன்றல்ல. காலத்தின் தேவைக்கு அமைய நிகழ்ந்தாலே அடுத்த தலைமுறையால் மைதானத்தில் உருப்படியாக சாதிக்க முடியும்.
எஸ்.பிர்தெளஸ்