இலங்கை கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் உருவெடுத்த முரண்பா டுகளைத் தொடர்ந்து இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சுப் பதவிகளிலிருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார்.
அவருடைய பதவிக்கு அமைச்சர்களான ஹரின் பெர்னாந்து மற்றும் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் மோசடி இடம்பெற்றிருப்பதாகத் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்த முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் மீதும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
அரசாங்கத்தின் அமைச்சரவையின் உறுப்பினராக இருந்தும் கூட்டுப்பொறுப்பை மீறியமைக்காகவே அவருடைய பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குச் சென்ற அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் ஜனாதிபதி இரண்டு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அதாவது, ‘கிரிக்கட் நெருக்கடிக்குத் தீர்வுகாண சர்வதேச கிரிக்கட் கவுன்சிலுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ள இவ்வேளையில், விளையாட்டு அமைச்சர் என்ற வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்துக்குச் சென்று எதிர்க்கட்சியின் கொரடாவுடன் இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசியது ஏன் என்ற முதலாவது கேள்வியை ஜனாதிபதி கேட்டுள்ளார்.
அத்துடன், மகாவலி காணி பகிர்வு விடயமாக அமைச்சராக ரொஷான் ரணசிங்க சர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் முன்மொழியப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அவரது அசியல் நண்பர்கள் மற்றும் உறவினர்களாக உள்ளனர். அவ்வாறு செய்தது ஏன் என்பது ஜனாதிபதியின் இரண்டாவது கேள்வியாக அமைந்தது.
அப்பாவி மக்கள் இருக்கும் நிலையில் அவ்வாறு செய்தது தவறு என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார். இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தவறியமையால் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறியதாகச் சுட்டிக்காட்டி பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர் ஒருவர் பதவி விலக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவ்வாறான முறையில் அமைச்சுப் பதவிகள் நீக்கப்படவில்லையென அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசாங்கத்தின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடி தீர்வு காண்பதற்காகவே அமைச்சரவை அமைச்சர்கள் இருக்கின்றனர். அப்படியிருந்தும் இதுபோன்ற பிரச்சினைகளை அரசாங்கத்தால் தீர்க்க முடியாவிட்டால், அத்தகைய பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்தி இல்லாத எதிர்க்கட்சிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை.
அமைச்சரவைக்குள் பொறுப்புகள் மற்றும் மரபுகள் காணப்படுவதால் அமைச்சரவை உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார். எந்த அமைச்சருக்கு எந்த அதிகாரம் வழங்கப்படுகிறதோ, அந்த அமைச்சர் தனது நடவடிக்கைகளை அமைச்சரவைக்கு அறிவித்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கட் தொடர்பான சர்ச்சை கடந்த இரண்டு வாரங்களாகப் பாராளுமன்றத்தில் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியிருந்தது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் மோசடி இடம்பெற்றிருப்பதாகக் கூறி அமைச்சராகவிருந்த ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு இடைக்காலக் குழுவொன்றை நியமித்திருந்தார். முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுனா ரணதுங்க தலைமையில் இந்த இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு குழு நியமிக்கப்படுவது தொடர்பில் அமைச்சரவைக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அறிவிப்பதற்கு ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய இடைக்கால நிர்வாகம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
இருந்தபோதும், இவ்விடயம் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடி இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட்டமை மற்றும் கிரிக்கெட் நிறுவனம் குறித்த மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர்.
இந்த நிலையில் இடைக்கால அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு எதிராக நிதிமன்றம் சென்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றுக் கொண்டது. மறுபக்கத்தில் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பன இணைந்து மோசடியான கிரிக்கெட் நிர்வாகத்தை நீக்குமாறு பிரேரணையொன்றை நிறைவேற்றியிருந்தன.
இது விடயத்தில் கட்சி பேதம் இன்றி அனைவரும் ஒன்றிணைந்திருந்தனர். இருந்தபோதும், கிரிக்கெட் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை ரொஷான் ரணசிங்க அடுக்கி வந்தார். இவ்வாறான நிலையிலேயே அவருடைய அமைச்சுப் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரீன் பெர்னாந்து நியமிக்கப்பட்டுள்ளார். தனது புதிய பொறுப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், விளையாட்டு என்பது நாம் அனைவரும் விரும்பும் இடம். அதேபோல், இந்த விதிகளை மாற்றும் போது பின்பற்ற வேண்டிய பல நடைமுறைகள் உள்ளன. நான் யாருக்கும் எதிராகச் செயற்பட எதிர்பார்க்கவில்லை. அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட அனைவருடனும் ஒன்றிணைந்து இந்த கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் தூய்மைப்படுத்த எதிர்பார்த்துள்ளேன். அப்படி இல்லையென்றால் மக்கள் எதிர்பார்க்கும் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் ஒழுங்கீனங்கள் ஏற்பட்டிருந்தால் அது குறித்து செயற்படுவதற்கு அரசாங்கத்தின் கட்டமைப்புக்குள் இருந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனை விடுத்து கூட்டுப்பொறுப்பை மீறும் வகையில் செயற்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவில்லை. அது மாத்திரமன்றி, எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இவ்விடயம் கையாளப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது.
ஏனெனில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இவ்விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்பார்ப்பதாக முன்னாள் விளையாட்டு அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
பி.ஹர்ஷன்