நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளில் மற்றுமொரு சாதகமான சமிக்ஞை வெளியாகியுள்ளது. சர்வதேச நாணய நிதித்தின் விரிவாக்கப்பட்ட நிதி உதவியில் இரண்டாவது தவணைக்கான கொடுப்பனவை நாடு எதிர்பார்த்திருக்கும் நிலையில், சர்வதேச கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன.
இந்த முயற்சியில் தற்பொழுது சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையினால் முன்வைக்கப்பட்ட கடன்மறுசீரமைப்புத் திட்ட யோசனைக்குக் கடன் வழங்கிய நாடுகள் அனைத்தும் இணக்கம் தெரிவித்துள்ளமை சிறந்ததொரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவுருக்களுக்கு ஏற்ப இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான குறிப்பிட்ட நிதி விதிமுறைகள் குறித்த கொள்கை ரீதியான உடன்படிக்கையை உத்தியோகபூர்வ கடன் குழு உறுதிப்படுத்தியிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்தக் கடன் மறுசீரமைப்பின் ஊடாக இந்த நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கி அடுத்த வருடத்திற்குள் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் எனவும், இலங்கையானது வங்குரோத்து நிலையிலிருந்து விரைவில் விடுபட முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். கடன்வழங்கும் நாடுகளின் இந்த இணக்கப்பாடு காரணமாக வெளிநாட்டு நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிக்க தேவையான நிதியுதவி கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவிக்கப்பட்ட நிதி உதவியைப் பெறுவதாயின், கடன் மறுசீரமைப்புக்குச் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் வெளிநாட்டுக் கடன்கள் மாத்திரமன்றி உள்நாட்டுக் கடன்களும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கான முயற்சியை அரசாங்கம் எடுத்திருந்தது.
இலங்கைக்குக் கடன் வழங்கிய நாடுகளுடன் இந்தக் கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த முயற்சியில் ஜப்பான் மத்தியஸ்தம் வகித்திருந்தது. மறுபக்கத்தில் உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் முயற்சியிலும் அரசாங்கம் வெற்றிகண்டிருந்தது. வங்கி உள்ளிட்ட நிதித்துறையில் கைவைக்காமல் மாற்று வழிகளில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியின் இரண்டாம் தவணைக்கான கொடுப்பனவை வழங்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதலாவது மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இணக்கம் ஏற்படும் வரையில் முதலாவது மதிப்பாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியிருக்கவில்லை. இதுபோன்ற பின்னணியிலேயே தற்பொழுது கடன்மறுசீரமைப்பில் வெளிநாட்டுக் கடன் வழங்குனர்கள் அனைவரும் இணங்கியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியமும் வரவேற்றுள்ளது. அதேபோல, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும் இதனை வரவேற்றுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தகட்ட தவணையைப் பெற்றுக் கொள்வதில் இது முக்கியமான தாக்கத்தைச் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சிலர் அரசியல் ரீதியாக ஏற்படுத்தி சந்தேகம் தற்பொழுது நீக்கப்பட்டிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் ஏற்ப்டடுள்ள இணக்கப்பாட்டினால் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் முதலாவது மீளாய்வை பரிசீலிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு வழிவகுக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்தில் இரண்டாவது தவணைக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அது மாத்திரமன்றி, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களிடமிருந்து மேலும் உதவியைப் பெறுவதும் தற்பொழுது சாத்தியமாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படுத்தல் மற்றும் நாட்டை நிலையான பொருளாதார வளர்ச்சியின் பாதைக்குக் கொண்டு வருவதில் விரிவான சீர்திருத்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் இலங்கை உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பது இலங்கையைப் பொறுத்த வரையில் பாரியதொரு முன்னேற்றம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொருளாதாரத்தை அழிவிலிருந்து மீட்பதற்குத் தற்பொழுது காணப்படும் வழிகளில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி உதவியே முக்கியமானது.
நான்கு கட்டங்களைக் கொண்ட இந்த உதவியைப் பெற்றுக் கொள்வதில் கடன் மறுசீரமைப்பில் எட்டப்படும் இணக்கப்பாடு மிக மிக முக்கியமானது. இதன் அடிப்படையில் பாரியதொரு தடையை இலங்கை தற்பொழுது தாண்டியுள்ளது என்றே கூற முடியும். இருந்தாலும், கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கையில் இணங்கப்பட்டமைக்கு அமைய இலங்கை கட்டுக்கோப்புடன், உரிய மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகும்.
நாட்டைப் பொருளாதார ரீதியில் மீட்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், பாராளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களில் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுவதை விடுத்து வெவ்வேறு விடயங்கள் பாராளுமன்றத்தில் அதிகம் பேசப்படும் போக்கொன்றை அவதானிக்க முடிந்துள்ளது.
குறிப்பாக எதிர்க்கட்சியினர் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்வதில் தமது பங்களிப்பைச் செலுத்துவதை விடுத்து அரசியல் நோக்கங்களைக் கொண்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இரண்டு விடயங்களே பாராளுமன்ற விவாதங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தியிருந்தன. பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் காணப்பட்ட இழுபறி நிலைமை மற்றும் இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான சர்ச்சை என்பன குறித்தே பாராளுமன்றத்தில் அதிக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்புப் பேரவை அனுமதிக்கவில்லையென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அரசியலமைப்புப் பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பிரிவா அல்லது சட்டவாக்கத்தின் ஒரு பிரிவா என்பது குறித்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
எவ்வாறாயினும், பொலிஸ்மா அதிபரை நியமிப்பதில் தாமதம் ஏற்படுவதுடன், நீதித்துறைக்கான நியமனங்கள் அரசியலமைப்புப் பேரவையின் தீர்மானங்களினால் மேற்கொள்ளப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
‘இன்று, பொலிஸ் திணைக்களத்திற்கோ அல்லது நீதித்துறைக்கோ நியமனங்களைச் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். சபாநாயகர் அரசியலமைப்புப் பேரவைக்குக் கடிதம் எழுதியுள்ளார், மேலும் தங்களால் ஒரு முடிவை எடுக்க முடியாது என்று அவர்களின் பதில் கூறுகிறது. அரசியலமைப்புப் பேரவைக்கு இன்னும் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படவில்லை’ என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்புப் பேரவையின் செயல்பாடுகள் தொடர்பான சிக்கல்கள் காரணமாக ஏற்படும் தாமதங்கள் குறித்து ஆராய்வதற்குப் பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி பரிந்துரைத்தார். இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்ததுடன், இந்த விவகாரத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது.
இதனை விடவும், வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் அதிகம் பேசப்பட்ட விடயமாக இலங்கை கிரிக்கெட் மற்றும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க விவகாரம் காணப்படுகிறது. சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் பாராளுமன்ற அமர்வில் ஏறத்தாழ 2 மணித்தியாலங்களாக இந்தக் கிரிக்கெட் விவகாரத்தை எதிர்க்கட்சியினர் கையில் எடுத்துக் கொண்டார்கள். வரவுசெலவுத்திட்டத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தில் அதிக நேரம் இதற்காக செலவுசெய்யப்படுவதாக ஆளும் கட்சி குற்றஞ்சாட்டியிருந்தது.
நாடு பொருளாதார ரீதியில் சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வரவுசெலவுத்திட்டத்தில் காணப்படும் குறை நிறைகள் பற்றி எடுத்துக்கூறி நாட்டை சரியான பாதையில் இட்டுச்செல்வதற்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்காது அரசியல் நோக்கத்திலான விடயங்களைக் கையில் எடுத்து நேரத்தை வீணடிக்கும் முயற்சிகளிலேயே எதிர்க்கட்சியினர் ஈடுபடுகின்றனர்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுடன் இணங்காமல் அரசியல் செய்வதிலேயே எதிர்க்கட்சியினர் காலத்தைக் கடத்தி வருகின்றனர்.