தமிழரசுக் கட்சி தலைமைக்கு இருவர் போட்டியிடுகிறார்களென்று சொல்வது தவறென்பதுடன், இதற்காக பலருடைய பெயர் முன்மொழியப்படுகிறது. இது தொடர்பாக கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் கூடி வாக்களித்து, அதை தீர்மானிப்பார்களென, ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மிகவும் ஆரோக்கியமானதொரு விடயமாக தான் அதைக் கருதுவதுடன், எவர் வெற்றி பெற்றாலும், மற்றவர்களுடன் தொடர்ந்து இணைந்து கட்சி அங்கத்தவர்களாக தாம் செயற்படுவோமெனவும், அவர் தெரிவித்தார். மன்னாரில் நேற்று முன்தினம் (01) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்த போது, “இது எமது கட்சியினுடைய யாப்பின் அடிப்படையில் தலைமை பதவிக்கு சிலருடைய பெயரை குறித்ததொரு முறையில் கட்சி உறுப்பினர்கள் பிரேரிக்கலாமென்பதுடன், அவ்வாறே இவருடைய பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது. எமது சம்மதத்துடனுமே தான். ஆனால், மற்றவர்கள் தான் எமது பெயரை பிரேரித்திருக்கின்றார்கள். அப்படியாக ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் பிரேரிக்கப்படுகின்ற போது, எமது யாப்பில் அது எப்படியாக அந்தத் தெரிவு நடைபெற வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியென்ற அடிப்படையில் ஜனநாயகத்தில் பரிநாம வளர்ச்சியடைந்தோர், முதிர்ச்சி அடைகின்ற நிலையில் ஒரு தலைமை பதவிக்கு பலர் தகுதி உடையவர்களாக இருப்பது கட்சியினுடைய பலமான விடயமாகும். பல கட்சிகளுக்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லையென்று வாழ்நாள் தலைவர்களை வைத்துக்கொண்டுள்ள கட்சிகளை போலல்லாது, எமது கட்சியில் பலருக்கு அந்தத் தகுதி இருக்கிறது. எமக்கு தெரிந்தபடி அடுத்த வருடம் நாட்டில் தேர்தல்கள் பல நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 2024 செப்டெம்பர், ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதியினுடைய பதவிக் காலம் முடிவடைவதுடன், அது முடிவடைவதற்கு முன் செப்டெம்பர், ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலை நடத்தியாக வேண்டும். ஆகையால், அதற்கு முன் பாராளுமன்றம் கலைக்கப்படுமா? அல்லது அதற்கு பின் பாராளுமன்றத்துக்கு இன்னும் ஒருவருட காலம் இருக்கிறது. என்றார்.