எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமையை பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டுமென, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (01) வரவு -செலவுத்திட்ட குழுநிலை விவாதம் நடைபெற்ற போதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
காமினி லொக்குகே எம்.பி. உரையாற்றிய போது, இங்குள்ள அனைவரும் நாட்டு மக்களின் வாக்குகள் மூலம் நியமிக்கப்பட்டவர்கள். எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுப்படி இங்குள்ள மற்ற அனைவரும் படிப்பறிவில்லாதவர்கள், அவர் மட்டுமே அறிவாளி.
அவருடைய தந்தையை விடக் கற்றவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவரது தந்தை இந்த நாட்டின் ஜனாதிபதியானார். அவரது கல்வித் தகுதியை இந்நாட்டு மக்கள் நன்கறிவர்.
நீங்கள் மற்றவர்களின் கல்வித் தகுதியை குறைத்து மதிப்பிட்டீர்களானால், உங்கள் கல்வித் தகைமையை இந்த சபையில் சமர்ப்பியுங்கள். ஏனென்றால், இந்த விவாதங்கள் அனைத்தும் தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பாகின்றன. மக்கள் அதனை பார்க்கின்றனர். அப்போது முட்டாள்கள் மத்தியில் அவர் மட்டுமே அறிவாளி என்று மக்கள் நினைத்து விடுவார்கள். இங்குள்ள அனைவரும் உங்கள் தந்தையை விடக் கற்றவர்கள். உங்கள் கல்வித் தகைமையை இந்த சபையில் முன்வைக்குமாறு நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன்.
அவரது தந்தை காலத்தில் நான் பாராளுமன்றத்தில் இருந்துள்ளேன். அதனால் தந்தையின் கல்வித் தகைமை நமக்குத் தெரியும். எனவே, எதிர்க்கட்சித் தலைவரின் கல்வித் தகைமையை இந்த சபையில் சமர்ப்பியுங்கள்’ என்றார்.