வாலிபர்கள் தன்னோடு வம்பிழுத்தாலும்
குழந்தை அருகில் கொஞ்சிக்
குலவினாலும்
சற்றும் சலனமில்லை
ஏன் அதற்கு இவ்வளவு
பிடிவாதம்
ஏதும் சொல்ல மறுக்கிறதா
எதையாவது மறைக்கிறதா
அன்றாடம் அன்றாடாம்
அலங்காரம் செய்து
யாரைக் கவருகின்றது
பெறுமதியான ஆடையின்
விலை பார்த்தும்
பெருமூச்சு விடாமல் அணிகிறது
வீதியைப் பார்த்தபடி
விழிமூடாமல்
யாரை எதிர்பார்க்கிறது
வாசல் திறந்ததும்
வாய் திறக்காமலே
வரவேற்கிறது
மௌனம் தாய்மொழியா
தலையைக்கூட அசைக்காமல்
தவமிருக்கிறது- என்ன
வரம் கேட்டு
கண்ணாடி அறைக்குள்
காட்சி கொடுத்தாலும்
கர்வத்தைக் காணவில்லை
அணிவதில் ஓர் அதிசயம்
ஆடையைப் போட்டுக்
கொள்வதில்லை
பொருத்திக் கொள்கிறது
கறுப்போ சிவப்போ அத்தனையும்
அழகாக இருக்கிறது
விலையைப் பார்த்து
வியக்கவா போகிறது
கடைக்காரிக்கு கொஞ்சம்
கருணை இருந்திருக்கலாம்
தட்டித் துடைக்காமல்
தடவித் துடைப்பதற்கு
மௌன வரவேற்பு
79
previous post