உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் பின்னர் டிசெம்பர் மாதத்தில் 780 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெறவுள்ளதாக, அதிகாரியொருவர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு கடன் வழங்குநர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதுவரையில் வெளிநாட்டுக் கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு கடன் கால அவகாசம் வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடன் மற்றும் வட்டி செலுத்தும் காலத்தை நீடிக்கவும் கடன் வட்டியை ஓரளவு குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 330 மில்லியன் அமெரிக்க டொலரின் இரண்டாவது தவணை அடுத்த இரண்டு வாரங்களினுள் வெளியிடப்படவுள்ளது. உலக வங்கியுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் 250 மில்லியன் அமெரிக்க டொலர் அதிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது. இந்த டிசெம்பர் மாதத்தினுள் இலங்கைக்கு 780 மில்லியன் டொலர் அல்லது 257 பில்லியன் ரூபா கிடைக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் ஒருங்கிணைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் உள்நாட்டில் நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்புடைய ஒருங்கிணைப்புக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமை தாங்குகிறார்.