இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இந்த வருடம் 45,000 மாணவர்கள் அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
இதற்கான வெட்டுப்புள்ளிகள் (இஸட் ஸ்கோர்) நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு வெளியிடப்பட்டு, மூன்று மாதங்களில் வெட்டுப்புள்ளிகளை வெளியிட முடிந்துள்ளதன் மூலம் 2024ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்வியைப் பெற முடியுமெனவும், அவர் சுட்டிக்காட்டினார்.
2020ஆம் ஆண்டுக்கு முன்னர் 30,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பேராசிரியர் சம்பத் அமரதுங்க, 2020 முதல் தற்போதுவரை வழக்கமான மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக 50,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு முதல் சுற்றில் 42,147 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படுவதாக தெரிவித்த அவர், உயிரியல் பிரிவில் 9,896 மாணவர்களும், பௌதிகவியல் பிரிவில் 8,071 மாணவர்களும், வணிகவியல் பிரிவில் 7,850 மாணவர்களும், கலைப் பிரிவில் 11,780 மாணவர்களும், பொறியியல் பிரிவில் 2,295 மாணவர்களும் உயிரியல் தொழில்நுட்பப் பிரிவில் 1,536 மாணவர்களும் பிற பிரிவுகளுக்கு 719 மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறுந்தகவல் கிடைக்காத பட்சத்தில் ஆணைக்குழுவிடம் இது தொடர்பாக விசாரிக்கலாமெனவும், அவர் தெரிவித்தார்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களின் மனிதநேயப் பீடங்களுக்கும் ஏற்கெனவே (கலை) கணினி அறிவியலைக் (Computer Science) கற்கத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி கலைப் பிரிவில் உயர்தரப் பட்டதாரிகளும் பல்கலைக்கழகங்களில் கணினி அறிவியல் பட்டத்தைப் பெற முடியுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.