கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தை போன்று இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் கீழ் இந்த புலமைப்பரிசில் திட்டம் நேற்று முன்தினம் (01) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒவ்வொரு கல்வி வலயங்களிலிருந்து 50 மாணவர்கள்படி தெரிவு செய்யப்பட்டு, 5,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
கடந்த வருடத்தில் 3,000 மாணவர்களுக்கு 24 மாதங்களாக ஜனாதிபதி நிதியத்தால் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
2022 (2023) ஆண்டில் க.பொ.த. (சா.த) பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றிச் சித்தியடைந்து உயர்தரம் பயில்வதற்கு தகுதி பெற்றிருப்பது, அரச அல்லது கட்டணம் அறவிடப்படாத தனியார் பாடசாலையில் கல்வி கற்பது, குடும்ப மாத வருமானம் 100,000 ரூபாவுக்கு குறைவாக இருப்பது இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதியாக கொள்ளப்படுகிறது.
இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்துக்கான விண்ணப்பப்படிவத்தை ஜனாதிபதி செயலகம் presidentsoffice.gov.lk, ஜனாதிபதி நிதியம் presidentsfund.gov.lk ஜனாதிபதி ஊடகப் பிரிவு pmd.gov.lk ஆகிய இணையத்தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்ய முடியுமெனவும் விண்ணப்பப்படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து, சாதாரணதரம் கற்ற பாடசாலை அதிபரிடம் கையளிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்களின் ஒத்துழைப்பை ஜனாதிபதி நிதியம் எதிர்பார்த்துள்ளது.