சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யிதினா அஹ்மதுல் கபீருர்ரிபாயி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) ஆண்டகை ஞாபகார்த்தமாக நடைபெறும் 146 ஆவது ரிபாய் கந்தூரி நிகழ்வுகள் சங்கைக்குரிய அல்ஹாஜ் யு.பி. ஸெய்யித் முஹம்மத் ஆசிக் தங்கள் அவர்களது தலைமையில் கடந்த 14ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 11 நாட்கள் மஃரிபு தொழுகையின் பின் ரிபாய் மௌலீத் ஓதப்பட்டு தமாம் நிகழ்ச்சிகள் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 12, ரிபாய் தங்கள் வீதியில் அமைந்துள்ள முஹியத்தீன் தக்கியாவில் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது.
இன்றைய தினத்தில் அகில இலங்கை ரிபாய் தக்கியா சங்கத்தினதும் அதன் ஆயுட்காலத்தலைவரும் ஆன்மீக வழிகாட்டியுமான சங்கைக்குரிய அல்ஹாஜ் யூ.பி. ஸெய்யித் முஹம்மத் ஆசிக் தங்கள் அவர்களது அயரா முயற்சியால் வெலிகாமம் கபுவத்தை பிரதேசத்தில் உருவாக்கப்பட்டு இன்று தலை நிமிர்ந்து நிற்கின்ற ரிபாயிய்யா ஆண்கள் அறபுக்கல்லூரி மற்றும் பெண்கள் அறபுக் கல்லூரி என்பவற்றை குறிப்பிடலாம். இவ் அறபுக் கல்லூரிகள் அகில இலங்கை ரிபாய் தரீக்கா சங்கத்தினால் சங்கைக்குரிய யூ.பி. முஹம்மத் ஆசிக் தங்கள் அவர்களின் வழிகாட்டலின் பெயரால் நடாத்தப்படுவதுடன் இதன் அதிபராக மௌலவி அப்துல்லாஹ் ஸூபி (ரவ்ழி) கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அறபு மொழிக்கற்கையுடன் ஆங்கிலம், தமிழ் மற்றும் அரசாங்க பாடசாலைகளின் பாடங்களும் போதிக்கப்பட்டு வருவதுடன் பல மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவிற்கும் தெரிவாகி இன்று தங்களது பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளனர். மேலும் இம் மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் பட்டதாரிகளாக, ஆசிரியர்களாக, உலமாக்களாக தங்களது சமூகத்திற்கு பிரயோசனமளிக்கும் மார்க்க சேவைகளினூடாக ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். மேலும் சிலர் பல்வேறுபட்ட நிறுவனங்களில் பணிபுரிந்தும் வருகின்றார்கள்.
எமது மார்க்கமானது அறிவு தேடல் மற்றும் அது தொடர்பான விடயங்களில் ஈடுபடுவதற்கு அளப்பரிய முக்கியத்துவத்தை வழங்குகின்றது. மேலும் எமது காருண்ய திலகம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும்போது; கல்வியை தேடிக் கற்பதானது ஆண், பெண் இரு பாலாரதும் கடமை என்பதுடன் இதை பல்வேறுபட்ட அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களும் சான்று பகர்கின்றன.
அந்த வகையில், இன்று தென் மாகாணத்தின் வெலிகாமம் கபுவத்தையில் உள்ள ரிபாயிய்யா அறபுக்கல்லூரி ஈருலகக் கல்வியையும் போதித்து அளப்பரிய சேவை புரிவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாததொன்றாகும்.
மேலும், சங்கைக்குரிய யூ.பி. ஸெய்யித் முஹம்மத் ஆசிக் தங்கள் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் சென்ற காலங்களில் அண்ணளவாக பத்து வருடங்கள் இலங்கை வானொலி முஸ்லிம் தேசிய சேவையினூடாக நடைபெற்று வந்த ‘கன்ஸுர் ரிபாய்’ நிகழ்ச்சியினூடாக தொடர்ச்சியாக நாட்டு மக்களுக்கு பயன்தரும் வகையில் அப்துல்லாஹ் ஸூபி (ரவ்ழி) ஹஸ்ரத் அவர்களது மார்க்க உபதேச பணியானது பல்வேறுபட்ட தரப்பினரதும் பாராட்டுக்களைப் பெற்றதுடன் இந் நிகழ்ச்சியூடாக பயன்பெற்ற மக்கள் அப்துல்லாஹ் (ரவ்ழி) அவர்களிடம் தொலைபேசியூடாகவும் தமது மார்க்க சம்பந்தமான விடயங்களை அறிந்து தெளிவு பெற்றதுடன் பல்வேறு பாகங்களிலுமிருந்து குத்பா பிரசங்கத்திற்கான அழைப்புக்கள் வந்தவண்ணமுள்ளன.
அதிசங்கைக்குரிய தங்கள் நாயகம் அவர்களது மற்றுமொரு சேவையாக கபுவத்தை பிரதேசத்தில் தங்கள் நாயகத்தின் முன்னோர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு பழைமை வாய்ந்த பள்ளிவாசலின் மிக நீண்ட கால புனர் நிர்மாணத் தேவையை தமது புனித கிருபையான முயற்சியினால் பூர்த்தி செய்திருப்பதுடன் இன்று அந்தப் பள்ளிவாசல் மூன்று மாடிகளைக் கொண்டதாகவும் உயர்ந்த மினாராவுடனும் தலை நிமிர்ந்து காட்சியளித்துக் கொண்டிருப்பதைக் குறிப்பிடலாம்.
அதேபோன்று, கொழும்பு – 12, ரிபாய் தங்கள் வீதி அமைந்துள்ள முஹியத்தீன் தக்கியா கட்டடத்தையும் புனர் நிர்மாணித்து தனது அயராத முயற்சியினால் இன்று நான்கு மாடிகளாக அமைத்து அங்கிருந்து எமது ரிபாய் தரீக்காவின் ஆன்மீகப்பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும் எமது அதிமேன்மைக்குரிய அல்ஹாஜ் யூ.பி. ஸெய்யித் ஆசிக் தங்கள் அவர்களுடன் கைகோர்த்து பல்வேறுபட்ட சமூக சேவைகளை தங்கள் நாயகம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இச்சமூகத்திற்கு செய்திட பலரும் தொண்டர்களாக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எல்லாம் வல்ல இறைவன் எமது மேலான தங்கள் நாயகம் அவர்களிற்கும் அவர்களுடன் கைகோர்த்துள்ள அனைத்து மக்களுக்கும் ஈரருள் பாக்கியங்களையும் சொறிந்தருள்வானாக. ஆமீன் யாரப்புல் ஆலமீன்.