இந்தியா, ஜப்பான் பிரான்ஸ் மற்றும் பாரிஸ் கழகம் உள்ளிட்ட இலங்கையின் வெளிநாட்டு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ள கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு அமைவாக 5.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி மீளாய்வு செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதேநேரம், டிசம்பர் மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதியான 2.9 பில்லின் அமெரிக்க டொலர்களில் இரண்டாவது தவணைப் பெறுமதியான 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்குமென்ற நம்பிக்கை அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மையில், இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அடிப்படையாக காணப்படுவது 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தான். சர்வதேச நாணய நிதியத்தைப் பொறுத்தவரையில் உள்நாட்டு நிலைமைகள் எவ்வாறிருந்தாலும் மறுசீரமைப்பு என்பதன் பெயரால் தமது நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்துகொள்வதில் குறியாக இருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் இத்தகைய இறுக்கமான நிலைமைக்கு காரணம் இலங்கை அரசாங்கமே. கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொண்ட இலங்கை அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உடன்பட்ட நிபந்தனைகளை நிறைவு செய்தது கிடையாது. 18 தடவைகளுக்கு மேலாக சர்வதேச நாணய நிதியத்தினை இலங்கை அரசாங்கம் ஏமாற்றியிருக்கின்றது.
இதன்பின்னரும், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குகின்றது என்றால், நிச்சயமாக தனது உடன்பாடுகளை ஒன்று மூன்று தடவைகள் உறுதிப்படுத்திக்கொள்வதில் அது தீவிரமாக இருக்கும் என்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.
அவ்வாறிருக்கையில், ‘புரட்சிகரமான- வரவு, செலவுத்திட்டம்’ என்ற தொனிப்பொருளுடன் கடந்த மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு, செலவுத்திட்டத்தில் 4,127 பில்லியன் ரூபாய் வருமானமாகவும், 6,978 பில்லியன் ரூபாய் செலவீனமாகவும் காண்பிக்கப்பட்டுள்ளதோடு 2,851 பில்லியன் ரூபாய் துண்டுவிழும் தொகையாக உள்ளது.
இந்நிலையில், 2,851 பில்லியன் ரூபாய் துண்டுவிழும் தொகையை அரசாங்கம் ஈடுசெய்வதற்கு என்ன செய்யப்போகின்றது என்பது தொடர்பில் ஒருதெளிவான வரைபடம் இல்லாத பரிதாப நிலைமைகளே உள்ளன. விஷேடமாக, உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்தல், ஏற்றுமதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் காத்திரமான முன்மொழிவுகள் எவையும் காணப்படவில்லை.
ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கரிசனைக்கு அமைவாக உள்நாட்டு வரி அறவீட்டுச் செயற்பாட்டில் அரசாங்கம் தீவிரமான கவனம் செலுத்தியிருக்கின்றது.
உள்நாட்டில் வரிகளை அறவீடு செய்வதில் எந்தவிதமான பிரச்சினைகளும் கிடையாது. உலக வல்லரசுகள் கூட மக்களின் வரிகளில் தான் இயங்குகின்றன. ஆனால் அவ்வாறு வரிகளைப் பெற்றுக்கொள்ளும் அரசாங்கங்களில் பொதுமக்களுக்கு வழங்குகின்ற நலத்திட்டங்களை அல்லது பொருட்கள் சேவைகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
உதாரணமாக, பிரித்தானியாவில் வரிசெலுத்தும் ஒருபொதுமகன் பெற்றுக்கொள்கின்ற சுகாதார சேவைக்கும், இலங்கையில் ஒருபொதுமகனுக்கு வழங்கப்படுகின்ற இலவச சுகாதார சேவைக்கும் இடையிலான வேறுபாடானது மலைக்கும், மடுவுக்கும் சமமானதாக உள்ளது.
அதேநேரம், நாட்டின் வரிக்கொள்கை அனைத்துப் பிரஜைகளுக்கும் சமமானதாகவே இருக்கின்றது. இதனால் ஆயிரம் ரூபா வருமானம் ஈட்டுபவரும், ஐம்பதாயிரம் ரூபா வருமானம் ஈட்டுபவரும் செலுத்தும் வரியின் அளவில் வேறுபாடுகள் இல்லை. ஆகவே வரி அறவீடுகளை செய்கின்றபோது இயல்பாகவே பாதிக்கப்படப்போவது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சாதாரண மக்களே.
ஜூன் 2023 வரை இலங்கையின் வரி வருமானம் 50 சதவீதம் அதிகரித்து 1,198 பில்லியன் ரூபாவாக இருந்ததோடு, மேலும் வட்டி அல்லாத செலவினங்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டது, இதனால் வரி அல்லாத வருமானம் 43 சதவீதம் அதிகரித்து 116.0 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இதனால் மொத்த வருவாய் 43 சதவீதம் அதிகரித்து 1,317 பில்லியன் ரூபாவாக உள்ளது. எனினும் தற்போதைய செலவினங்களும் 48 வீதம் அதிகரித்து 2,325.5 பில்லியன் ரூபாவாக உள்ளது.
இவ்வாறு தரவுகள் காணப்பட்டாலும், பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையின் காரணமாக தனியாள் மற்றும் குடும்பம் ஆகியவற்றின் வாழ்வாதாரச் செலவினங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, வறுமைக்கோட்டுக்குள் உட்பட்டுள்ள மக்கள் மேலும் நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர்.
அதேநேரம், நடுத்தர வகுப்பு மக்களின் வாழ்க்கை திண்டாட்டமாக மாறியுள்ளது. ஆனால் செல்வந்தர்களின் நிலைமைகளில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அவர்களின் நிலைமைகள் மேலும் சீர் பெறுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் இருந்துகொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெறுமதிசேர் வரியை (வற்வரி) 15 சதவீதத்திலிருந்து 18சதவீதத்துக்கு அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே நேரடியான வரிகளுக்கு மேலதிகமாகவே மறைமுக வரியான வற்வரியை அரசாங்கம் அதிகரித்திருந்தது. அதன்காரணமாகவே நாட்டில் சாதாரண மக்கள் வாழ்வாதாரத்துக்காக போராட வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இருக்கத்தக்கதாக, வற்வரியை மீண்டும் அதிகரித்து நடைமுறைப்படுத்துவதானது மிகப்பெரும் அனர்த்தத்தினை நாட்டில் உருவாக்கப்போகின்றது.
நிச்சயமாக நடுத்தர வருமானம் பெறுகின்ற தரப்பினர் வறுமைக்கோட்டுக்குள் செல்வதற்கான நிலைமைகளே அதிகமாக உள்ளன. அதேபோன்று வறுமைக்கோட்டுக்குள் இருப்பவர்களின் வாழ்வாதாரம் நிச்சயமற்ற நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்துக்கள் உள்ளன.
மேலும், நாட்டில் உள்ள புத்திஜீவிகளும், அடுத்த சந்ததியினரும், இந்த நாட்டில் தமக்கு எதிர்காலம் இல்லை என்கின்ற முடிவோடு தொடர்ச்சியாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றார்கள். அண்மைய காலத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான வைத்தியர்கள் வெளியேறிவிட்டதாக தரவுகள் உள்ளன. அதேபோன்று ஏனைய துறை சார்ந்த நிபுணர்களும் புத்திஜீவிகளும் வெளியேறியுள்ளார்கள்.
தற்போது நாட்டில் உள்ள வைத்தியர்கள் மற்றும் புத்திஜீவிகளில் அதிகளவானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பெறும் வருமானத்தில் பெரும்பங்கினை வரியாக செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ள நிலைமையே மேற்படி முடிவுகளை எடுப்பதற்கு அவர்களை தள்ளிச் சென்றுகொண்டிருக்கின்றது.
அவ்வாறானதொரு நிலையில் மீண்டும் வற்வரியை அதிகரிப்பதானது, குறிப்பிட்ட துறைசார் நிபுணர்களை மிக விரைவாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கே வழிசமைக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
ஆகவே அரசாங்கம் வற்வரி அதிகரிப்பு உட்பட நேரடி மற்றும் மறைமுக வரிகளை அதிகரிக்கும் தனது யோசனையை உடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோன்று சர்வதேச நிதி நிறுவனங்கள், நாடுகள் ஆகியவற்றின் நன்கொடைகளில் தங்கியிருக்கும் சூழலையும் மாற்ற வேண்டும்.
அதற்காக அரசாங்கம் உடன் செய்ய வேண்டியது நாட்டில் காணப்படுகின்ற வளங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிப்பதாகும். அரசாங்கத்துக்கு 2018ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு பில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. ஏனைய காலங்களில் ஒரு பில்லியன் டொலர்களும் அதற்கு குறைவான தொகையுமே கிடைத்துள்ளன. இந்த நிலைமையில் சடுதியான மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறில்லாது நாட்டை பொருளாதார ரீதியாக சீர்படுத்துவதாக கூறிக்கொண்டு வரிகளில் தங்கியிருப்பதால் ஈற்றில், மனித வளத்தை இழந்ததொரு நாடாகவே இலங்கை தோற்றம் பெறும்.
அதேநேரம், நாட்டில் மாறிமாறி ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் காலத்தில் நடைபெற்ற ஊழல், மோசடிகளின் போது காணாமலாக்கப்பட்டுள்ள பாரிய நிதியை மீட்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகின்றது. இலங்கை மத்திய வங்கி நிதி மோசடியாக இருக்கலாம், கடந்த காலத்தில் நடைபெற்ற பாரிய மோசடிகளாக இருக்கலாம் அவற்றின் மூலமாக இழக்கப்பட்டது பொதுமக்களின் வரிப்பணம் தான். ஆகவே அவற்றை மீட்பதற்கான சர்வதேச பொறிமுறைக்கு உடன் செல்லவேண்டியதும் அவசியமாகின்றது. இந்தச் செயற்பாடு, தேர்தல் அரசியலுக்கு அப்பால் மேற்கொள்ளப்பட வேண்டிது அவசியமாகின்றது.
அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புத்தரின் சகவாழ்வுப் போதனையைச் சுட்டிக்காண்பித்து குறைந்த வருமானத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது தவறு என்றும் உண்மையான புரிதல் உள்ள ஒருவர் வரவு செலவை சமப்படுத்தி தனது வாழ்க்கைத் தரத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அவரது இந்த முன்னுதாரணக் கூற்றானது வெறுமனே பௌத்த மதத்தினைப் பின்பற்றுபவர்களுக்கோ அல்லது ஒட்டுமொத்த பிரஜைகளுக்குமானதோ அல்ல. அரசியல்வாதிகளுக்கும் தான். தற்போது வரையில் மக்களை தியாகம் செய்யுமாறு எத்தனையோ கோரிக்கைகளை முன்வைக்கிறது அரசாங்கம்.
ஆனால், ஆகக்குறைந்தது பாராளுமன்றத்தினை தற்போது பிரதிநிதித்துவம் செய்யும் 225 பேரும் என்ன தியாகத்தினைச் செய்திருக்கின்றார்கள் என்பது தான் இங்குள்ள பெருங்கேள்வி. அவர்கள் தமக்கான கொடுப்பனவுகளில் ஏதாவதொன்றை மக்களுக்காக தியாகம் செய்துள்ளார்களா?
ஆகக்குறைந்தது, தமது உண்மையான சொத்து விபரங்களை வெளியிட்டு நாட்டின் வரிக்கொள்கைக்கு அமைவாக உண்மையான வரிசெலுத்துபவர்களாக பிரஜைகளுக்கு முன்மாதிரியாக நடக்கின்றார்களா?
ஆகவே, தியாகத்தையும் மாற்றத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்ப்பதை போல், மக்கள் பிரதிநிதிகளும் ஆரம்பித்தால் நாடு விரைவில் சுபிட்சம் பெறும்.
ரஹ்மத் மன்சூர் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் (மு.கா) முன்னாள் பிரதி முதல்வர் கல்முனை மாநகர சபை