காசாவுக்கு எதிரான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலால் பதிைனந்தாயிரத்திற்கும் அதிகமான காசா மக்கள் உயிரிழந்துள்ளனர். பொதுக்கட்டடங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள் என்று அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார், நோயாளிகள் என்ற எந்த வேறுபாடும் இல்லாத மிலேச்சத் தனமான தாக்குதலால் அனைவரும் அந்தப் பகுதியிலிருந்து முழுமையாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இப்பிரச்சினை ஆரம்பித்த ஆரம்ப நாட்களிலேயே இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முழுமையான முயற்சிகளை ஆரம்பித்தது சவுதி அரேபியா. இராஜ தந்திர ரீதியாக இப்பிரச்சினையினை அணுகி முடியுமான அனைத்து நாடுகளுடனும் பேசி இப்போரை நிறுத்துவதற்கான முயற்சிக்களை மேற்கொள்ள களமிறங்கியது. 8.10.2023 அன்றே சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் சர்வதேச நாடுகளின் வெளிவிவகார அமைச்சார்கள் ஊடாக தனது முயற்சிகளை முன்னெடுத்தார். இஸ்லாமி ஒத்துழைப்பு மையம், அரபு நாடுகள் ஒன்றியம், ஐ. நா. சபை, ஐரோப்பிய நாடுகள், என்று அனைத்து நாட்டு அமைப்புக்களுடனும் உயர்மட்ட அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. பலஸ்தீன் விவகாரத்தில் முஸ்லிம் நாடுகளுக்கிடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவும் அவற்றை உலகின் அனைத்து நாடுகளுக்கும் அறிவிக்கவும் களப் பயணங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. அதேநேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான முழுமையான நிவாரணங்களை வழங்கவும் பல நாடுகளின் ஒத்துழைப்புடன் எகிப்தின் வாயில்களைத் திறப்பதற்கான நிர்ப்பந்தங்களை வழங்கியது, அதில் வெற்றியும் கண்டது. திறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை முழுமையாக நிவாரணங்களை வழங்க முயற்சித்து வருகின்றது. காசாவில் பாதிக்கப்பட்டுவரும் மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக ஸாஹிம் செயலியின் ஊடாக மக்களின் பங்களிப்புக்களைப் பெறுவதற்கான முயற்சியை ஆரம்பித்தது. தற்போது வரை 540மில்லியனுக்கும் அதிகமான ரியால்களைச் சேகரித்து வெற்றிநடை போடும் அதேவேளையில், வான், கடல், தரை மார்க்கமாக நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றது.
இதுவரை 21 விமானங்கள், 2000தொன் நிறையுடைய நிவாரணப் பொருட்களை சுமந்த 2 கப்பல் என்பன அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மருந்து, உணவு, தற்காலிக கூடாரம், அம்பியுலன்ஸ் என அனைத்து விதமான உதவிகளையும் அவை சுமந்து செல்கின்றன. பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டத்தில் காசாவில் நடக்கும் மனித அவலங்களைக் கவனத்திற்கொண்டு இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் ஏற்றுமதி செய்வதை நிறுத்துமாறு சவுதி வேண்டுகோள் விடுத்தது. முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் காசா பிரச்சினை தொடர்பில் ஒரு ஓருமித்த நிலைப்பாட்டை உருவாக்குவதற்கான பரந்த முயற்சிகளை மேற்கொள்ளும் அதேநேரம் 1967ஆம் ஆண்டில் அனைத்து நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட பைதுல் மக்திஸை தலைமையகமாகக் கொண்ட பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்குவதே நிரந்தரமாக இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி எனவும் தனது அறிக்கைகளில் தெளிவுபடுத்தி வருகின்றது.
இவ்வாறு சவுதி அரேபியா தன்னிடம் கொட்டிக் கிடங்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் காசாவுக்காகவும் ஏனைய முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்களுக்காகவும் மனிதாபிமான அடிப்படையில் வழங்கி உதவி செய்துவரும் நிலையிலும் அதை விமர்சிப்பவர்களும் தூற்றுபவர்களும் குறைந்தபாடில்லை. காய்க்கும் மரத்திற்கே கல்லடி அதிகம் என்ற கூற்றுக்கிணங்க எதையும் கண்டுகொள்ளாமல் வழமைபோன்று தனது பணிகளைத் தொடர்கின்றது சவுதி அரேபியா.
கலாநிதி. எம்.பி.எம். இஸ்மாயில்
வாழைச்சேனை.