எமது இலங்கைத் தேசம் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுமென்ற எதிர்கால நம்பிக்கைகள் தற்போது பிரகாசமாகத் தெரிகின்றன. இலங்கையில் வங்குரோத்து நிலைமையினால் இடைநடுவில் கைவிடப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதற்கு எமக்கு உதவுகின்ற நாடுகள் தற்போது நம்பிக்கை சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கின்றன.
அதேசமயம் இலங்கை இனிமேல் எந்தவொரு நாட்டிடமிருந்தும் நீண்டகாலக் கடனுதவியை நம்பிக்கையுடன் பெற்றுக் கொள்ளக் கூடிய ஸ்திர நிலைமையையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இலங்கையின் துரித பொருளாதார மீட்சியை சர்வதேச நாணயம் மற்றும் உலகின் பொருளாதார வல்லரசு நாடுகளே பாராட்டியிருக்கின்றன. இதனை சுருங்கச் சொல்வதாயின், இலங்கை தன்னை மாத்திரம் ஸ்திரப்படுத்திக் கொள்ளவில்லை, இந்நாட்டுக்கு நம்பிக்கையுடன் கடனுதவிகளை வழங்கக் கூடியவாறான உறுதியான கட்டமைப்பையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளதென்பதே அர்த்தமாகும்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பெருமுயற்சிகளைப் பொறுத்தவரை கடந்த வாரம் வெளிப்பட்ட முக்கியமான நம்பிக்கைதரும் விடயமொன்றை இவ்விடத்தில் குறிப்பிடுவது அவசியம். இலங்கை முன்வைத்த கடன்மறுசீரமைப்புத் திட்ட யோசனைக்கு, கடன் வழங்கிய நாடுகள் அனைத்தும் இணக்கம் தெரிவித்திருக்கின்றன. ஆகவே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து டிசம்பர் மாதத்தில் இரண்டாவது தவணைக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கை இப்போது தோன்றியிருக்கின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களிடமிருந்து மேலும் உதவியைப் பெறுவதும் தற்பொழுது சாத்தியமாகியுள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றத்துக்கு சர்வதேசம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. இலங்கை தனது பொருளாதார அபிவிருத்திக்காக சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வழிதிறந்துள்ளதென்று சர்வதேசம் பாராட்டியுள்ளது. வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு இலங்கை தயாராகி விட்டதென்பதே இதன் பொருள் ஆகும்.
அதலபாதாளத்திலிருந்து பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் தீவிர உழைப்பைப் பொறுத்தவரை இதனை ‘பொருளாதார மீட்சிப் போராட்டத்தின் வரலாற்றுத் திருப்புமுனை’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
இந்த நம்பிக்கையின் மறுபக்கத்தை நாட்டு மக்கள் தற்போது சீர்தூக்கிப் பார்ப்பது மிகவும் அவசியம். அரசியல் தலைமைத்துவத்துக்கு ‘வெறும் வெற்றுவேட்டு மேடை முழக்கங்கள்’ ஒருபோதுமே பயன் தரப்போவதில்லை. அனுபவம், ஆளுமை, ஆற்றல், சர்வதேச செல்வாக்கு, நிதானம் ஆகியனவே நாட்டின் தலைமைத்துவத்துக்கான பண்புகளாகும்.
இலங்கையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச நம்பிக்கையைப் பெற்றெடுத்தன் ஊடாக நாட்டின் தலைமைத்துவத்துக்கான தனது ஆளுமையை நிரூபித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதே உண்மை.