2023 ஆம் ஆண்டுக்காக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி முன்னெடுத்திருந்த நேஷன்ஸ் பிஸ்னஸ் ஆலோசனைத் தொடரை அண்மையில் வெற்றிகரமாக பூர்த்தி செய்தது. இந்தத் தொடரின் எட்டாவதும், இறுதியானதுமான அமர்வு கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 350 பங்குபற்றுநர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வின் பிரதான பேச்சாளராக JB Securities Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும், Advocata Institute இன் தவிசாளருமான முர்தஸா ஜாஃபர்ஜீ கலந்து கொண்டு, வியாபார சமூகத்துடன் பரந்தளவு தலைப்புகளில் தகவல்களை பகிர்ந்திருந்தார்.
இந்த கலந்துரையாடல்களில் தற்போதைய பொருளாதார போக்கு, GDP வளர்ச்சியின் தூரநோக்கு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் (FTAs), வரி விதிப்பனவு மற்றும் அரச உரிமையாண்மை நிறுவனங்களின் (SOE) மறுசீரமைப்பு போன்றன அடங்கலாக கட்டமைக்கப்பட்ட பொருளாதார மாற்றங்கள் மற்றும் வியாபார விரிவாக்கத்துக்கான வாய்ப்புகள் போன்றன அடங்கியிருந்தன.
மேலும், மேம்படுத்தப்பட்ட வினைத்திறன் மற்றும் போட்டிகரத்தன்மை தொடர்பில் டிஜிட்டல் மயமாக்கலை செம்மையாக்கல், சர்வதேச மற்றும் உள்நாட்டு அபிவிருத்தி பிரிவுகளில் காணப்படும் வளர்ச்சி வாய்ப்புகளை கண்டறிதல் மற்றும் நீண்ட கால வியாபார மீட்சியை உறுதி செய்வதற்கு மூலோபாய திட்டமிடல் ஆகியன பற்றியும் பேசப்பட்டிருந்தன.
நேஷன்ஸ் பிஸ்னஸ் ஆலோசனை தொடர், குருநாகல், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காலி, நீர்கொழும்பு மற்றும் எல்ல ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், வட மேல், வடக்கு, கிழக்கு, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த வணிக வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயனளிப்பதாக அமைந்திருந்தது.