தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, இலங்கையில் அதிகம் விரும்பப்படும் சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை பட்டய முகாமைத்துவ கணக்கியலாளர்கள் கல்வியகம் (CIMA), இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் டெய்லி எஃப்டி நாளிதழ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 2022 ஆம் ஆண்டுக்கான அதிகம் விரும்பப்படும் சிறந்த 10 நிறுவனங்கள் வரிசையில் SLT-MOBITEL தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் முக்கியத்துவம் வாய்ந்த விருதுகளில் ஒன்றாக இது அமைந்திருப்பதுடன், நிறுவனங்களின் நிதிசார் பெறுபேறுகள் மாத்திரமன்றி, நிலைபேறான பெறுமதி உருவாக்கம், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சமூகம் போன்றவற்றின் மீதான ஒழுக்கமான நடத்தை போன்றவற்றையும் கௌரவிப்பதாக அமைந்துள்ளது.
நிறுவனத்தின் பயணத்தில் SLT-MOBITEL இன் சாதனைகள் முக்கியமான மைல்கல்லை பதிவு செய்துள்ளதுடன், சிறப்பு மற்றும் ஒழுக்கமான வியாபார செயன்முறைகள் ஆகியவற்றுக்கு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. மேலும், புத்தாக்கம், வாடிக்கையாளர் – மையப்படுத்திய செயற்பாடுகள் மற்றும் சமூகத்துக்கான சேவை போன்றவற்றை ஊக்குவிப்பதனூடாக, நாட்டின் மிகவும் விரும்பப்படும் நிறுவனங்கள் வரிசைக்கு தெரிவாகக்கூடியதாக இருக்கும்.