ஹமாஸ், -இஸ்ரேலிய போர் முடிவற்ற மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய சட்டங்களையும் வரைபுகளையும் தொலைத்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் போர் மீளமுடியாத நெருக்கடிக்குள் உலகத்தை தள்ளியுள்ளது. மேற்குலகத்தின் அவல முகத்தை வெளிப்படுத்திய இஸ்ரேலிய, ஹமாஸ் போர் ஒடுக்கப்பட்டுள்ள தேசியங்களது இருப்புக்கு புதிய வடிவத்தை கொடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் போர் அடக்குமுறைக்குட்பட்ட தேசியங்களின் இருப்பினை பாதுகாக்க புதிய அணுகுமுறைகளைகளையும் வழிகளைத் தேட ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. ஹமாஸின் அணுகுமுறைகளை உலகத்திலுள்ள அடக்கு முறைக்குள்ளான தேசியங்கள் பின்பற்ற முனைகின்ற சூழல் தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது. அதேநேரம் ஹமாஸ், -இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டிருப்பதாகவும் ஹமாஸ் கைது செய்த பணயக்கைதிகளை விடுவிக்க முன்வந்ததுடன் இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்ட பாலஸ்தீனர்களை கைமாற்றவும் இஸ்ரேல் முன்வந்துள்ளது. இக்கட்டுரையும் ஹமாஸ், -இஸ்ரேல் தரப்புக்களுக்கிடையே நான்கு நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கான யதார்த்தத்தை தேடுவதாக அமையவுள்ளது.
இஸ்ரேல்-, ஹமாஸ் போர் நிறுத்தத்துக்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக (24.11.2023) கட்டார் அறிவித்துள்ளது. அமெரிக்கா, கட்டார், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளனர். இந்த உடன்பாட்டின் பிரகாரம் ஹமாஸ் தரப்பு முதல் நாள் போர் நிறுத்தத்தின் போது 25 பணயக்கைதிகளை விடுவிப்பதாகவும் இஸ்ரேல் இதற்கு பதிலாக 50 பாலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவிப்பதாகவும் உடன்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 12 தாய்லாந்து பணயக் கைதிகளை ஹமாஸ் முதற் கட்டமாக எகிப்து காஸா எல்லையில் கைமாற்றியுள்ளது. இப்பத்தி எழுதப்படும் போது அத்தகைய கைமாற்றும் நடைமுறை நிறைவு பெற்றுள்ளதாகவும், ஏனைய 13 பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் கட்டார் அறிவித்துள்ளது. அதனையே தாய்லாந்து ஜனாதிபதி தமது நாட்டுப் பிரஜைகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமே அத்தகைய விடுவிப்பு நிகழ்வதாக தெரியவருகிறது. இத்தகைய போர் நிறுத்த காலத்தில் காஸா மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் அனுப்பப்படும் எனவும் பெற்றோலியம் மற்றும் உணவுப் பொருட்களுடன் பாரஊர்திகள் காஸாவுக்குள் நுழைவதற்கு போர் நிறுத்த உடன்பாடு உறுதியளித்துள்ளதாகவும் தெரியவருகிறது. அதேநேரம் காயப்பட்ட பாலஸ்தீனர்களை சிகிச்சைக்காக எகிப்துக்குக் கொண்டு செல்வதும் உடன்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும் அதனை முழுமையாக துடைத்தழிக்கும் வரை போர் நிறுத்தப்படாது எனவும் தெரிவித்த இஸ்ரேல் அரசாங்கம், தற்போது ஏன் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு செல்லவேண்டியிருந்தது என்பது அடிப்படையான கேள்வியாகும். அது மட்டுமன்றி தற்போதைய மனிதாபிமான நடவடிக்கை பதினையாயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்படும் வரை ஏன் மேற்கொள்ளப்படவில்லை? ஏன் உலகத்திற்கு இவ்வாறான போர்நிறுத்தத்தை ஏற்படுத்த முடியவில்லை? என்பது மட்டுமல்ல, பணயக்கைதிகளை மீட்கும்வரை போர் என்று தெரிவித்த இஸ்ரேல், காஸா முழுவதும் துடைத்தழிக்கப்படும்போது ஏன் தனது பிரஜைகள் மீது கவனம் கொள்ளவில்லை என்ற அடிப்படைச் சந்தேகங்கள் தவிர்க்க முடியாதவை. இதற்கான பதிலை விரிவாக தேடவேண்டிய நிலை உள்ளது.
ஓன்று, இது ஒரு போரியல் இராஜதந்திரமாகவே தெரிகிறது. போர் நிறுத்தம் என்பது இரு தரப்புக்கும் தேவையான ஒரு விடயமாகவே அமைவதுண்டு. உலகளாவிய ரீதியில் மட்டுமல்ல இஸ்ரேல் மேற்கொண்ட அனைத்து போர்களிலும் உடன்பாடுகள் போரை மேற்கொள்வதற்கான தயாரிப்புக் காலமாகவே அமைந்துள்ளது. அராபிய நாடுகள் எப்போது ஒரு பலவீனத்தை கொண்டிருப்பார்கள் என்றும் அதனை கண்டறிவதற்கான காலமாக போர் நிறுத்த காலத்தை இஸ்ரேல் பயன்படுத்தியிருக்கிறது. அதே நடைமுறையை நோக்கி ஹமாஸும் பயணிப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் இந்தப் போரில் ஹமாஸ், இஸ்ரேலுடன் ஒப்பிடும் போது அதிக சாதகமான சூழலை கொண்டுள்ளது. வெளிப்படையாகப் பார்த்தால் இஸ்ரேலுக்கு ஹமாஸ் நெருக்கடியை கொடுத்துள்ளதுடன் மணித்தியாலத்திற்கு ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரர் அடக்கம் செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது. அதனை இராணுவ வீரர்களை அடக்கம் செய்யும் பணியாளர் ஒருவர் வெளிப்படுத்தியிருந்தார். இத்தகைய சூழலிலேயே போர் நிறுத்த உடன்பாடு இஸ்ரேலியர் பக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஹமாஸ் அமைப்பினைப் பொறுத்தவரை இஸ்ரேலுடனான போரை வெற்றிகரமான நடைமுறையாகக் கருதுகிறது. இதுவரை காலமும் இத்தனை நாட்கள் இஸ்ரேலுக்கும்-, பாலஸ்தீனர்களுக்கும் போர் நீடித்ததாக பதிவு இல்லை. அதனாலேயே இஸ்ரேலுக்கு பாரிய பின்னடைவென்ற விவாதம் நிகழ்கிறது. இஸ்ரேல் இராணுவ ரீதியில் ஆயுததளபாடங்களிலும் போர்க் களத்திலும் வலிமையானது என்பது தெரிந்த விடயம். ஆனால் ஆளணி குறைந்த நாடு. போர் நீடித்தால் தனது இராணுவத்தைக் கொண்டு போரை எதிர்கொள்ள முடியாது திணறடிக்கும் நிலை தவிர்க்க முடியாததாகும். இஸ்ரேலின் பிரதான இராணுவ வலிமை ஆயுததளபாடங்களுடன் அதன் புலனாய்விலேயே தங்கியிருந்தது. அதனை தற்போது இஸ்ரேல் இழந்துள்ளதாகவே தெரியவருகிறது. அதனால் இஸ்ரேலுக்கு இரு முக்கியமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதாவது புலனாய்வின் தோல்வி, மறுபக்கத்தில் ஆளணியற்ற நிலை படிப்படியாக நெருக்கடியை தந்துள்ளது. அதுமட்டுமன்றி கடந்த 49 நாட்களாக காஸா மீதான தாக்குதலில் பாரியளவான குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளன. கட்டடங்களை தகர்ப்பதற்கு பிரயோகப்படுத்திய ஆயுதங்களை அமெரிக்கா மற்றும் ஜேர்மனியிடமிருந்து இஸ்ரேல் தருவிப்பதில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தகைய போர்நிறுத்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு புதிய ஆயுதங்களை தயாரிக்கவும் பற்றாக்குறையை நிரப்பவும் இஸ்ரேல் முனைகிறது. போர் நிறுத்தங்கள் ஆயுததளபாடங்களை கொள்வனவு செய்யும் போருக்கான தயாரிப்புக் காலமாகவுமே உள்ளது. அதனையே இருதரப்பும் மேற்கொள்ள முனைவதாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் போர்நிறுத்த நகர்வை முன்வைத்த கட்டார், போர்நிறுத்தம் நீடிப்பதற்கான வாய்புக்களே அதிகமுண்டு எனக் கூறுகிறது. காரணம் இஸ்ரேலியர்கள் போரை கைவிடுமாறு கோருவதற்கு அப்பால் 49 நாள் போர் யூதர்கள் மத்தியில் அதிக இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அதனால் போரை நிறுத்தி அடுத்த போருக்கான துல்லியமான தயாரிப்பை எட்ட முனைவார்கள் என விவாதிக்கின்றது. ஆனால் யூதத் தீவிர அணுகுமுறையை கொண்டுள்ள தரப்புகள் போரை நீடிக்குமாறும் ஹமாஸ் அமைப்பினை முழுமையாக அழிக்குமாறும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்துவருகின்றனர். அதேநேரம் இஸ்ரேலிய பிரதமர் பதவியை விட்டு விலகுமாறு நிர்ப்பந்திக்கும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இரண்டு, ஹமாஸ் தரப்பைப் பொறுத்தவரை தமது மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த யூதர்களை பயன்படுத்துவதென்ற தெளிவான இலக்குடனேயே போரை ஆரம்பித்திருந்தது. அது தற்போது ஹமாஸ் அமைப்புக்கு கைகொடுத்துள்ளது. இதில் ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனர்கள் மத்தியிலும் அராபியர்கள் மத்தியிலும் வளர்ந்து இஸ்லாமிய அமைப்புக்கள் பல அத்தகைய கைதுகளை மேற்கொண்டு பணயக் கைதிகளாக யூதர்களை வைத்துள்ளது. அதனால் இஸ்ரேலிய அரசாங்கம் யூதர்களை பாதுகாப்பதென்பது பாலஸ்தீனர்களோடு சுமூகமான உறவைக் கொள்ளும் வரை கடினமானதென்ற செய்தியைத் தந்துள்ளது. ஹமாஸ் தரப்பினைப் பொறுத்தவரை பயங்கரவாத அமைப்பு என்பதற்கு அப்பால், வலுவான இராணுவ தந்திரத்தை கொண்ட அமைப்பென்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது பாலஸ்தீனர்களுக்கு வலுவான நம்பிக்கையையும் பலத்தையும் கொடுத்துள்ளதாகவே தெரிகிறது. போர்நிறுத்தம் பாலஸ்தீன மக்களுக்கு ஒரு மாற்றத்தை தந்துள்ளது. காஸாவை நோக்கி நகரும் மக்களது ஆவலும் எண்ணமும் நிரந்தரமான போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதாகவே உள்ளது. அது மட்டுமல்லாது இத்தனை இடிபாடுகளுக்கு பின்னரும் அந்த மக்கள் நம்பிக்கையுடன் காஸாவை நோக்கி பயணிக்கிறார்கள். இது ஹமாஸ் அமைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவ ரீதியில் ஹமாஸின் ஆயுத தளபாடங்களுக்கான வாய்ப்புக்களும் ஆளணியை சரிசெய்வதற்கான சூழலையும் ஏற்படுத்த உதவக் கூடியது. போர்நிறுத்தத்தை இராணுவ ரீதியில் எதிர்கொள்வதென்பது ஹமாஸ் அமைப்பைப் பொறுத்தவரை இரண்டாவது பட்சமானதாகவே உள்ளது. முதலில் காஸா மக்களது உணவுத் தேவைகள் மற்றும் மருத்துவத் தேவைகளை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
காரணம் போரில் ஹமாஸ் இழப்புக்களை விட இஸ்ரேலிய இராணுவத்தின் இழப்புக்களே அதிகமானதாக உள்ளது. அதனால் போர்நிறுத்தம் இராணுவ ரீதியில் இஸ்ரேலுக்கு தேவைப்பட்டது போல் ஹமாஸுக்கு இல்லை என்றே தெரிகிறது. இதுவே இப்போரின் திருப்பமாகும்.
எனவே ஹமாஸ், -இஸ்ரேல் போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கு மீளவும் நெருக்கடியாக மாற வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஏனெனில் ஹமாஸ் பணயக்கைதிகளை முழுமையாக இஸ்ரேலிடம் ஒப்படைக்குமா என்ற சந்தேகம் அனைத்துத் தரப்பிடமும் உண்டு.
அது மட்டுமன்றி அதற்கான எத்தனத்தை ஹமாஸ் மீளவும் மேற்கொள்ளாது என்பதில் உறுதிமொழி வழங்க முடியாதுள்ளது. போர் நீடிக்குமாயின் அத்தகைய நிலையை ஹமாஸ் மீளவும் எத்தனிக்க வாய்ப்புள்ளது. அதேநேரம் ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்தல் என்பது இலகுவானதல்ல என்பதை இஸ்ரேலிய போர் உணர்த்தியுள்ளது. இஸ்ரேலியரது இராணுவ தந்திரேபாயம் மரபுவழி போரியல் படைகளுக்கு பொருத்தமானதாக அமைந்தாலும் ஹமாஸ் போன்ற கொரில்லா போர் உத்திக்கு முன்னால் சாத்தியமாகுமா என்பது சந்தேகமானதே. அதிலும் பதுங்குகுழிகளுக்குள் மறைந்திருந்து தாக்குதல் மேற்கொள்ளும் பிரிவுக்கு பொருத்தமானதாக அமையுமா என்பது சந்தேகமானதே. எனவே ஹமாஸ்- இஸ்ரேலியப் போர் ஒடுக்கப்பட்ட தேசியங்களுக்கும் போரியல் தந்திரோபாயத்துக்கும் புதிய வியாக்கியானங்களை ஏற்படுத்த வாய்ப்பினைக் கொண்டுள்ளது.