இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் நான்கு நாட்கள் யுத்தநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் இது நடைமுறையில் இருக்கிறது.
அமெரிக்கா, எகிப்து ஒத்துழைப்புடன் கட்டார் முன்னெடுத்துவந்த கடும் முயற்சியின் பயனாக இந்த யுத்தநிறுத்தத்திற்கு இருதரப்பினரும் இணக்கம் கண்டு செயற்படுத்தி வருகின்றனர்.
இந்த யுத்தநிறுத்தத்தை சவூதி, ஜோர்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகள் பெரிதும் வரவேற்றன. ஐ.நா மத்திய கிழக்கு அமைதி செயற்பாடுகளுக்கான விஷேட இணைப்பாளரும் இதனை வரவேற்றதோடு, ‘கைதிகள் விடுதலையுடன் முழு அளவில் யுத்தநிறுத்தம் நீடிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை இந்த யுத்தநிறுத்தத்திற்கு வழிவகுத்த கட்டார் நாட்டின் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, ‘இந்த ஒப்பந்தம் போர் மற்றும் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்’ என்றும் ‘ஒரு விரிவான மற்றும் நிலையான ஒப்பந்தத்தை உருவாக்கும் என்றும் ஒரு விரிவான, நியாயமான அமைதி செயல்முறைக்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும்’ என்றும் தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை விடுவிக்கவும் இஸ்ரேலுக்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவுமே காஸா மீது தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. இந்நிலையில் ஹமாஸ், தாம் பிடித்துள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கத் தயார். ஆனால் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பலஸ்தீன சிறைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றுள்ளது. எனினும் தண்ணீர், எரிபொருள், மருந்து பொருட்கள், உணவு என்பவற்றின் விநியோகத்தையும் தடுத்து நிறுத்தியபடி காஸாவை சுற்றி வளைத்து இஸ்ரேல் யுத்தத்தை முன்னெடுத்தது. இந்த யுத்தத்திற்காக நாளொன்றுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை இஸ்ரேல் செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
காஸா மீதான யுத்தத்தை உடனடியாக நிறுத்தி அமைதி வழிக்கு திரும்புமாறு மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமும் வேண்டுகோள் விடுத்தனர்.
இச்சூழலில், ஹமாஸ் இரு இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள் உட்பட நால்வரை ஒக்டோபர் 20 ஆம் திகதி மருத்துவக் காரணங்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக விடுவித்தது. அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான 85 வயது மதிக்கத்தக்க யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் என்ற இஸ்ரேலியப் பெண்மணி ஊடகங்களிடம் கூறுகையில், ‘பணயக்கைதிகளான நாம் சுரங்கப் பாதைகளுக்குள் கொண்டு செல்லப்பட்டோம். அங்கு எமக்கு சுத்தமான பகுதிகளில் தங்க வசதி அளிக்கப்பட்டதோடு படுத்துறங்கவும் மெத்தைகள் வழங்கப்பட்டன. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எனது ஆரோக்கிய நலன்களை கண்காணிக்க ஒரு மருத்துவர் வருவார். அதேநேரம் காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்ட போது காயமடைந்த எமது பணயக்கைதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுரங்கப்பாதையில் தங்கியிருந்தபோது, எமக்கு வெள்ளைப் பாலாடைக்கட்டி, வெள்ளரிகள் உணவாக வழங்கப்பட்டன. அதே உணவையே ஹமாஸ் அமைப்பினரும் சாப்பிட்டனர்’ என்றார்.
இந்நிலையில் 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. சபை காஸாவில் உடனடி மனிதாபிமான யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி 120 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானமொன்றை நிறைவேற்றியது. அதன் பின்னர் 15 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்ஸிலும் காஸாவில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்திய தீர்மானமும் நிறைவேறியது. இதேபோன்று மக்காவில் கூடிய 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகள் அமைப்பு, அரபு லீக் என்பனவும் கூட உடனடி யுத்த நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்தன. மலேசியா, இந்தோனேசியா, புரூணை ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து காஸா மீதான யுத்தத்தை நிறுத்தக் கோரி கூட்டறிக்கையும் விடுத்தன.
அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகளின் வலியுறுத்தல்களை இஸ்ரேல் பொருட்படுத்தாத நிலையில் சவூதி, ஜோர்தான், பலஸ்தீன், இந்தோனேசியா உள்ளிட்ட அரபு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவரும் காஸா மீதான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவென சீனா, ரஸ்யாவுக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளனர்.
இச்சூழலில் இவ்வாரத்தின் முற்பகுதியில் இஸ்ரேலியருக்கு சொந்தமான ‘கலக்ஷி லீடர்’ என்ற கப்பல் துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் காஸா மீதான யுத்தத்தை நிறுத்தக்கோரி 22 மாலுமிகள் உட்பட 52 பேருடன் ஹுதி கிளர்ச்சியாளர்கள் அக்கப்பலை யெமனுக்கு கடத்தி சென்றுள்ளனர். இக்கப்பலின் அதிக பங்குகளை வைத்திருப்பவர் இஸ்ரேலிய தொழிலதிபரான ஆப்ரகாம் அங்கர் என்பவராவர்.
இந்நிலையில் இஸ்ரேலிய கப்பல்கள் வழமையான கடல் போக்குவரத்து பயணத்தை மாற்றி 3500 கிலோ மீற்றர்கள் சுற்றிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
தற்போது நான்கு நாட்கள் யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ள போதிலும் கடந்த 47 நாட்களாக நீடித்த யுத்தத்தில் 14,854 மேற்பட்ட பலஸ்தீனர்கள் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 6150 மேற்பட்டவர்கள் சிறுவர்களாகவும் 4000 பேர் பெண்களாகவும் உள்ளனர். 6200 பேர் காணாமல் போயுள்ளனர். 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 1.5 மில்லியன் மக்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். 26 வைத்தியசாலைகள், 55 கிளினிக்குகள் தாக்குதல்கள் காரணமாக செயலிழந்துள்ளன என்று காஸா சுகாதார அமைச்சு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் காஸா நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்த யுத்தத்தில், 2 இலட்சத்து 30 ஆயிரம் வீடுகள் குண்டு வீச்சுக்கு இலக்காகி மக்கள் வசிக்க முடியாதபடி சேதமடைந்துள்ளன. 44 ஆயிரம் வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. காஸாவிலுள்ள மொத்த வீடுகளில் 60 வீதமானவை தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த ஐக்கிய நாடுகள் சபை நடாத்தும் அகதி முகாம்களில் சுமார் 9 இலட்சம் பேர் தங்கியுள்ளனர். அம்முகாம்களும் தாக்கப்பட்டுள்ளதோடு 176 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 778 பேர் காயமடைந்துள்ளனர். 108 ஜ.நா. பணியாளர்களும் 53 ஊடகவியலாளர்களும் கூட இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
இருந்தும் கூட ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை இஸ்ரேலால் மீட்கக் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த யுத்த நிறுத்தத்தின் ஊடாக ஹமாஸ் பிடித்துள்ள 50 இஸ்ரேல் பணயக் கைதிகளையும் இஸ்ரேல் சிறையிலுள்ள 150 பலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் மனிதாபிமான உதவி, அத்தியாவசிய மருந்துப்பொருட்கள், எரிபொருள் என்பன காஸாவுக்குள் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
‘இந்த யுத்த நிறுத்த காலத்தில் இஸ்ரேல் யுத்தத்தை முன்னெடுக்காது, எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள், தெற்கு காஸா வான்பரப்பில் விமானங்கள் முற்றாக பறக்க தடையிருக்கும். வடக்கு காஸாவில் ஒவ்வொரு நாட்களும் 6 மணித்தியாலயங்கள் நடைமுறையில் இருக்கும்’ என்று ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் விடுவிக்க உள்ள 300 பேரின் பெயர்ப்பட்டியலை கடந்த வியாழனன்று வெளியிட்டிருந்தது. என்றாலும் இந்த யுத்த நிறுத்தம் இன்றைய தினத்திற்கு பின்னரும் நீடிக்க வேண்டும் என்பது தான் அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
மர்லின் மரிக்கார்