2024 ஆம் நிதியாண்டுக்குரிய வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டு 45 வாக்குகளால் வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் இது என்பதுடன், கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி இதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
13ஆம் திகதி முதல் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 7 நாட்கள் விவாதித்து இரண்டாவது மதிப்பீட்டுக்குப் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆளும் பொதுஜன பெரமுன, எதிர்க்கட்சித் தரப்பில் உள்ள சுயாதீன உறுப்பினர்கள் சிலர் மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள அரசுக்கு ஆதரவான சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எதிர்க்கட்சிகள் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுயாதீனக் குழுவினர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர், எதிர்க்கட்சியில் உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்திருந்தனர்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்கொண்டிருந்த பாரிய நெருக்கடிகளிலிருந்து இலங்கையை மீட்டு ஓரளவுக்கு சுமுகநிலையை ஏற்படுத்திய பின்னர், பொருளாதாரத்தை மேலும் சரிசெய்யும் நோக்கத்துடன் இந்த வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்திருக்கும் கடன்வசதியின் இரண்டாவது தவணையைப் பெறுவதற்கான இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் சூழ்நிலையில். நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பல எதிர்பார்க்கப்படுகின்றன.
சட்டரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள், கொள்கை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள் மற்றும் நடைமுறை ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள் எனப் பல்வேறு திருத்தங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டம் இது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
சாதாரண சூழ்நிலையில் வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு மானியங்கள் எதிர்பார்க்கப்பட்டாலும், நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில் மானியங்களுக்கான நடைமுறைச் சாத்தியம் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
இருந்தபோதும், சவால்களுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10,000 ரூபாவினாலும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2,500 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளது. இருந்தபோதும், இதனைவிட அதிகரித்த தொகையை முன்வைத்து தொழிற்சங்கங்கள் போராட்டங்களுக்கான ஆயத்தங்களுக்கும் சிலர் தயாராகின்றன.
அவர்கள் கோரும் 20,000 ரூபா அதிகரிப்பு என்பது தற்போதைய நாட்டு நிலைமைக்கு நடைமுறைச்சாத்தியமற்றது என்பதும் தெளிவாகிறது. அரசாங்க ஊழியர்கள் மாத்திரமன்றி, தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்குமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். இது மாத்திரமன்றி, சமூகத்தில் பல்வேறு மட்டத்தில் உள்ள தரப்பினர் பற்றியும் இந்த வரவுசெலவுத் திட்டம் கவனம் செலுத்தியிருப்பது குறித்து பாராளுமன்றத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக தோட்டக் காணிகளின் உரிமையை தோட்டத் தொழிலாளர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். அவர்கள் இந்த நாட்டிற்கு வந்து 200 வருடங்கள் கடந்த பின்னரும் தமக்குச் சொந்தம் என்று சொல்லக் கூடிய நிலம் இன்றி ஆக்கிரமிப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மலையகத்தில் சமூக அபிவிருத்திக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை சாதகமான அபிவிருத்தியாகப் பார்க்கப்படுகிறது.
மக்களின் நிதிச் சுமைகளை குறைக்கும் மற்றைய நடவடிக்கைகளும் இதில் காணப்படுகின்றன. அரசாங்கத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் 50,000 நகர்ப்புற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகைக் கட்டணம் வசூலிப்பதை விடுத்து, அவர்களுக்கு வீடுகளுக்கான உரிமையை ஒப்படைப்பதற்கும் வரவுசெலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமையில் நகர்ப்புறத்தில் உள்ள குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு இது பாரியதொரு சலுகையாகும். சிரேஷ்ட பிரஜைகளுக்காக மாதாந்தம் வழங்கப்படும் உதவித்தொகை, கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்தக் கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்கும் அரசாங்கம் ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளது.
இவற்றுக்கும் அப்பால் தொலைநோக்கு சிந்தனையுடன் நீண்டகால யோசனைகளுக்கும் ஜனாதிபதி முன்னுரிமை அளித்துள்ளார். குறிப்பாக இலங்கையின் உயர்கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான முன்மொழிவு இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கல்வித்துறையை மறுசீரமைக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருப்பது இதன் ஊடாகத் தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதி வழங்கிய வழிகாட்டலுக்கு அமைய கல்வி மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கொண்டுள்ளார். இதற்கான வரைபு தயாரிக்கப்பட்டு பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது தற்பொழுது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
மறுபக்கத்தில் நாட்டின் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற விசேட குழு நியமிக்கப்பட்டு இதன் அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளுக்கு வலுவூட்டும் வகையில் வரவுசெலவுத் திட்டத்தில் புதிய பல்கலைக்கழகத்துக்கான யோசனை அமைந்துள்ளது.
குறுகியகால மற்றும் நீண்டகால யோசனைகளை உள்ளடக்கியதாக வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தாலும் இது தேர்தலை இலக்காகக் கொண்ட வரவுசெலவுத் திட்டம் என்ற விமர்சனம் எதிர்த்தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், “தேர்தலை இலக்குவைத்து இந்த வரவுசெலவுத் திட்டத்தை நாம் தாக்கல் செய்யவில்லை, நாட்டின் எதிர்காலத்தையும் மக்களையும் நோக்காகக் கொண்டே இதனைத் தாக்கல் செய்துள்ளோம்” என்று ஜனாதிபதி தனது உரையில் கூறியிருந்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘சிலர் இந்த வரவுசெலவுத் திட்டத்தை தேர்தல் வரவுசெலவுத் திட்டம் என்கிறார்கள். அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் இவ்வாறு அழைக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முடிவில்லாத சலுகைகளையும் சம்பள அதிகரிப்பையும் வழங்குவதே அத்தகைய தேர்தல் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. சுதந்திரம் அடைந்த பின்னரும் 75 வருடங்களில் பலமுறை அதுதான் நடந்தது. ஆனால் இந்த வரவு செலவுத் திட்டம் வித்தியாசமானது. இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வரவுசெலவுத் திட்டமாகும். தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப ஒரு புதிய பொருளாதார அமைப்பின் அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே எனக்கு முக்கியம். இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் வெற்றிக்காகத் தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டமாகும். பௌத்த பொருளாதார தத்துவத்தின்படி தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம். சமநிலைவாழ்வு என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், நாட்டுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும் பல முன்மொழிவுகள் இந்த வரவுசெலவுத் திட்ட ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன”என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்தை ஆமோதிக்கும் வகையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாகவே வரவுசெலவுத் திட்டத்தை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடிந்துள்ளது. அது மாத்திரமன்றி அரசாங்கம் தொடர்ந்தும் பலமான நிலையில் உள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.