வரித்திட வென விரும்பி
வந்துனைப் பார்ப்போர்
சிரித்த முகச் சீதேவியெனச்
சிறப்புறப் புகல்வார்.
பொன் பூத்த கொடியாய் நீ
பூரித்திருந்தாலும்
புன்னகை யின்றேல் – உன்
பொன்னகையால்
என்ன பயன்.
அலரியின் மலரே – உன்
அழகு முகம் பார்த்து
மலரம்பை வீசுகிறேன்
முகமலர்ந்து ஏற்று விடு.
பல்லெழில் காட்டிச் செம்
பவள இதழ் விரித்து
அல்லி மலர்ந்தது போல்
அழகு நகை புரிந்திடு.
‘அப்பிள்’ இரண்டு – உன்
அழகு தளிர்க் கன்னத்தில்
கொப்பளிக்கக்
கோமளமே!
குறு நகை நீ
புரிந்திடு.
மச்சு மனை வேண்டேன்
மற்றெதுவும்
நான் வேண்டேன்.
அச்சாரமாய்
வேண்டுவது – உன்
அல்லி மலர்ப் புன்னகையே!
அருட்கொடையாய்
உனக்கந்த
ஆண்டவன் தந்ததது,
பொருட்
செலவேதுமில்லை – ஒரு
புன்னகை புரிந்திடு.